Tuesday 29 December 2015

நான் தான்...இது நான் தான்

இதுவரை நான் படித்த பள்ளிகளில் எல்லா விழாக்களும் நடக்கும். எல்லா விழாக்களிலும் என் பங்களிப்பு இருக்கும்..

எப்படி?

என் வெள்ளை நிறம், அல்லது புற அழகு மட்டுமே எடை பார்க்கப் பட்டு அலங்கார பதுமை போல், நிகழ்வுகளில் கலந்து கொள்ள வரும் பெரிய முக்கியப் புள்ளிகளுக்கு பள்ளி முதல் வர் அல்லது தாளாளர் கொடுக்க வேண்டிய நினைவுப் பரிசுகள், மாணவர்களுகான பரிசுகளை மேடைக்கு அழகான ஒரு டிரேயில் வைத்து எடுத்துச் செல்வேன்..

அல்லது வரவேற்பு கொடுக்க ஒரு பூச்செண்டுடன் நிற்க வைக்கப்படுவேன்`

சில ஆண்டுகளில் நான் இந்த ஆண்டு விழாக்களையும் என் பதுமை வேஷத்தையும் புறக்கணிக்க ஆரம்பித்தேன்.

இந்தப் பள்ளிக்கு வந்தபின் முதலில் ஒரு பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டேன்..பேச்சுக்கான கருத்துக்களை நானே தான் தயாரித்தேன்.கொஞ்சம் சின்னப்பிள்ளைத்தனமாக இருந்தாலும் என் உழைப்பாக இருக்க வேண்டும் என்றே விரும்பினேன்(.அம்மா தலைப்பு கேட்ட உடன் எழுதித்தந்ததை இன்னும் நான் பார்க்கவில்லை.)அதில் முதல் சுற்றில் தேர்வு பெற்றேன். இரண்டாம் சுற்றில் பசி மயக்கத்தால் இழந்தேன்..( உண்மைக்காரணம் அது தான். என் கருத்துக்கள் பெரியவர்கள் எழுதித் தந்து மனப்பாடம் செய்யப் பட்டு வந்ததை விட நன்றாக இருந்ததாக அம்மாவிடமே அந்த நிகழ்ச்சியின் அமைப்பாளர் தெரிவித்தார்.)

அதன் பின் என் தமிழ் இவர்களுக்குப் பிடித்துப் போக பேச்சுப் போட்டி அல்லது பேச்சு என்றாலே கூப்பிடு ராகசூர்யாவை என்ற அளவுக்கு உடனடியாக தயாரிக்க ஆரம்பித்தேன். (அப்துல் கலாம் அய்யாவிற்கு நினைவஞ்சலி கூட்டத்தில் உடனடியாக தயாரித்துப் பேசியது தான் எனக்கு நானே கொடுத்துக் கொண்ட பாராட்டு. அதில் நான் தேர்வாகவில்லை என்றாலும் அது உடனடியாக ( காலை 10 க்கு சொல்லப்பட்டு 11 மணிக்கு மேடையில் நிறுத்தப்பட்டேன்)

 என் கருத்துக்கள் நன்று என்றாலும் நயம், அன்றைக்கு கலந்து கொண்டோர்களோடு ஒப்பிடும் போது நான் சுமார்தான் என்றாலும் எல்லோருக்கும் தயாரித்தது தாத்தா, அப்பா, அம்மா, என்று பல பெரியவர்கள். ( முதல் நாளே தெரிவித்திருந்தும் நான் கலந்து கொள்ள வேண்டாம் என்று நினைக்க என் வகுப்பு ஆசிரியரின் கட்டாயத்தால் கலந்து கொண்டேன்.)

என் திறமைக்காக நான் மேடை ஏற வேண்டும் என்று நினைத்தது நடந்திருக்கிறது..

என் பள்ளியின்( SPORTS DAY ) விளையாட்டு தினத்தில், பிரம்மபுத்திரா அணியின் நிகழ்ச்சி தொகுப்பு நான் தான். இப்போதும் எனக்கு கருப்பு நிறச் சுடிதார் கொஞ்சம் கிராண்டாக அணிந்து வரச் சொல்லப்பட்டது என்றாலும், இப்போது பிடித்து அதனைச் செய்தேன்..


( முன்பொரு முறை நான் கருப்பு நிற ஆடை அணிந்த போது  கீழே விழுந்து ரத்த காயம் ஏற்பட்டு விட , அதன் பின் கருப்பு நிறம் என்றாலே அம்மா அலறி அடித்து எனக்கு வாங்கவே கூடாது என்று சொல்லி விட, அந்தத் தடையும் அகன்றது, இந்தத் திருநாளில்..)

அந்த விளையாட்டுத் திடல் எங்கும் என் குரல்

அங்கு வந்திருந்த அனைவரின் காதிலும் என் குரல்..அழகிய தமிழில்..

பேச்சாளராக மட்டும் இல்லை. நான் என் எழுத்தாலும் ஒரு நிகழ்வை எடுத்துச் சொல்லும் முறையிலும் வெற்றி பெற முடியும் என்றும் உணர்ந்த தருணம் இது...

முயற்சிகள் பலிக்க வேண்டும் என்பதை விட என் முடிவுகளில் நானாகவே செயல்பட வேண்டும் என்று விரும்புகிறேன்..அவ்வாறே நடக்க உங்கள் வாழ்த்தையும் ஆசியையும் தாங்களேன்.( மற்றதை நானே பார்த்துக் கொள்கிறேன்.)
****************************************************************************


இங்கு நான் சக்தியின் தங்கை இல்லை..

எந்தத் தோழியும் என்னை நீ சக்தி தங்கையா எனக் கேட்பதில்லை.

நீ கவிஞர் சுவாதி பொண்ணா?? என்று எந்த ஆசிரியரும் கேட்கவில்லை.

எனவே இந்தப் புகழ் எல்லாம் என் முயற்சியினால் மட்டுமே விளைந்தது..எல்லாப் புகழும் சூர்யாவுக்கே...சரி..சரி இறைவனுக்கே)

இவர்கள் எனக்கு அன்பானவர்களாக இருக்கலாம்.என் வாழ்வின் அங்கமானவர்களாக இருக்கலாம்.

.ஆனால் எனது அடையாளமே இவர்களாக இருக்கக்கூடாது..அப்படித்தானே????

இங்கு என் சுயம் வெளிப்பட்டிருக்கிறது. நான் நானாக பாவிக்கப் பட்டிருக்கிறேன்,
முற்றிலும் இந்த வாய்ப்பு என் கனிவான தமிழ் உச்சரிப்பாலும், கம்பீரமான பேச்சாலும், தெளிவான நடையாலும் கிடைத்தது.( இவ்வள்வும் இருக்கான்னு நீங்க கேட்கிறது புரியுது.  ஏதோ பச்சப்புள்ள சொல்லிட்டுப் போறேனே..)


(முத்துநிலவன் அங்கிள் மன்னிக்க)
**************************************************************************


எனக்குள் நான். ஒரு தத்துவம்...( இது தான் இன்றையத் தத்துவம்)
***********************************************************************

Friday 25 December 2015

சக்தி என்ற சகாயம் ஐ.ஏ.எஸ்

எல்லோருக்கும் அக்கா, அண்ணா, எப்படி இருப்பாங்க என்ன மாதிரி நடந்துக்குவாங்கன்னு தெரியலை..

அடுத்த பதிவும் அவளைப்பற்றியது தான் என்பதால் இதஅவளைப்பற்றி...ஒரு சில வார்த்தைகளில்...

எனக்கு இவள் தான் இரண்டாம் தாய் என்றால், அது அப்படியே உண்மை. பள்ளியில் உணவு இடைவேளையில் வந்து பார்ப்பாள்.

என் ஆடைகளுக்கு பொருத்தமாக இவள் தான் அணிகலன்கள் தேர்ந்தெடுப்பாள்.  

காய்ச்சல் வந்தால் பெரும்பான்மையான நேரங்களில் மாத்திரை கொடுப்பதும் இவளே

பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களுக்கு இவள் தான் எனக்கு டியூஷன் டீச்சர்.

பள்ளியில் இவள் தங்கை என்றே நான் அடையாளப்படுத்தப்படுவேன்.(.இவள் மாணவர்கள் தலைவர்)  எங்கள் ஃபாதருக்கு(பள்ளி முதல்வர்)  மிகவும் பிடித்தமான மாணவி.

வகுப்பு ஆசிரியர்கள் எல்லாம் இவள் புகழ் பாடுவதில் வல்லவர்கள்..(எல்லோருக்கும் சாக்லேட் வாங்கிக் கொடுத்து கரெக்ட் பண்ணியிருப்பாளோ என்ற சந்தேகம் இன்னும் உண்டு.)

இவள் தங்கை எனப்பட்டதால் அவளைப் போலவே நானும் நிறைய மதிப்பெண்கள் வாங்குவேன் என்று, சேட்டையே செய்யமாட்டேன் என்றும், பாடத்தில் கருமமே கண்ணாயிருப்பேன் என்றும் அவர்களாகவே கணக்குப் போட்டுக் கொண்டார்கள். பாவம்.  ( இந்த டார்ச்சர் தாங்க முடியாமல் படித்து, அப்புறம் நல்ல பிள்ளை போல நடித்து...அடடா..)( நல்ல பெயர் வாங்கிட்டோம்ல)                                                                                                                                                    

* காய்ச்சல் வந்தால் அம்மா கஷாயம் போட்டுத் தந்தால் , அம்மா சொல்படி கேட்டு அப்படியே அந்தக் கண்றாவியை..அய்யோ டங்கு சிலிப் ஆய்டுச்சு..அந்த கஷாயத்தைக் குடிப்பவள்

* இத்தனைக்கு மணிக்குத் தூங்கு என்று அம்மா சொல்லிப் போனால் அந்தக் கடிகாரத்தின் முள் கூட சற்று மாறுபடும். இவள் வாக்குத் தவறாதவள்..அந்த அளவுக்கு நாணயஸ்த்தி.

*அதே போல் பல் விளக்கி விட்டே காப்பி குடிக்கும் பழக்கத்தையும், குளித்து விட்டே சாப்பிடும் பழக்கத்தையும் அநியாயமாய் கடைபிடிப்பவள்.( நாமும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் வாதிடுபவள்..)



*சரியான அம்மாகோண்டு...அப்பாவே தப்பித் தவறி ஹோட்டலுக்குக் கூட்டிப் போனாலும், டிஃபன் ஆர்டர் கொடுக்கச் சொன்னால், ஏதாவது கோபி மஞ்சூரியன், கைமா புரோட்டோ என்று அவள் நாக்கு கேட்டாலும் அம்மாவைத் தான் பார்ப்பாள்..( நான் இது போன்ற சமயங்களில் அம்மா முகத்தைப் பார்ப்பதையே தவிர்த்து விடுவேன்) ( அவளுக்கு அப்படி ஒரு பயம் என்றால் எனக்கு இப்படி ஒரு பயம்..இதுவும் பயம் வகையில சேத்துக்கலாம் தப்பில்லை..
இதனை இத்தோடு விட்டு விடுகிறேன்..

ஒருநாள் ஏதோ ஒரு வகையில் ஒரு வாக்கு வாதம் ஏற்பட, வகையாக அவளிடம் மாட்டிக் கொண்டேன்..

தொல் பொருள் ஆய்வாளர்கள் அவள் தலைமையின் கீழ் இயங்கினால் மிகச் சரியாகவும் , நேர்த்தியாகவும் , செயல்படலாம் என்ற அளவுக்கு, நான் முன்னால் செய்த தப்பு, அதற்கு முன்னால் செய்தது என்று அனைத்தையும் சொல்லுவாள்..(இவளை விட்டால் நான் அம்மாவுக்குள் இருக்கும் போது ஏதாவது செய்திருந்தால் அதனையும் கூடச் சொல்லக்கூடும்)

நான் என்ன செய்திருப்பேன்..தேர்வு நேரங்களில் கதை புத்தகங்கள் படித்திருப்பேன். கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவேன்..

அம்மாவிடம் எளிதாக சாதித்து விடலாம் என்றால், இவளிடம் அனுமதி வாங்குவதற்குள் எனக்கு நாலு டின் ஹார்லிக்ஸ் குடிக்க வேண்டும்..(ஆனால் அம்மா எப்பவும் சக்தியிடம் ஒரு வார்த்தை சொல்லிட்டு செய் நு சொல்லும் போது, அய்யய்யோ...அவள் எல்லாத்தையும் துருவி துருவி கேட்பாளே..ஆனா பாருங்க..அவ படிக்கும் போது எந்த விஷயம் கேட்டாலும் ஓகே ஆயிடும்..ஏன்னா மேடம் படிப்புல சின்சியர்..அதனால அந்த நேரத்தை வீணாக்க மாட்டாங்க...நான் பல நாளா இப்படித்தான் அவளைக் கரெக்ட் பண்ணி..கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுறது. மாடில உலவுறது,கதை புத்தகம் படிக்கிறது இப்படி பற்பல விஷயங்கள் செய்துகிட்டு இருக்கேன்..) ( இதைப்படிப்பவர்கள் இந்த உண்மையை அவளிடம் சொல்லிவிட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்..)

ஆனால் இவள் அதைக் கூட அம்மாவிடம் அனுமதி கேட்டு அங்கிருந்து ஒப்புதல் வந்த பிறகே செய்யும் பழக்கம் கொண்டவள்.அதுவும் இல்லாமல் தேர்வு நேரத்தில் பாடத்தைத் தவிர ஒன்றும் படிக்க மாட்டாள்...அவள் வகுப்பில் இவள் ஒரு மார்க் குறைந்தால் கூட குய்யோ முறையோ என்று நான் எப்படி? எப்படீ இப்படி ஆச்சு என்று 98 மார்க் வாங்கும் போதும் புலம்புவாள்..

இன்று கல்லூரி வைத்த தேர்வில்(கல்லூரி அளவில்) முதல் மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறாள். இவள் ஆசை , லட்சியம், எல்லாம் ஒரு பெரிய ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்பது தான். நிச்சயம் ஆவாள். அவள் ஆசையில் எனக்கும் பங்கு உண்டு.

அவளை வாழ்த்தவே இந்தப்பதிவு. காய்ச்சலோடும் கவனமாக படிக்கும் அவளை வாழ்த்துங்களேன்..

Monday 14 December 2015

மீண்டும் மீண்டும் பள்ளி...மீண்ட பள்ளி..

இன்று முதல் பள்ளி மீண்டும் துவங்கியது..

நேற்று முதல் தூக்கம் பிடிக்கவில்லை..அது வேதனையா? மகிழ்வா? ஏதும் தெரியலை..ஆனால் ஏதோ மாதிரி..

வாசலில் நின்ற வாச்மென்..போங்க, போங்க,,,எல்லோருக்கும் சாக்லேட் இருக்கு என்றார்..

(அய் மழை பெஞ்சு திரும்பி பள்ளிக்கூடம் வந்தா இந்த ஊர் ஸ்கூல்ல சாக்லேட் தருவாங்களா??நல்ல ஸ்கூலா இருக்கேனு நம்பி.. போனேன்)

இன்று வெள்ளை நிற சீருடை என்பதால், எல்லோருமே புதியதாய் போட்டு வந்திருந்தோம்..( அழுக்காக்கிட்டு வந்து,  கிழிச்சிட்டு வந்து ,புதுசா ஒரு யூனிபார்ம் எடுத்துக் கொடுங்கனு சொன்னா, என்ன சொல்லியிருப்பாங்க இந்தப் பெற்றோர்கள்???இன்னும் ஒரு மாதம் தானே? அவ்வளவு சாக்கு சொல்லி வாங்கித் தராம இருக்க ஆயிரம் பொய் சொல்வாங்க...இப்ப கடவுளே வாங்க வச்சிட்டார்...)

போன உடன் கணக்கெடுப்பு நடந்தது அலுவலகம் வழியாகவும், எங்கள் தோழிகள் மூலமாகவும், யாருக்கெல்லாம் புத்தகங்கள் இல்லை. நிர்வாகமே புத்தகம் தரப்போறாங்களாம்..

இவ்வளவு ரண களத்திலேயும் பாட்னி மிஸ் கேட்டாங்க பாருங்க ஒரு கேள்வி..எல்லாரும் ரெக்கார்ட் நோட்டு முடிச்சிட்டீங்களா   ன்னு???

கீழே பள்ளியின் அலுவலக அறையெல்லாம் போச்சாம்..பல பதிவேடுகள்..இனி கணினி வாங்கி அவ்வளவும் ஏற்றப்படவேண்டும் என்று பேசிக்கொண்டார்கள்``

என் வகுப்பறைகளில் எல்லாம் சில மீன்கள் பூச்சிகள், என்று ஏதேதோ..

முதல் தளம் வரை இருந்த பெஞ்ச் எல்லாமே துருப்பிடித்து, அலங்கோலமாகக் கிடந்தது..

இயற்பியல், வேதியல், ரெக்கார்ட் நோட் வைக்காதவர்கள் கூட ஏற்கனவே வைத்து விட்டதாகப் பீற்றிக் கொண்டார்கள்..( கொண்டாடுங்க,,,இது உங்கள் சாய்ஸ்))

மதியம் வரைக்கும் சாக்லேட் வரவே இல்லை..

ஒருவேளை சிறு வகுப்புகளுக்கு மட்டும் கொடுத்துட்டு போய்ட்டாங்களோ???

பேரிடர் மேலாண்மை பற்றி யும் அதனை சமாளிக்கும் முறை பற்றியும்  கூட்டத்தில் பேசிக்கொண்டே இருந்தார்கள்..

எது வந்தாலும் அழக்கூடாது.என்றார்கள் ((அழுதுகொண்டே))((இவர்களிடம் நான் அழுகிறேன்னு சொன்னேனா??சொன்னேனா??))

சாக்லேட்டக் கொடுங்கப்பா...

பேரிடர் மேலாண்மை பற்றி கற்க வேண்டுமென்றால் எங்க அம்மா சாப்பாட்டை ஒரு நாள் சாப்பிட்டாப் போதும் தைரியம் தன்னால வரப்போகுது..இதுக்கு எதுக்கு மீட்டிங்..?( ஓகேயா டாடி??)
(லூசு மேன்ஸ்...சாக்லேட்டத் தாங்கப்பா))

(இது அம்மாவுக்கு...உங்க அன்பான, ருசியான (!!!!!!!????????) சாப்பாட்டைச் சாப்பிட்டால் தெம்பு வரும் நு மட்டும் தான் சொன்னேன் மா...(கில்லர்ஜி அங்கிள் நடுவில் வந்து ஏதும் சொல்லாமல் இருப்பாராக))

கொஞ்சம் கொஞ்சமாய் கேள்விப்பட்டோம்..வீடு இல்லாமல் போன, உறவினர்கள் இல்லாமல் போன, என்று மழை அடித்துச் சென்ற அனைத்தையும் பற்றி சொல்லிக் கொண்டே இருந்தார்கள்..

நான் மட்டுமெ கொஞ்சம் ஜாலியாக திரில்லிங்காக தப்பித்த கதை சொன்னேன்...(டேஸ்ட்டுக்காக கொஞ்சம் பொய் மிக்ஸிங்))(உண்மை சொன்ன அழுவாச்சியா இருப்பாங்க..சீச்சீ அது நமக்குப் பிடிக்காத ,ஒவ்வாமை ஆகும் பொருள்...)

ஆயாம்மாக்கள் இன்று முழுவதும் துப்புரவுப் பணிகளில்

அதனால், பல வகுப்புகளும் ஒன்றாய்க் கலந்து...பாடமில்லாமல் ஒருநாள்..

(கடைசி வரைக்கும் சாக்லேட் தரலை...)(எங்களுக்கு கொடுக்கிறதாச் சொல்லி ஆட்டைய போட்டாங்க...) ( இப்படி பச்சைப் புள்ளைகள்ட்டருந்து பறிச்சி  தின்னுட்டீங்களே...)))

ஓகே..ஆல் சித்தப்பாஸ்,,,மாமாஸ்,,,அத்தைஸ்,,பெரியப்ஸ்...சித்திஸ்....போய்ட்டு வரேன்...

வாங்க எங்க வீட்டுக்கு...

மழைக்குப் பின்னான வீடு...HOW IS IT??? பாக்கலாம்..
************************************************

இது கட்டுரைங்க...இன்னைக்கு தத்துவம் தீர்ந்து போச்சு...இன்னொரு நாள் சொல்றேன்...சரியா...
****************************************************************

Saturday 12 December 2015

...மாறுவோம்...மாத்துவோம்

ஒன்றுமே இல்லாத வீட்டில் நான்கு சுவர்களுக்கு இடையில் அமர்ந்து இருக்கிறார்கள். என் வயது பிள்ளைகள்..

யார் யாருக்கு யார் இல்லையோ இப்போதே கேட்க பயமாய் இருக்கிறது..

படிக்கபாடப் புத்தகங்கள் இல்லை என்பதைத் தவிர நடந்ததெல்லாம் இமாலய சோகங்கள்

உங்கள் டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா என்பது மாதிரியே கேள்விகள் தொடங்கிவிட்டன உன்னிடம் புத்தகங்கள் இருக்கா என்ற வினாக்கள்..

நாளை மறுநாள் தெரியும் இழந்த, இறப்பின் வலிகள்..என் காதுகள் எதையும் கேட்காமல் இருந்தால் தேவலாம். ஆனால் கேட்கும் திறன் அதிகம்``

மழை என்றால் ஒரு காப்பியோடு ஜன்னல் அருகே வேடிக்கை பார்த்துக் கொண்டே புத்தகங்கள் என்ற ஆசை ஆர்வம் எல்லாம் போய், ஒரு பேய் வந்த பயத்தை தந்தது என்னவோ?

ஒரு வாரம் ஒன்றுமே இல்லாத உலகத்தில் அதுவும் பட்டினியாய்..

அப்பா, அம்மா, அக்கா என்று எல்லோராலும் தேவதையாக தாங்கப் பட்ட நானா ? எனக்கா? அப்படியானால் என்னை விடவும் வசதியாய் இருந்த பிள்ளைகள் தாங்கியிருப்பார்களா?

மூன்று தலை முறையாய் நடந்த பிழைகள் மூன்று மாடி வரை வந்து தாக்கி விட்டுச் சென்றுவிட்டது..

தாத்தா அடிக்கடி சொல்வார்..”படிச்சவன் பாட்டைக் கெடுத்தான், எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான். உணர வைத்தது..பிரமாண்டமாக இருக்கும் சென்னை..பிரபலங்களைக் கொண்ட சென்னை..படித்தவர்கள் அதிகம் கொண்ட சென்னை...ஆனால் படித்தால் மட்டும் போதுமா? என்று நினைக்க வைத்து விட்டது..

இனி வரும் தொற்று வியாதி பற்றி தான் அதிகம் விழிப்புணர்வு கொள்ள வேண்டும்..

இன்னும் சாக்கடையும் மழைநீரும் அகற்றப்படாதது பற்றி யாரும் எதுவும் சொல்லாமலேயே பயணம் செய்து கொண்டே இருப்பதும் ஆச்சர்யமாக இருக்கிறது.



நாங்கள் பிள்ளைகள் பண்ணும் சேட்டைகளை விட எங்கள் அம்மா பண்ணும் சேட்டைகள் தாங்குவது தான் அதிகம்.ஆனால் கொஞ்சம் குறைந்தது மனதுக்கு நல்லாயில்லை.

அப்பா அருகில் இல்லை என்ற வருத்தம் கொஞ்ச நாளாய் நல்ல வேளை அந்த நேரத்தில் அப்பா இங்கே இல்லை என்றே நினைக்க வைத்திருக்கிறது.

இனி எல்லோருக்கும் ஏகப்பட்ட கடமைகள், பொறுப்புகள், வங்கி புத்தகம், கேஸ் இணைப்பு, புதிதாய் வீட்டுக்கு வேண்டிய பொருட்கள், ஆதார், வாகனங்கள் பழுது நீக்கம்( ஒரு வேளை இருந்தால்) அலைந்து கொண்டே இருக்க வேண்டும்..

மனதிடம் கொண்ட அம்மாக்கள், அப்பாக்கள் ஒன்றும் அலட்டவில்லை. அடுத்தடுத்த சம்பளத்தில் வாங்கிக் கொள்ளலாம்

ஆனால் ஏற்கனவே வாசம் “வீசும்” சென்னை இப்போது அதன் மடங்குகளில் வீசுது...

ஒரே ஒரு நன்மை நடந்திருக்கிறது இப்போது மக்கள் குப்பையை குப்பைத் தொட்டியில் போடுகிறார்கள். இதுவும் எவ்வளவு நாட்களுக்கோ????

சிரித்துக் கொண்டே இருக்கும் அம்மா, படித்துக் கொண்டே இருக்கும் அக்கா, கிண்டல் அடித்துக் கொண்டே இருக்கும் அப்பா...தடம் மாறி மீண்டும் தங்கள் இயல்புகளுக்குள் வந்து விட்டார்கள்..( வழக்கம் போல் நான் ஜாலி தான்..சிங்கமே சிங்கிளா வந்தாலும் சிரிப்பு தான்..அம்மா கிட்டருந்து இதைகூட கத்துக்கலைன்னா பின்ன எப்படி?)

ஏரி எல்லாத்தையும் வீடு கட்ட சொன்ன “ நாட்டாமை...நீ தீர்ப்பை மாத்தி சொல்லு””

கரிகாலன் காலத்திலேயே இந்த பேரிடர்ல்லாம் வந்தாச்சுங்க..அப்புறம்..அதெல்லாம் வாழ்க்கைல சகஜமப்பான்னு எல்லோரும் மாறணும்.அதுக்கு ஒரு மருந்து கண்டுபிடிச்சா தேவலை..

(கடைசியா தத்துவம் சொன்னதாலே இதுவும் தத்துவம் தான்...என் தத்துவம்..)