Friday, 4 January 2019

ஓவியம்

ஆதி மனிதன் மொழி வளராத காலத்தில் ஓவியங்கள் மூலமாகத்தான் தன் உணர்வுகளைப் பிறருக்குக் கடத்தி இருக்க வேண்டும்

எந்தச்செடியின் மூலம்.என்ன நிறம் பெறலாம்.எனக்கண்டறிந்து அதனைப்.பயன்படுத்தி வண்ண ஓவியம் தீட்டியது தான் மிகப் பெரிய ஆச்சர்யம்...

ஓவியத்திற்கு நேர்கோடு.கோணக்கோடு..வளை கோடு மட்டுமே அடிப்படை..

ஓவியம்..ஓவ,ஓவியம்,சித்திரம்,படம்,,படாம்,வட்டிகைச் செய்தி என்ற சொற்களாலு.வழங்கப்பட்டது.

ஆண் ஓவியர்களை சித் ராங்கதன் என்றும் பெண் ஓவியர்களை சித் ர சேனா என்றும்.அழைப்பார்கள்..

ஓவியக்கூடங்களை சித் ரக் கூடம், சித் ர மாடம், எழுதுநிலை மண்டபம்.எழுதெழில்,அம்பலம் என்று அழைத்தார்கள்..

வண்ணம் கலக்காமல் கரித்துண்டுகளால்.வரையும் ஓவியங்களை புனையா ஓவியம் என்கிறார்கள்.

ஓவியங்களில் நிற்றல்.இருத்தல்,கிடத்தல், ஆகிய மனித இயல்புகளையும் வீரம்,சாந்தம்,சினம்,வியப்பு,உவகை முதலிய மெய்பாடுகளையும்,உத்தமம்,மத்திமம், அதமம், மற்றும் தசதாளம்,நவதாளம், பஞ்சதாளம்,முதலிய அளவுகளையும் வலியுறுத்துவது தமிழுக்குரிய ஓவிய மரபுகளாக விளங்குகின்றன

7 ம் நூற்றாண்டின் மகேந்திரப் பல்லவன் அவன் ஓவியத் திறமைக்காக சித்திரகாரப் புலி என்று அழைக்கப்பட்டான்..(இப்ப முதல்வரா இருந்தா...டாக்டர் பட்டம் கொடுத்தாங்களே அப்படியாத்தான் இருக்குமோ??😁🤔)
தட்சிணசித்திரம் என்னும ஓவிய்.நூலுக்கு மகேந்திரப் பல்லவன் உரை எழுதினார்.

1.சிலப்பதிகாரத்தில் " ஓவியச் செந்நூலுரை நூற்கிடக்கை " என்ற வரி வருகிறது

2.உயிர் பெற எழுதப்பட்ட ஓவியப் பாவை ( சீவக 2048) என்று சீவக சிந்தாமணி சொல்கிறது.

3. தொல்காப்பியத்தில் நடுகல் வணக்கம்- கண்ணெழுத்து பற்றி குறிப்பு உள்ளது. சிற்பங்கள் செதுக்குமுன் ஓவியம் வரைந்த பின்னரே சிற்பங்கள் செதுக்குவர்..

4. புற நானூற்றில் ஓவத்தனைய இடநுடை அமைப்பு என வீட்டின் அழகை ஓவியத்திற்கு ஒப்பாக சொல்வார்கள்..

இந்தியாவில் எல்லோரா ஓவியம் நேர்த்தியானவை..அழகானவை..புகழப்படுபவை..

6.காந்தாரம்..தட்சசீலம் இரண்டும் பாரசீக அடிப்படையிலான ஓவியங்கள்...

7.நாளந்தா அடிப்படை ஓவியங்களே பின்னர் பிரசித்தி பெற்றது

8.பிரான்சின் மிகப்.பழமையான ஓவியம் ( grottechuver) குரோட்டே சோவேட்டில் 32000 ஆண்டுகள்.பழமையானவை..

9.ஸ்பெயின் நாட்டிலுள்ள ஆல்டமிரா குகை பாறை ஓவியங்கள் 12000 வருடங்கள்.பழமையானவை..

10.பிரான்சின்..லாஸ்கோக்ஸ்,,டோர்டேர்க்னே ஆகிய இடங்களில் சுவர் ஓவியங்கள்.கண்டு பிடிக்கப்பட்டன...

11 .இந்தோனேசியாவின் சுலவேஸித் தீவில் காணப்படுகின்ற குகை ஓவியங்கள் 40 ஆயிரம் வருடங்கள்.பழமையானவை...

ஓவியப் புத்தகங்களாக நான் பார்க்க படிக்க நினைப்பவை..
1. டிராஸ்கி மருது
2.ஸ்டுபர்ட்சிபி
3.சுந்தரபிள்ளை சிவரெத்தினம்
4.பாரதிபுத்திரன்
5.ஏஞ்சலினாபாமா பால்
6.நா.அருள் முருகன்
7.பி.ஏ.கிருஷ்ணன்
8.ரவிராஜ்
9.புகழேந்தி..

( எந்தப் புத்தகமும் அம்மா வாங்கித் தரமாட்டாளாம்)

கீழே நான் சாதாரண பென்சிலால்.வரைந்த ஓவியங்களைப்பாருங்கள்..


இன்னும் மேம்படுத்துக் கொள்ள Faber castell பென்சிலாவது கேட்டேன்..அதையும் வாங்கித் தர மாட்டாங்களாம்..

பின் குறிப்பு..யாராவது அம்மாவிடம் எனக்காக சிபாரிசு பண்ணுங்களேன்...

பி ஏ கிருஷ்ணனின் நூல் 800 ரூ என நினைக்கிறேன்..

புகழேந்தி எழுதிய நானும் நிறங்களும் புத்தகமாவது படிக்க ,,பார்க்க விரும்புகிறேன்...

எப்போது கிடைக்குமோ??

Thursday, 27 December 2018

நட்சத்திரம்

* இப்போதெல்லாம்.ஒரு பொருளைப் பார்த்தால் பல எண்ணங்கள் கோர்த்துக் கொள்கின்றன.( நான் வளர்ந்து விட்டேன் தானே)

* எதிர் வீட்டு வாசல் நட்சத்திரம்.சூடி இருந்தது.முன்னெல்லாம் அம்மா டிசம்பர் மாதங்களில் வாசலில் எங்கள் வீட்டிலும் " ஸ்டார் லைட்" போடுவாள்.அது எனக்காக.என் தோழிகளிடம் நான் சொல்ல வேண்டும் என்பதற்காக..அல்லது நான் S.F.S பள்ளியில் படித்ததன் காரணமாக...அல்லது எதிர் வீட்டு அம்மாச்சி மற்றும் தாத்தாவுக்காக...

ஆனால் நான் சொல்லித்தான் அது அரங்கேறியது.( வீட்ல சின்னப் பிள்ளைங்க பேச்சை எங்க பாஸ் கேக்குறாங்க???..ஆனா நாங்க சின்னதா ஒரே ஒரு சேட்டை அல்லது குறும்பு  பண்ணட்டும்...அதுக்கு மட்டும் ஆயிரம் வாய் இருக்கும்...அம்பத்தியோரு திசை இருக்கும்..( இந்த அம்பத்தியோரு திசைங்கிற வார்த்தைய நானா கண்டுபிடிச்சேன் பாஸ்.) ..( என் புலம்பல் என்னோட இருக்கட்டும்))

ஆரோக்கியசாமி Father.
---------------------------------
என் பள்ளியின் முன்னால்.முதல்வர்.கலகலப்பானவர்.ஆனா கண்டிப்பானவர். டிசம்பர் மாதங்களில் அவர் முகமும்.மனமும் அதிக பிரகாசமாயிருக்கும்."உம்" என்று குழந்தைகள்.இருந்தால் உடனே ஒரு சாக்லேட் கிடைக்கும்.(பல தடவை வருத்தப்பட்டது மாதிரி இருந்து சாக்லேட் வாங்கி இருக்கேன்நா பாருங்க..)

திடீரென்று மஞ்சள் காமாலை வந்து இறந்து போனார்.ஆனாலும்.எங்களோடு கல்விச் சுற்றுலா வந்த போது..எழுந்து..எழுந்து ஆடியதும்..வெள்ளை ஆடையும்..பளிச் என்ற சிரிப்பும் தான் நினைவுக்கு வருகிறது..

அந்நாட்களில் குழந்தைகளான எங்கள் மனங்களில் அவர் தான் ஸ்டார்..

தன் அறை வாசலிலும் ஒரு ஸ்டார் கட்டச் சொன்னவர்.

அம்மாச்சி
---------------------

அவரவர் வேலை விட்டு வீடு வந்த பின் வாசல் கதவை இறுகச் சாத்திக் கொள்வது போல் இருக்க முடியாது புதுக்கோட்டையில் இருக்கும் போது....எதிர் வீட்டின் அம்மாச்சி,,( அம்மாச்சி என்று அழைப்போம்.பெயர் தெரியாது..தாத்தா பெயர் ஆரோக்கிய சாமி..கம்யூனிசவாதி..)
குட்டிகளா...என்னடி ..சுவாதி இல்லையா???என்னடி சாப்டீங்க?? என்று கேட்டு நேரே எங்கள் வீட்டின் அடுப்படிக்கே வந்து வத்தல் குழம்பு..அல்லது.ஃப்ரைட் ரைஸ்..செய்து கொடுத்து விட்டுப் போகும் அவர் மகள்..எனக்கு வைரம்ஸ் பள்ளியில் ஆசிரியர் ( பள்ளியில் மிஸ் என்றும் வீடு வந்ததும் ஆண்ட்டி என்றும் அழைப்பது வழக்கம்). அந்த அம்மாச்சிக்கு அம்மாவை ரொம்பப் பிடிக்கும்.எங்கள் வீட்டில் ஸ்டார் லைட் போடுவதை ஒரு வித ரசனையோடு பார்ப்பார்.அம்மாச்சியின் அன்புக்கு மனசு இப்போதும் ஏங்குது..

அந்தோணி ஞானசேகரன்
-----------------------------
கிறிஸ்மஸ் அன்று பல வித ஸ்வீட்.கார வகைகளுடன் வந்து அம்மாவிடம் மட்டுமல்லாது எங்களிடமும் பணிவாக வழங்கிவிட்டுச் செல்லும் அம்மாவின் அஸிஸ்டண்ட்.( இவரைப் பற்றி வேறு ஏதும் தெரியாது என்பதால் நிறுத்துகிறேன்) எங்கள் வீட்டில் இருக்கும் ஸ்டாரைப் பார்த்து மகிழ்ச்சியாகப் பார்த்துச் செல்வார்..

சத்தியநாதன்
---------------------------
அம்மாவின் பல.தம்பிகளில் இவரும் ஒருவர்.ஒரு கிறிஸ்மஸ் க்கு அறந்தாங்கி அருகே இருக்கும் இவர் வீட்டுக்குப் போனோம்.அனிட்டா சித்தி..சத்திமாமா..அம்மாச்சி..தாத்தா..எல்லோருக்கும் அம்மாவை பிடிக்கும்.( இந்த அம்மாவை யாருக்குத்தான் பிடிக்காது?? சுவாதி என்றால் அழகு- அறிவு-ஆற்றல் என்றே பொருள் கொள்க)
எங்கள் வீட்டின் ஸ்டார் லைட் இருந்ததைப் பார்த்துத்தான் இந்த மாமா எங்களுக்கு அறிமுகம்

எபின் Father
-------------------------------
புதுக்கோட்டையில் அம்மாவின் செல்வாக்கு அதிகம்.என்பதால் ஆசிரியர்கள் அனைவரும் என்னை கவிஞர் சுவாதி பொண்ணு..சுவாதி டீச்சர் பொண்ணு என்றே அழைப்பர்.பள்ளியில் சக்தியின் செல்வாக்கு அதிகம் என்பதால் மாணவர்கள்..மற்றும் அம்மாவை அறியாத சில ஆசிரியர்களும் என்னை சக்தி தங்கச்சி என்றே அழைப்பர்.அந்த அடையாளம்.தான்.எனக்கு.வகுப்பில் கிளாஸ் எடுக்க வரும் ஆசிரியர்கள் கூட என்னைக் கூப்பிட வேண்டுமென்றால் சக்தி சிஸ்டர் என்று கூப்பிட்டு ஆயிரம் தடவை என் பெயர் என்ன என்று கேட்டு விட்டு..அதே ஆயிரம் தடவை நான் ராகசூர்யா என்று சொல்லும்.போது"ம்" என்று கேட்டுவிட்டு மீண்டும் அடுத்த முறை சக்தி சிஸ்டர் என்றே அழைப்பார்கள்.இதில் சிலர் கொஞ்சம் ஓவராக..உங்க அக்கா மாதிரி நல்லாப் படிக்கணும்.சரியா என்று அட்வைஸுவார்கள்..அப்பல்லாம் தமிழ் படங்கள் .ல்ல..சுவத்துல உதைச்சு சண்டை போடுற விஜய் காந்த் மாதிரி...ஸ்டைலா பந்தாடுற ரஜினி மாதிரி..ஹிந்தில பறந்து பறந்து அடிக்கிற ஹிருத்திக் ரோஷன் மாதிரி...பார்த்துப் பார்த்து விலாசுற..சல்மான் கான் மாதிரி..இங்லிஷ் படங்கள் ல வர மறைஞ்சு மறைஞ்சு அடிக்கிற  Arnold மாதிரி.போட்டுத் தள்ற Jet li மாதிரி..Jean..Jakiechan..Jason..Keanu..Mark wahlbery. எல்லோருமாக நின்று அவர்களை துவம்சம் செய்வேன் கற்பனையில்)

ஆனால் முதன் முறையாக சக்தியை ராக சூர்யா சிஸ்டர் என்பதோடு மட்டுமல்லாமல்.என் record note.எனது exam papers எல்லாம் model  ஆக பிறருக்குக் காட்டுபவர். ஆசிரியர்கள் வகுப்புக்கு வரவில்லை என்றால் நாங்கள் பிரின்சிபால் அறையில் அமர்ந்திருக்கும் இவரைப் போய் பார்த்து,,அவர் அருகில் இருக்கும் பிரிட்ஜைத் திறந்து,,சாக்லேட் எடுத்து சாப்பிடும் உரிமை வரை தந்திருந்தார்.படிக்காத மாணவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாப் படி என்பார்.( அடிக்காம திட்டாம..குணமா சொல்வார்)
பள்ளியில் மேலே ஏறி ஸ்டார் கட்டுவது இவர் தான். ஸ்டார் எரியும் போது வானத்திலிருந்து ஒன்றைப் பறிச்சு எடுத்து வந்து ஸ்கூல்ல வச்சது மாதிரியே சந்தோஷமப் பார்ப்பார்..

அருள் பிரான்சிஸ்Father
------------------------------------
சக்தியின் மேல் பாசமும் அம்மாவின் மேல் அளவு கடந்த பாசமும் கொண்டவர்..வெள்ளை அல்லது சில்வர் கலர் ஸ்டார் தான் இவருக்குப் பிடிக்கும்..மற்றவைகளை அழகாய் இல்லை என்பார்..இவர் தான் பிரின்சிபால்..

அப்புறம் சண்டை போடும்.ஜெரோமி சித்திகா...பேசவே பேசாத ஆஷா மிருணாளினி,, இன்னோவாவில் வரும் கிறிஸ்டி,,எல்லாக் கேக்கிலும் முட்டை கலப்பார்கள் என்று சொல்லி பயமுறுத்தி அழவைத்த டீனா,,உட்கார்ந்தால்,,நின்றால்,,பேசினால்,,இயேசப்பா என்று சொல்லும் தேஜா ஸ்ரீ..பிறந்த நாள் போலவே லீவ் முடிந்து பள்ளிக்கு வரும் போது எல்லோருக்கும் சாக்லேட் கொடுக்கும் ஜஸ்வின் மனோகர்..இப்படியாக எல்லோரும் என் நினைவில் வந்து போகிறார்கள்..

அப்போதெல்லாம் நான் இந்து, என்றும் எனக்குத் தெரியாது.அவர்கள் கிறிஸ்டியன் என்றும் எனக்குத் தெரியாது.என்னைப் பொருத்தவரை அவர்கள் அசைவம் சாப்பிடுபவர்கள்.நாங்கள் சாப்பிடாதவர்கள் அவ்வளவே..

பிரதோஷம் தவறாமல் கோயில் போகும் அம்மா கிறிஸ்மஸ் அன்று எல்லோருக்கும் வாழ்த்து அனுப்பி விட்டு யாரையாவது மிஸ் பண்ணிட்டேனா பாருடி என்று போனை என்னிடம் தந்தாள்.நானும் கூட 10 பேருக்கு அனுப்பினேன்..

இதைப் படிக்கும் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

கேள்வி
---------------
வாழ்த்து மட்டும் போதுமா நண்பர்களே...சித்தப்பா சித்திகளே....மாமா அத்தைகளே...????

பின்குறிப்பு 1
-------------------
நிறைய எழுதத் தோன்றுகிறது.ஆனால் ஏதோ அழுத்தம் புறந்தள்ளி விடுகிறது. இனியேனும் தொடர விரும்புகிறேன்.

பின் குறிப்பு 2
---------------------------
ஆமா!!! நான் வந்திட்டேன்னு சொல்லு...திரும்பி வந்துட்டேனு சொல்லு நு வந்த....அப்புறம் காணோம்..என்று யாரோ முணகுறது கேட்குது..

பின்குறிப்பு 3
----------------------------
இந்த ஆண்டு முதல் என்னை "சிறுமி" என்று புறந்தள்ள முடியாது.அதனால் மரியாதையா கமெண்ட் பண்ணிட்டுப் போங்க...

பின் குறிப்பு 4
---------------------------
நன்றி..எழுதுடா...நிறைய்ய எழுது என்று சொன்ன செல்வி ஆண்ட்டிக்கு

பின் குறிப்பு 5
---------------------------
நான் SUPER STAR  மகள் தெரியுமா???

அம்மா பெயர் சுவாதி...அது ஒரு ஸ்டார் ..

அம்மா எப்பவும் எங்களுக்கு super..அதனால் நான் SUPER STAR  மகள் தானே???

பின் குறிப்பு 6
----------------------------
நான் " ராக"சூர்யா" என்பதால்...உலகின் பெரிய ..STAR....நான் தான்...

ஆமாந்தானே?????

Thursday, 14 September 2017

இதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....

இதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....

அன்று ஒரு வியாழக்கிழமை...
பள்ளியில் ஐந்தாவது பிரியட் முடிந்து ஆறாவது பிரியட் தொடங்க வேண்டும்.அன்று வர வேண்டிய வகுப்பின் ஆசிரியர் விடுப்பு எடுத்திருந்ததால் வரவில்லை..
வகுப்பில் ஆசிரியர் இருந்தாலே கும்மாளம்.போடும் நாங்கள் அவர் வரவில்லை என்றவுடன்...அவரவர் வால்தனங்களை அவிழ்த்து விட்டுப் பிரபலமாகிக் கொண்டிருந்தோம்..

முதலில் ரேஷ்மா தான் ஆரம்பித்தாள்.தினமும் பள்ளிக்கு வந்து போரடிக்குது நாளைக்கு லீவ் போடலாமா என்றாள். உடனே கீர்த்தி.சரண்யா.மதுமிதா.காயத்திரி.கரிஷ்மா அனைவரும் ஒத்து ஊதினர். எல்லோரும் மொத்தமாக லீவ் போட்டால் சந்தேகம் வரும் என்றாள் நஃபிதா. 

பிறகு ஆளாளுக்கு பேசிவிட்டு லீவ் எல்லாம் போடமுடியாது.பிரச்சினை வரும் என்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டு, ஆதங்கத்தோடு அடுத்த பிரியட். ஐ எதிர் கொள்ள ஆரம்பித்தார்கள். எனக்குள் அந்த லீவ் மேட்டர் மீண்டும் மீண்டும் மனதிற்குள் ஓடிக் கொண்டே இருந்தது. நாளை வெள்ளிக் கிழமை தான் ஒரு நாள் லீவ் போட்டால் சனி.ஞாயிறு.சேர்ந்து கிடைக்கும். ஜெம ஜாலி என்று தோன்றியது. ஆனால் ச்ச்ச்சும்மா லீவ் போடுகிறேன் என்றால் எப்படி.அனுமதிப்பார்கள்? அதனால் அதற்கென ஒரு திட்டம் தயாரிக்க ஆரம்பித்தேன். அம்மாவிற்கு வயிற்று வலி வருவதுண்டு. அப்போது தாங்க இயலாமல் தவிப்பாள். புரளுவாள். வேக வேகமாக சமைத்து முடித்து விட்டு குப்புறப்படுத்துக் கொள்வாள். அடிக்கடி கழிப்பறை சென்று வேதனை முகத்தோடு திரும்புவாள். 
எஸ்.
இந்தத்திட்டம் தான் சரியானது என்று மனதிற்குத் தோன்றியது.
பள்ளியிலிருந்து கிளம்பும் போதே முகத்தை உர் என்று வைத்துக் கொண்டேன். வீடு வந்ததும் கண்ணாடி முன் நின்று சோகமாக முகத்தைப்வைக்க முயற்சி செய்து பழகிக் கொண்டேன். என் முகத்தைக் காண எனக்கே பாவமாய் தோன்றும் அளவிற்கு " பர்மாமன்ஸ்" சரியாக இருந்தது..

அம்மா வந்தவுடன் வயிறு வலிப்பதாய் சொன்னேன். " சாப்பிடு ,சரியாப்போகும்..அடக்கடவுளே! இவளுக்கு இன்னும்.பசிக்குதுனுப்கூடச் சொல்லத் தெரியலை" என்று தலையில் அடித்துக் கொண்டே சென்றாள். மீண்டும்.கண்ணாடி முன் போய்..வலிக்கு பதில் பசியைக் காண்பிச்சுட்டோமோப்..அடடா...சூர்யா இன்னும் நடிப்புக் கலையில் தேறணும்னு சொல்லிக் கொண்டே என் நடிப்பு நாடகத்தைத் தொடர்ந்தேன்..

மறுநாள் அம்மா பள்ளிக்குக் கிளம்பும் வேளையில் மீண்டும் என் வலி பற்றி சொல்லி ஞாபகப் படுத்தினேன். அம்மா முதலில் என் வகுப்பாசிரியருக்கு போன் செய்தாள்.(.அப்பாடா லீவ் சொல்லப் போகிறாள். இனி ஜாலி என்று நினைத்தேன். )

என் பள்ளி ஆசிரியர்களுக்கு,,என் தோழிகளின் அம்மாக்களுக்கும்.தோழிகளுக்கும். தனது தோழிகளுக்கு என்று எனக்கு உடல்நலம் சரியில்லை என்ற செய்தி பரப்பப்பட்டது. கிட்டத்தட்ட அம்மா சிங்கப்பூர் வானொலிக்கு மட்டும் தான் சொல்லவில்லை. சரி எப்படியோ லீவ் கிடைச்சா சரி என்று பார்த்தால் அம்மா யூனிபார்ம் போடச் சொன்னாள்..நான் பள்ளிக்குப் போகிறேனாம்மா என்றேன் பரிதாபமாய்.இல்லை கொஞ்ச நேரம் தான் நான் வரும் வழியில் உன்னைக் கூட்டிவந்து  விடுகிறேன் என்றாள். சரினு நம்பி அவளோடு வண்டியில் ஏறினேன். வகுப்புக்குச் சென்றேன். முதல் பிரிவேளை வந்த தமிழ் அம்மா. ராகசூர்யா உனக்கு என்ன முடியலை..அம்மா.போன்.பண்ணாங்க என்று சொல்லிவிட்டு..என் பதில் எதிர்பார்க்காமல் அவங்க பாட்டுக்கு பாடம் நடத்துனாங்க..அடுத்த பிரிவேளை வந்த வேதியியல் ஆசிரியையும் சூர்யா உனக்கு முடியலையாமே உங்க அம்மா சொன்னாங்க என்று சொல்லிவிட்டு அதன் பின் மருந்துக்குக் கூட அதைப் பற்றி விசாரிக்காமல் பாடமே கண்ணாக நடத்திவிட்டு அவரும் சென்று விட..அடுத்து அடுத்து வந்த ஆசிரியர்கள் அனைவரும் ஏதோ பிள்ளையார் சுழி போட்டு தொடங்குவது போல உனக்கு முடியலையாமே என்று கேட்டுவிட்டு தங்களின் கடமைகளை ஆற்றினார்கள்.வகுப்புக்குள் வந்த ஆசிரியர் மட்டுமின்றி வகுப்பு வழியா போற ஆசிரியர்களும் ஏதோ மந்திரிச்சு விட்டா மாதிரி கேட்டுட்டு என்னிடமிருந்து பதில் வாங்காமலே சென்றார்கள். நேரம் தான் போனதே தவிர வரேனு சொன்ன அம்மா வரலை. 

இதற்குள் நந்தினி.பிறந்தநாள் என்பதால் அவள் அம்மா மற்ற குழந்தைகளுக்கு சாதாரண சாக்லேட்டும் எனக்கு மட்டும் டெய்ரி மில்க் சில்க் ம் கொடுத்துவிட அவள் பயந்து போய் உனக்கு வயிற்று வலியே..உடம்பு சரி இல்லையே..நீ சாப்பிடலாமா என்று கேட்டு வெறுப்பேற்றினாள்.நந்தினி அம்மாவும் என் அம்மாவும் ஒன்றாய் வேலை பார்த்தவர்கள் என்பதால் மதிய வேளையில் அவள் மாமாவிடம் ஐஸ்கிரீம் கொடுத்துவிடுவதாகவும் சொன்னார்களாம்.

மதியம் உணவு இடைவேளையின் போது அம்மாவின், தோழியின், தம்பியின், மனைவியின்,, அண்ணன் மகள் என்னை வந்து உனக்கு வயித்து வலியா?? உங்கம்மா போன் பண்ணாங்க என்று குசலம் விசாரித்து விட்டுப் போனாள். 

அடக்கடவுளே! இனி பாரதப் பிரதமரும், அமெரிக்க அதிபரும் தான் என்னை விசாரிக்கவில்லை. சே,,,,நான் இந்த நாடகம் நடிக்காமலேயே இருந்திருக்கலாம். இப்படி எல்லோரும் என்னை விசாரிக்க..விசாரிக்க,,,அம்மா மீது கோபம் கோபமாக வந்தது.. இன்று வீட்டுக்குப் போனதும் மிக பயங்கரமாக ..மிக மிக.பயங்கரமாக அம்மா மீது கோபப் பட வேண்டும் என்று அம்மா மீது சத்தியம் செய்து கொண்டேன்.

மதியம் வந்த ஒரு ஸ்ப்ஸ்டியூட் மிஸ் என்ன ராகசூர்யா உனக்கு முடியலையாமே...உனக்காக ரசம் சாதம் செய்து எடுத்து வரச் சொன்னேன்...சாப்டுறியா என்று கேட்டு என்னை கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றாள்.

இந்தக் கேள்விக் கணைகள் பத்தாது என்று இல்லாத வயிற்று வலியை இருப்பதாகக் காட்டிக் கொள்ள ஒரு அசாதாரண திறமை தேவைப் பட்டது. என்னால் மெயிண்டென் செய்ய முடியாது என்ற நிலையை நான் எட்டி விட்டேன்.

வருகைப் பதிவு 75% இருந்தால் போதும். நானோ 98% வைத்திருக்கிறேன். ஒரு நாள் லீவ் போட்டால் குறைந்தா போகும்..
ஆசிரியரான அம்மாவுக்கே லீவ் செயல்முறைகள் தெரியவில்லையோ என்று நொந்து கொண்டேன்.

பள்ளியை விட்டுக் கிளம்பும் போது வாசலில் நின்ற வாட்ச் மேன் உனக்கு உடம்பு சரியில்லையா பாப்பா என்றாள். கரிசனத்தோடு...பள்ளியைக் கூட்டும் ஆயா..கூட்டுவதை நிப்பாட்டி நிமிர்ந்து உனக்கு உடம்பு சரி இல்லையா என்றாள். மாலை நான் வரும் வேன் டிரைவர் என்னோடு வரும் வேறு வகுப்பு தோழிகள் எல்லோரும் கேட்டார்கள்..

கோபத்தோடு கதவைத் திறந்தால் வீடெல்லாம் நெய் மணம்..மற்றும் எனக்கு புரிபடாத பற்பல மணங்கள்... பையை கீழே வைத்து விட்டு அடுப்படிக்குப் போனால் ஒரு கிண்ணம் நிறைய பால் பாயாசம். பக்கத்தில் வடை..ஒரு வாளியில் முறுக்கு...வந்த கோபம் எல்லாம் டஸ்ஸ்...புஸ்ஸ்...

அம்மாவுக்கு அன்று தலைமை ஆசிரியர் கூட்டமாம். மதியமே வீடு வந்து விட்டாளாம். எப்போதும் தலைமை ஆசிரியர் கூட்டமென்றால் காலை பள்ளியும் சென்று.. மதியம் கூட்டமும் போய்விட்டு வந்தால் அம்மா சாதாரணமாக பால் சாதம்.துவையல் அப்பளம் இதோடு முடித்துக் கொள்வாள்.களைப்பாகத் தென்படுவாள்..ஆனால் அன்று காலை கூட்டம் என்பதால் இரண்டு மணிக்கே வந்துவிட்டதால் இதை எல்லாம் செய்ய முடிந்ததாம்.

ஹைய்யயே...கோபமாவது ஒண்ணாவது..

வழக்கமாக 4 வடைகள் மட்டுமே தரும் அம்மா அன்று ஆறு வடைகள் தந்தாள். 10 முறுக்கு தந்தாள்.. 

உங்களுக்குத் தெரியுமா? அம்மா ரொம்ப பாவம்..ரொம்ப நல்லவள்...

பின்குறிப்பு....இதனால் சகலமானவர்களுக்கும் நான் அறிவிப்பது என்னவென்றால்(1) தயவு செய்து டீச்சர் பெண்ணை திருமணம் செய்யாதீர்கள். ( அவர்கள் தங்கள் குழந்தைகளை லீவ் எடுக்க அனுமதிப்பது இல்லை)

அதோடு உங்கள் குழந்தை படிக்கும் பள்ளியின் ஆயாவிலிருந்து பிரின்சிபல் வரை அனைவரும் தெரிந்தவர்களாய் இருப்பார்கள். அது அதைவிடத் தொல்லை.
ஒரு வேளை என் பேச்சை மீறி திருமணம் செய்யத் துணிந்தால் உங்களுக்குப்பிறக்கும் குழந்தைகள் லீவ் எடுக்க அனுமதி உண்டா என்று கேட்டு முதலிலேயே ஒப்புதலும் பெற்று.ஒப்பந்தமும் போட்டுக் கொள்ளுங்கள்.

ஏனென்றால் மாணவர்களைப் பார்த்து..பார்த்து யார் பொய் லீவ் போடுகிறார்கள் என்பதை அறிந்து கொண்டு விடுகிறார்கள்..உளவியலாளர்கள் போல....

இந்த அவஸ்தை உங்களுக்கும் நேரலாம்...

என்ன நான் சொல்றது?

மற்றொரு பின் குறிப்பு. மறுநாள் வகுப்பாசிரியர் என் வகுப்பு வந்ததும் என்ன சூர்யா சரியாகிட்டியா என்று சாதாரணமாகக் கேட்டிருந்தாலும் குத்தலாகக் கேட்டதாகவே இன்று வரை உணர்கிறேன்

Wednesday, 31 May 2017

அம்மா கிளம்புகிறாள்...

அம்மா கிளம்புகிறாள்...

அம்மாவுக்கும் எங்களுக்குமான ஒட்டுதல் எல்லா பிள்ளைகளும் அம்மாவும் போல் இல்லை..சுவாதி சற்றே வித்தியாசமானவள்...

தனக்கு துன்பம்.வரும் போதெல்லாம் பாரதியார் கவிதைகளை எடுத்துப் படிப்பாள்.அது தான் அம்மாவின் பைபிள்.அல்லது கீதை அல்லது குரான்..

அம்மா எங்களது சிறு பிராயத்தில் பல கதை புத்தகங்கள் நூலகத்திலிருந்து எடுத்து வருவாள்..சனி ஞாயிறு என்றால் எல்லோரும் தூங்குவார்கள்.ஆனால் அம்மா அன்று தான் நான்கு மணிக்கு எழுந்து..துவைத்து..சமைத்து காலை 7 மணிக்கெல்லாம் எங்களையும் தயார் படுத்தி விடுவாள்.எதற்கு? படிக்க...அதுவும் கதை புத்தகங்கள்...அந்த அறியாத பருவத்திலேயே...இது கைக்கிளைக்காதல் கதை...பெருந்திணைக் காதல் என்பாள்..

தமிழின் நுணுக்கங்கள் எங்களுக்கு வந்தெல்லாம் மிக இயல்பில்...

பாரதியார் பாடல்கள்..சுஜாதா..எஸ் ராமகிருஷ்ணன்.பா.ராகவன்..வாஸந்தி..ஆண்டாள்.பிரிய தர்ஷினி..ஜெயகாந்தன்.முகில்..பட்டுக்கோட்டை பிரபாகர்.இந்திரா பார்த்தசாரதி..தேவன்.சுபா..புதுமைபித்தன்..ராஜம்கிருஷ்ணன்..விந்தன்..நாஞ்சில் நாடன்..வண்ணதாசன்..பிரபஞ்சன்..அனுராதா ரமணன்..கி ராஜநாராயணன்.கல்கி கிருஷ்ண மூர்த்தி..ரா.கி.ரங்கராஜன்..லா.சா ராமாமிர்தம்..சிவசங்கரி..ரமணிச்சந்திரன்..என்று பற்பல கட்டுரைகள்..கவிதைகள்..கதைகள்
என்று எல்லா வடிவங்களையும் எடுத்து வந்து படித்துக் காண்பிப்பாள்..பசி எடுத்தால் சாப்பிட்டு மீண்டும் படிப்போம்..மூன்றாம் வகுப்பு அல்லது அதற்க்கு சற்றே முந்தையகாலத்தில் இருந்தே நானே நூலகத்தில் புத்தகங்களை தேர்வு செய்து படிக்க ஆரம்பித்து விட்டோம்...பள்ளிப்பாடங்களை விட இந்த சனிக்கிழமை ஞாயிற்றுக் கிழமைக்காகக்.காத்திருக்க ஆரம்பித்தோம்...

நீங்கள் சுவாதியைப் போல் அம்மாவை எங்கும் காண இயலாது..

எங்கள் இருவரையும் சைக்கிளில் வைத்துக் கூட்டி வருவாள்..வண்டியில் வைத்துக் கூட்டி வருவாள்...பள்ளி நேரம்.போக கடைகளில் கணக்கு எழுதினாள்..பணக்கார வீடுகளுக்குச் சென்று டியூஷன் எடுத்தாள்..இப்படியாக பல அவதாரங்கள் அம்மாவுக்கு...எங்களையும் கவனித்துக் கொண்டு இரண்டு பேருந்துகள் மாறி பள்ளி சென்று..தனது இலக்கியப்பணிகளையும்.கவனித்துக் கொண்டு அம்மா எப்போதும் சிரமப்பட்டாள்..ஆனால் எப்போதும் புன்னகையுடன் தான் இருப்பாள்..அம்மா யார் என்ன சொன்ன போதும் எது நடந்தாலும் சோர்வு கொள்ள மாட்டாள்...

ஆரம்பம் முதலே அப்பா எங்களோடு இல்லை..அப்பாவின் குரல் எப்போதேனும் தொலைபேசி வழியாக கேட்கும்..

ஆனால் அம்மா எங்கள் இருவருக்கும் பீஸ் கட்ட..வீட்டு வாடகை கொடுக்க..மளிகை வாங்க..என்று எல்லா செலவுகளுக்காகவும் திண்டாடுவாள்
அப்போதும் அவள் முகம் சிரித்த வண்நம் தான் இருக்கும்.நான் எந்தப்பள்ளியில் படித்தாலும் அம்மாவின் தோழிகளாக..தோழர்களாக அந்த ஆசிரியர்கள்..பள்ளி முதல்வர்கள் இருப்பார்கள்..அம்மாவின் பழகும் விதத்திற்கு.எங்கும் அன்பு மயம் தான்.அம்மாவை நேசிக்காதோர் யாருமில்லை..எதுவும் தெரியாத இந்த சென்னையில் சக்தியின் கல்லூரி வாகனம் ஓட்டுபவரிலிருந்து..வகுப்பு நடத்தும்.பேராசிரியர்கள் வரை எல்லோரும் அம்மாவின் நட்புகள் தான்.

இதுவரை நான்.படித்த பள்ளிகளில் எல்லாம் என்னுடன்.படிப்போர்கள் அம்மாவைப் பார்த்து பொறாமைப்.படுவார்கள்..உங்கம்மா எப்படி டீ இப்படி பேசுறாங்க..ரொம்ப அழகாவும் இருக்காங்க..என்பார்கள்..எனக்கும் சக்திக்கும் எப்போதும் பெருமை பூரிக்கும்..

அம்மா எப்போதேனும் கோபப்பட்டால்..ஹைய்யே சுவாதி இந்த ரோல் உன் முகத்துக்கு நல்லா இல்லை..நீ காமெடி பீஸ்..உனக்கேன் சீரியஸ் முகம் என்றால் அம்மா சிரித்து விடுவாள்..

எங்களுக்கென பயத்தமாவு அரைப்பாள்..( இதுவரை நாங்கள் குளியலுக்கு சோப்பு உபயோகித்ததில்லை) தலைக்கு சீயக்காய் அரைக்க அலைவாள்.உடல் நலமில்லை எனில் முதலில் கஷாயங்கள்.பிறகு தான் வைத்தியம்.அதுவும் ஹோமியோ முறைகள்..

இங்கும் சம்பளம் வராத இந்த ஆறு மாதத்தில் உதவி இயக்குநர் என்ற பெயரில் சாதாரண வேலைகள் செய்தாள்..

முதல் நாள் இரவு 8 மணிக்கு புதுகையில் கிளம்பினால் தான் சென்னையில் எங்கள் இருப்பிடத்திற்கு காலை ஆறு மணிக்கேனும் வர இயலும் விடிய விடிய பேருந்தில் அரை குறையாக உட்கார்ந்தே தூங்கி..இங்கே வந்ததும் தான் புதுகையில் இருந்தே வாங்கி வந்த காய்களை வைத்து சமைக்க ஆரம்பித்து விடுவாள்..சமைச்சுட்டு ரெஸ்ட் எடுக்கிறேன் என்பாள் ஆனால் அதன் பின் கையால் துவைக்கும் துணிகளைப் பிரித்து துவைக்க அமர்ந்து விடுவாள்..சனி.ஞாயிறு இரு தினங்கள் மட்டுமே இருக்கும் பொழுதுகளில். இட்லி பொடி அரைத்து..வத்தல் குழம்பு பேஸ்ட் செய்து.கடை வீதிக்குப் போய்.காய்.பழம் மற்ற பொருட்களை வாங்கிப்வைக்கும் முன் ஞாயிறு மதியம் ஆகிவிடும்..ஆனாலும் அம்மா சலிக்காமல் செய்வாள்..

பிஸினஸ் ஆரம்பிக்க என்று தன்னிடம் இருந்த பணத்தை எல்லாம் அப்பாவிடம் கொடுத்து அந்தப் பணம் ஒன்று கூட திரும்பி வராத போதும் அம்மா அதே போலத்தான் இருந்தாள்

.அம்மாவிற்கு என்று பிரத்தியேக ஆசைகள் ஏதுமில்லை.எங்கள் இருவரையும் படிக்க வைப்பது தவிர..

அம்மாவிற்கு இரண்டு முறைகள் அறுவை சிகிச்சை நடந்த போதும் மூன்றாம் நாளிலிருந்தே அம்மா தான் சமைத்தாள்..அவள் அம்மாவும் அப்பாவும் அம்மாவிடம் கோவித்துகொண்டு போன போதும் அம்மா அன்பானவளாக.அயராதவளாகவே இருந்தாள்..

அவள் நொறுங்கி கவலையுற்று இருந்த காலமெனில் அம்மா இப்போது ஆறு மாதமாக ஊதியம் வழங்கப்படாத நாட்கள் தான்.சற்றே சோர்ந்து போனாள்.அவளுக்கென யாரும் பண உதவிக்கு என்று இல்லாத நிலையில் தடுமாறிப் போனாள்..எனக்கும் சேர்த்து இந்த வருடம் கல்லூரிக்குக் கட்ட வேண்டும் என்ற நினைவே அம்மாவிற்கு பல உடல் உபாதைகளைத் தந்துவிட்டது.தாங்க முடியாத இடுப்பு வலியாலும் கால் வலியாலும் தவித்தாள்..ஆனாலும் அவளே சமைத்தாள்.துவைத்தாள்
படுத்துக் கொண்டாள்..

இங்கே கிண்டி.வடபழனி.கோயம்பேடு.வளசரவாக்கம்.விருகம் பாக்கம்.ஆழ்வார் திருநகர்.இந்தப்பக்கம் தரமணி.மேடவாக்கம்.ஓ.எம்.ஆர் என்று எல்லா இடங்களுக்கும் கூட்டிப் போனாள் வண்டியிலேயே.வேளச்சேரி நூலகம்.அண்ணா நூற்றாண்டு நூலகம் கூட்டிப் போனாள்.கறிவேப்பிலையிலிருந்து அரிசி.ஆடை அல்லது வேறு பொருட்கள் வரை வாங்குவது அம்மா தான்..

அம்மாவின் அக்கறையும் அன்பும் உழைப்பும் பிரத்தியேகமானது.

அழகிய தயிர் சாதத்தில் தன் கையில் எடுத்து கட்டைவிரலால் கீறி அதில் வத்தல் குழம்பை ஊற்றி ஒரு வாயும் துவையல் வைத்து ஒரு வாயும் கூட்டு வைத்து ஒரு வாயும் தரும் போது ஒரு ஊரை எழுதி வைக்கலாம்.

அம்மா ஸ்பெஷல்= பூரி கிழங்கு..சாம்பார்..பருப்பு வடை.  பருப்பு உருண்டை குழம்பு வைப்பதில் எக்ஸ்பர்ட்...சமீப காலத்தில் பனீர் பட்டர் மசாலா

அம்மா ஒரு போதும் தலையில் பூ வைத்துப் பார்த்ததில்லை..ஆனால் கையில், பையில் புத்தகம் இல்லாமல் பார்த்ததே இல்லை..

அம்மா சொல்கிறாள் நாங்கள் இருவரும் அம்மாவுக்கு தேவதைகளாம்..ஆனால் அம்மா தான் எங்கள் தேவதை

நான் வேறு ,,அம்மா எனக்கு நான்கே ஆடைகள் தான் இருக்கிறது..காலேஜ் சேர்த்தால் டிரஸ் வேணுமில்ல என்று சொன்னதிலிருந்து அம்மாவின் மன அழுத்தம்.அதிகமாகிப் போனது. 

கல்லூரியில் இப்போதே 30000 கட்ட சொன்னார்கள்.இப்போதைக்கு எங்கள் ராதா அங்கிளிடம் வாங்கி( இவரைப் பற்றி தனியாக ஒரு கட்டுரை எழுத நினைத்துள்ளேன்) கட்டியாகிவிட்டது..ஆனால் மீதி தொகை எப்படிக் கட்டுவது என அம்மாவுக்குக் குழப்பம் தீரவில்லை.

பல்கலைக்கழக கட்டணம் மட்டும் கேட்கும் சில கல்லூரிகளில் நான் நினைப்பது போல் லேப் இல்லை.பிளேஸ்மெண்ட் இல்லை..அதனால் தான் இக்கல்லூரி தேர்ந்தெடுத்தேன்..அம்மாவைப் பார்க்க பாவமாக இருக்கிறது.ஆனால் அம்மா இதையும் சமாளித்து மீண்டு வருவாள்..

தனக்கென எழுதும் ஆற்றல் பேசும் ஆற்றல் இருந்தும் தன்னை...தன் திறமைகளை வளர்ப்பது பற்றி எண்ணாமால்   எங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் அம்மா  ..குக்கரில் தனக்கென மேல் டப்பாவில் ரேஷன் அரிசியையும் கீழ் டப்பாவில் பொன்னி அரிசியையும் வைக்கும் அம்மா..இன்று ஊருக்குக் கிளம்புகிறாள்..இப்போ
இனி நாளை முதல் நானே தலை பின்னிக் கொள்ள வேண்டும்.நானே சமைத்துக் கொள்ள வேண்டும்..

அம்மா போன் செய்யும் போது ம்ம்ம்ம்ம் சாப்பிட்டேனே..பால் வாங்கி காப்பி போட்டுக் குடிச்சிட்டேனே..என்று பொய் சொல்ல வேண்டும்..
வெறும் சோற்றின் முன் அமர்ந்து பருப்பு தாளிச்சேன்..உருளைக்கிழங்கு வறுத்தேன்.வெண்டைக்காய் செய்தேன் என்றும் பொய் சொல்ல வேண்டும்..

ஒரு வேளை நாளைய இந்த உலகத்தில் நான் ஏதேனும் சாதித்தால் அதன் பெருமை அத்தனையும் அம்மாவை மட்டுமே சாரும்..ஒருவேளை இல்லை எனில் அம்மாவிடமிருந்து நாங்கள் முறையாகக் கற்கவில்லை என்றே அர்த்தம் கொள்ளலாம்.

ஆனால் சாதிப்போம்..

எப்போதேனும் அம்மாவை காலையில் நிதானமாக எழுந்திரிக்க வைக்க வேண்டும்.அவளுக்கான உணவுகளோடு அவளுக்கான புத்தகங்களையும் கொடுத்து அமைதியாக வாழ வைக்க வேண்டும்..இந்த ஓய்வற்ற உழைப்பில் இருந்து அவள் தப்ப வேண்டும்..அது தான் எனக்கும் சக்திக்குமான ஆசை..

என்னிடம் இருக்கும் இந்த குழந்தைமையை யாரேனும் வாங்கிக் கொண்டால் தேவலை..அது தான் இப்படி அம்மாவோடு இருக்க அடம் பிடிக்கிறது..தேம்பித் தேம்பித் தேம்பி இப்படி எழுத வைக்கிறது..மாடிக்குப் போய் அம்மாவின் உருவம் மறையும் வரை அழுகையை துடைத்து துடைத்து விட்டு பார்க்க வைக்கிறது..


Monday, 8 May 2017

அம்சமில்லாத அம்சக் கோரிக்கைகள்

அம்மாவின் 24 அம்சக் கோரிக்கைகள்

1. தினமும்.காலையில் 5.30 க்காவது எழ வேண்டும்

2. காலை மாலை இருவேளையும் விளக்கு ஏற்றி தியானம் செய்ய வேண்டும்

3. இனி என் படிப்பை எவ்வாறு வளமாக்கலாம் என்று திட்ட மிட வேண்டும்

4. தினமும் லெமன் ஜூஸ் அருந்தவ்வேண்டும்

5. ஒரு நாள் விட்டு ஒருநாள் தலைக்குக் குளிக்க வேண்டும்

6. எண்ணெய் பலகாரங்களைத் தவிர்க்க வேண்டும்

7. நல்ல தரமான எனக்கு வாழ்க்கைக்கு முக்கியமான புத்தகங்களைப் படிக்க வேண்டும்

8. காலையில் தினமும் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்

9. சில சமையல் குறிப்புகளை என் தேவை நிறைவேற்றிக் கொள்ள தெரிந்து கொள்ள வேண்டும்

 10. வலை தளங்கள் பார்க்க முக நூல்.பார்க்க என்று நேரம் ஒதுக்கி அந்த நேரம் மட்டும் பார்க்க வேண்டும்

11. தேவாரம்.திருவாசகம்
சிவபுராணம் போன்றவற்றை பாராயநம் செய்ய வேண்டும்.

12. என்ன படிக்கப் போகிறேன் அதற்கான நடைமுறை..இலட்சியம் போன்றவற்றை வகுத்து செயல் பட வேண்டும்

13.வெயில் காலம் என்பதால் மூன்று முறை குளிக்க வேண்டும்.

14. ஏரோ நாட்டிக்கல் இஞ்சினியரிங் கான பாடத்திட்டங்கள்...கட்டணங்கள் ..பற்றி பார்க்க வேண்டும்..

15. கல்வி கடன் தருவோர்..பற்றி விசாரித்து அறிய வேண்டும்

16. நடந்தே ராதா அங்கிள் வீடு வரை போய் ஆதித் ..அபர்ணா வோடு பேசி விளையாடி விட்டு வரவேண்டும்

17. பல தனியார் கல்லூரிகளில் நடக்கும் வகுப்புகளில் ஏதேனும் ஒன்றிலாவது போய் கலந்து கொள்ள வேண்டும்

18.நானாக தனியாக பீனிக்ஸ்.மற்றும் பிற இடங்களுக்கு போய் வர பழக வேண்டும்

19.ஏதேனும் ஒரு துறையை தேர்ந்தெடுத்து அதில் என் வலிமையை நிரூபிக்க வேண்டும்

20..மைதா உணவுகளைத் தவிர்த்து நீர் உணவுகள் அதிகம் உட் கொள்ள வேண்டும்

21.காய் கறி..கீரை..சாப்பிட வேண்டும்

22.ஏதேனும் ஒரு பிராஜக்ட் செய்து முடிக்க வேண்டும்

23. என்னென்ன புத்தகங்கள் படித்தேன் என்பது பற்றிய குறிப்புகள் வைக்க வேண்டும்

24.பிரதோஷம்.சஷ்டி.சதுர்த்தி.சிவராத்திரி..எனது நட்சத்திர நாளில் கோயிலுக்குப் போக வேண்டும்.அல்லது வீட்டில் சிறப்பு பூஜை.பிரார்த்தனை செய்ய வேண்டும்

 இவ்வளவையும் பண்ண வேண்டுமாம்...

ஹேஹ்ஹ்ஹே..

அரசாங்கத்திடம் விடுகிற பற்பல அம்சக் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றவா செய்கிறார்கள்???

கிடப்புல தானே கிடக்கு

என்ன கில்லர்ஜி அங்கிள் நான் சொல்றது சரி தானே??

இதை தயவு செய்து தனபாலன் அங்கிள் ட்ட சொல்லீராதீங்க...( அவர் பெரியவங்க சொன்னா கேட்கணும் பார்)

அவருக்குத் தெரியாம நாம ரகசியமா வச்சுக்குவோம்

தெர்மா கோல் போட்டு மறைச்சிருவோமா கில்லர்ஜி அங்கிள்??

 இஸ்க்கு லக்கடி லாலா சுந்தரி  கோலா கொப்பரை கொய்யா...

நா தூங்கப் போறேன்....

பின் குறிப்பு

இதை அம்மாக்கிட்டயும் சக்தி கிட்டயும் யாரும் சொல்லீராதீங்க ...காபி..பால்..மோர் தந்து கூட கேப்பாக ...அப்ப கூட சொல்லீராதீய

Sunday, 7 May 2017

நீட் நீட் நீட்

நீட்..நீட்...நீட்


எனக்கு ஆவடியில் இருக்கும் ஏ.எப் எஸ் பள்ளியில் செண்டர்...

சென்னைக்கு மிக அருகில் என்று ரியல் எஸ்டேட் காரர்கள் தான் சொல்வார்கள்....ஆனால்...தேர்வாணையம் ஒரு வழியாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடியில். போட்டதற்கு என்ன காரணமாக இருந்திருக்குமோ??

வெள்ளிக் கிழமையே அம்மா மட்டும் தனியாக வண்டியிலேயே அந்தப் பள்ளிக்கு போய் வந்து..அங்கு எத்தனை மணிக்கு பஸ்? எப்போது வேளச்சேரியிலிருந்து கிளம்பினால் அங்கு போய் சேர முடியும்? எவ்வளவு பெட்ரோல் ஆகிறது? இன்னபிற விஷயங்களை அறிந்து வந்ததால்..மிக சரியாக.அதிகாலை 4 மணிக்கு எழுந்த அம்மா லெமன் சாதம்.தண்ணீர் பாட்டில் வெள்ளை வேட்டி.தலைக்கு ஸ்கார்ப் சகிதம் கிளம்பி விட்டார்...( இந்த 4 மணி எல்லாம் எனக்கு மிட் நைட்)..(ஆனா இன்று சமத்தா கிளம்பிட்டேனாக்கும்) 
இப்போது மணி மிகச் சரியாக ஐந்து ஆக ஐந்து நிமிடம்
கிண்டி..காசி தியேட்டர்..அசோக் பில்லர்..வடபழனி..எம்
எம்.டி.ஏ..கோயம்பேடு வர 6.10..நாங்கள் வீட்டை விட்டு கிளம்ப்பி மடுவின் கரை முக்கம் வரும் போதே பரபர வென்று மனிதர்களும்..வாகனங்களும் செல்வதைப் பார்த்தால்..இவ்வளவு பேர் கடினமா வேலை பார்த்துமா இந்தியா இன்னும் வல்லரசாகலைனு தோன்றியது..

என்னமா இவ்வளவு கூட்டம்? என்று எல்லா சிக்னல் யும் கேட்டேன்..ஒரு முப்பது புதுக்கோட்டையை மொத்தமா அடுக்கி வச்சாப்ல கூட்டம்..கூட்டம்..கூட்டம்..
திருமங்கலம் ரோடு வழியா அம்பத்தூர் வந்து..அம்பத்தூர் தொழிற்சாலை சாலையின் வழியாக போய்க் கொண்டே ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ இருந்தோம்.முருகப்பா தொழிற்சாலை சாலையில் பிரிந்து முதலில் hvf அதன் பின் crpf அதன் பின் afs..

ஒருவழியாக பள்ளி வந்து சேர்ந்தோம்
மணி 7.20.நான் முதல் பேட்ச் என்பதால்  7.30 க்கு அழைக்கப் படுவேன்..

திருவப்பூர் திருவிழாவிற்கு வருபது போல் பெருங்கூட்டம்..பெரும்பாலும் டாக்டர் அம்மா..அல்லது டாக்டர் அப்பாவின் குழந்தைகள்..ஏற்கனவே அண்ணா பல்கலையில் பொறியியல் படிப்பவர்கள்.பி எஸ்.சி அலைட் சயன்ஸ் படித்தவர்கள்..போன வருடம் பிளஸ் டூ பாஸ் செய்து இந்த வருடம் வரை நீட் தேர்வுக்காக 50000 வரை பணம் கட்டி படித்தோர்..மற்றும் என்னைப் போல் சில நபர்கள்..

முதல் நாளே அம்மாவும்.சக்தியும் தேர்வு விதிகளைப் படித்து எனக்கு சொல்லி இருந்ததால் நான் சாதாரணமான தோடு மட்டும் அணிந்திருந்தேன்
கையில் இருந்த வாட்சை அம்மாவிடம் கழட்டி தந்துவிட்டேன்..

சிலரின் புகைப்படம் சரி இல்லாதத்தால் உடனடி.போட்டோக்காரர் வந்து போட்டோ எடுத்துத் தந்தனர்

இங்க தான் தொடங்கியது..முதலில் எங்கள் அட்மிட் கார்டை வாங்கி சரி பார்த்தார்கள்.அதில் போஸ்ட் கார்ட் சைஸ் போட்டோவும்
பாஸ்போர்ட் சைஸ் போட்டோவும் ஒட்டப்பட்டுள்ளதா என சரி பார்த்தார்கள்..அதன் பின் ஆண்கள் வேறு பக்கமும் பெண்கள் வேறு அம்மணியிடமும் அனுப்பப்பட்டோம்.அந்த அம்மா எங்கள் புகைப்படம் சரி பார்க்கிறேன் பேர்வழி என்று எங்கள் முகத்தருகே தன் பல் தேயக்காத முகத்தை ஆறு முறை எங்கள் மூக்கருகே காட்டி நாங்கள் தான் என உறுதி செய்து கொண்டனர்..அதன் பின் வேறு ஒரு அம்மணியிடம் அனுப்பப்பட்டோம்..அந்தம்மா எங்கள் தலையை கலைத்து கலைத்து டார்ச் லைட் அடித்து பார்த்தார்கள்..சூரியஒளியில் தெரியாததை அந்த டார்ச் காண்பிக்கும் என்பதை யாரோ அவர்களுக்குத் தவறாக கற்பித்திருக்க வேண்டும்.அங்கிருந்து நாங்கள் மற்றொரு அம்மாவிற்கு மாற்றப் பட்டோம்..அந்த அம்மா கைகளை வைத்து கிச்சுலி காட்டியது போலவேமூன்று முறை செய்தார்..அடுத்த அம்மாவிடம் நாங்கள் அனைவரும் மாட்டிக் கொண்டோம். வந்திருந்த பெண்களில் இருவர் தவிர அனைவரும் ஜீன்ஸ் பேண்ட் லாங் டாப் அல்லது ஷார்ட் சர்ட் அணிந்திருந்ததால் அனைவரும் பேண்ட் க்கு பெல்ட் அணிந்திருந்தோம்
என்னோடு வந்த முஸ்லீம் பெண் புர்கா போட்டு உள்ளே ஜீன்ஸ் டாப் தான் போட்டிருந்தாள். பெல்ட் அனுமதி இல்லை என்று அந்தம்மா சொன்னதும் ஒரு பெண் அழ ஆரம்பித்து விட்டாள். அவளுக்கு பெல்ட் இல்லாமல் பேண்ட் நிற்காதாம்.எனக்குமே அதே நிலை தான். ஒரு வழியாக பெல்டை செக் செய்து அப்புறம் அனுப்புங்கள் என்று யாரோ ஒரு தெய்வம் வந்து சொல்ல நாங்கள் தப்பித்தோம்.

அதன் பின் காலணி..எனது காலணி சற்று ஷு போல் இருக்கும்.பெரும் பாலும் பின்னால் வார் வைத்திருந்த செருப்பு தான் போட்டிருந்தனர். முதலில் வேண்டாம் என்று  சொல்லி பின்னர் ஒப்புக் கொள்ளப்பட்டது.
அதன் பின் எனக்கான அறை நல்ல வேளை தரை தளம் தான்..நடந்து கொண்டே ஏ ஏ ஏ ஏ ஏ போன பிறகு பள்ளி கட்டிடம் வந்தது..அப்பாடா என்று பெரு மூச்சு விட்டு பெல் அடித்து..உட்கார்ந்து ஓ எம் ஆர் ஷீட் கொடுத்தால்..அப்படி பில் பண்ணுங்க..இப்படி செய்யாதீங்க என கத்திக் கொண்டே இருந்தார்கள்..
என் அருகில் இருந்த பெண் ரிஜிஸ்டர் நம்பர் சரியாகக் குறித்து விட்டு செண்டர் பெயர் தப்பாக குறித்து விட்டாள்..மேடம் உடனே திட்டவும் ஐந்தாம் வகுப்பு மாணவி போல் அழுதாள்..பிறகு அந்த மேடமே சமாதானம் செய்த பின்னர் தான் அமைதியானாள்..அடிக்கடி தண்ணீர் தந்தார்கள்...

இதற்கிடையில் வெளியூரிலிருந்து வந்த மாணவன் 9.40 ஆனதால் அழுது கொண்டே வந்தான்.
வெளியில் அவனை தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என்று சொல்லி விட்டார்கள். அவன் அழுது என் வாழ்க்கை கனவு என்று கதறி அழுததும் சில் பெற்றோரும் போலீஸும் சொன்னபிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டிருக்கிறான்..( அனுமதித்த அந்த அன்பு உள்ளங்கள் வாழ்க)

ஆனால் பாவம் அம்மா போன்ற பல பெற்றோர்கள் வெளியில் வெயிலில் காத்திருக்க நேர்ந்தது.ஒரு பந்தல் போட்டிருக்கலாம்
மோர் பந்தல் செய்யும் அரசியல் வாதிகள் இந்த பெற்றோருக்கு உதவி இருக்கலாம்..ஆங்காங்கே இருந்த மர நிழலில் காத்திருந்து கொடுமையாய் வெயிலில் நின்றே காலம் கடத்தி இருக்கின்றனர்..ஏன் இது போன்ற தேர்வு எழுதும் பள்ளிக்குள் பெற்றோர்களை அனுமதிப்பதில்லை.அவர்களில் சுகர் பேஷண்ட் அல்லது பிரஷர் இருந்தால் அவர்கள் நிலை என்ன?..

அம்மா மீண்டும் அந்தக் கொடூர வெயிலில்  வர வேண்டுமே எவ்வளவு நேரம் கழிப்பறைக்கு செல்லாமல் திரும்ப முடியும்.மீண்டும்.பயணித்தால் மூன்று மணி நேரம் ஆகுமே என்ற கவலைகள் என்னை பயமுறுத்தியது..
அங்கே 1.30 க்கு புறப்பட்டு வீட்டுக்கு 3.50 க்குத்தான் வர முடிந்தது.இதே பஸ் அல்லது ரயில் மாறி வருவதென்றால் இன்னும் அதிக நேரம் பிடித்திருக்கும்..காலையில் சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என்பதாலேயே அம்மா தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றார்.ஆனால் வெள்ளிக்கிழமை அலைந்து வந்ததோடு இன்றும் அலைந்ததால் அம்மா தான் பாவம்.. 

வெளியில் மோர் ஒரு டம்ளர் விலை 10 (நீர் மோர் என்று சொல்லப்பட்ட அதில் நீரின் விகிதாச்சாரம் சற்று கூடுதலாகவே இருந்ததாம் ) ஒரு மோசமான டீ விலை 10..தண்ணீர் பாட்டில் விலை இருபத்தைந்து....பாவம் அந்த மனிதர்கள் இந்த மாதிரி தான் சம்பாதித்துக் கொள்ள முடியும்
.
.
.
.
.
.
.
இன்றோடு தேர்வுகள் முடிந்தது என்று சொல்ல முடியாது நாளை முதல் சக்தியும் அம்மாவும் ஹிந்துஸ்தான் யுனிவர்சிட்டி..பாரு அண்ணா யுனிவர்சிட்டிக்கு அப்ளைப் பண்ணு..சத்தியபாமாவைப் பார்..வேல் டெக் பார்த்தியா...அப்படியே அந்த பிரிஸ்ட் யுனிவர்சிட்டியையும் பார் என்று சொல்வார்கள்...

நான் அதைக் கேட்கவும் தயாராக வேண்டும்

பின் குறிப்பு..தேர்வு எழுத தந்த பேனாவை திரும்ப கவனமாய் பெற்றுக் கொண்டனர்...

அதை வைத்து ஓசோன் ஓட்டையை அடைப்பார்கள் என நம்பப்படுவதால் அவர்களுக்கு இப்போதே நான் லொல்லூர் லூஜூ  விருது தருகிறேன்

Friday, 14 April 2017

புத்தாண்டு வாழ்த்துக்கள்.. (மிஸ் யூ ச க் தி

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

(பிளாஷ் பேக்)

வளைய வளையமா சுத்தவிட்டுக்கங்க...

அப்படியே தலையைத் திருப்பி மேலே பாருங்க...

முன்பொருமுறை..அம்மா பணிபுரியும் பள்ளியில்..இதே போல் ஏப்ரல் மாதத்தில் பேனா விற்பவர்கள் வருவார்கள்..கிராமப் புற பள்ளி என்பதால் தரம் இல்லாத பேனாக்களை மலிவான விலைக்கு விற்றுச் செல்வார்கள்..அப்படி ஒருவர் அம்மா பள்ளிக்கு வர மாணவர்களில் 100 பேர் பேனா வாங்கி இருக்கின்றனர்..தேர்வு நேரம் என்பதால் பேனாக்கள் தேவைப் படும் என்பதால் பெற்றோர்களும் காசுகொடுத்து வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.மகிழ்ந்து போன பேனா விற்பனையாளர் அம்மா தலைமை ஆசிரியர் என்பதால் அம்மாவுக்கு இரண்டு பேனாக்களைப் பரிசாக தந்து சென்றிருக்கிறார்..அப்போதெல்லாம் எனக்கும் சக்திக்கும் எப்போதும் ஒரு போட்டி வரும்.அன்றைய வீட்டுப்பாடங்களை அம்மாவின் பேனா வைத்து யார் எழுதுவது என்று..ஏனெனில் அம்மாவிடம் இருந்தது பார்க்கர் பேனா ஒன்று..மற்றொன்று கேம்லின் பேனா..மற்றது சிவப்பும் இன்னொன்று பச்சைப் பேனாவும் இருக்கும்.ஒருநாள் நான் பார்க்கர் பேனா.சக்தி கேம்லின் பேனா..மற்றொரு நாள் இருவரும் மாற்றிக் கொள்வோம்..அம்மாவின் பேனா வழ வழ என்று எழுதும்.அம்மா கட்டியான ஊதா மை நிரப்பி இருப்பார்..இப்படி பல காரணங்களால் நாங்கள்  அந்த பேனாக்களின் மேல் ஆசை வைத்திருந்தோம்..அன்றும் அவ்வாறே அம்மாவின் பேனா பையைத் திறக்க மேலும் இரண்டு புது பேனாக்கள்..

பள்ளியிலிருந்து கடைக்குப் போனீங்களாம்மா என்றாள்..இல்லை என்று பதில் வந்தது.ஏதும்மா இந்தப் பேனா என்று சக்தி கேட்கவும் பேனாக்காரர் வந்தார்.என்றதும்..ஹை..இந்தப் பேனாவை நான் வச்சுக்கட்டுமா அம்மா நு கேட்டுவிட்டு..இது எவ்வளவு ம்மா என்றாள்.பேனா.பென்சில்.ஒரு அழிப்பான்.ஸ்கேல்.பென்சில் சீவி எல்லாம் இருபது ரூபாய்..

எங்கேம்மா பென்சில் எரேஸர் எல்லாம் என்று மீண்டும் சக்தி கேட்க..இதை மட்டும் தான் தந்தார்.இன்று பள்ளியில் எல்லோருமே பேனாக்கள் வாங்கினார்கள்.அதனால் அந்த பேனாக்காரர் எனக்கு இந்த பேனாக்களைக் கொடுத்தார் என்று சொன்னதும் சக்தியின் முகம் மாறி விட்டது..அப்போது அவள் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். இந்த பேனா வாங்க காசில்லையாம்மா , ஏன்ம்மா..அவர் வேறு வேலை கிடைக்காமல் தானே இந்த பேனாக்களை விற்கிறார் அதை எப்படி நீங்கள் வாங்கலாம் என்று இருவருக்கும் வாக்குவாதம் ஆரம்பித்து விட்டது..நானா வாங்கலை அவராத்தான் கொடுத்தார் என்று அம்மா சொல்ல..எதுவும் சக்திக்கு ஏறவில்லை..
சக்திக்கு பிடிக்காத விஷயத்தை நாம் செய்து விட்டால் அவள் பேசவும் மாட்டாள் சாப்பிடவும் மாட்டாள்..அன்று பார்த்தா அம்மா பூரி செய்ய வேண்டும்.சக்தி சாப்பிடலைனா எனக்கும் மனசு கஷ்டமாகும்.சாப்பிடாமல் இருக்க முயற்சி செய்வேன்.ஆனா கடைசியில் பசி வெல்லும்.இவர்களுக்குள் என்ன தான் நடக்குதுன்னு பார்ப்போம்னு அவர்கள் வாக்குவாதத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டேன்.சரி இனிமே வாங்கலை என்று எத்தனையோ முறை அம்மா மன்றாடியும் சக்தி கேட்கவே இல்லை. சரி இந்த மாதம் ஏதேனும் ஒரு போட்டி வச்சு உங்கள் மாணவர்கள் எல்லோருக்கும் ஒரு பேனா பரிசு கொடுங்கள் என்று சக்தி தீர்ப்பு சொல்லி விட..ஹைய்யோ அதற்கு 300 ரூபாய் ஆகும்.பெட்ரோலுக்கு மட்டும் தான் காசு இருக்கு வேற பநம் இல்லைடா என்று அம்மா சொன்ன போதும் சக்தி விடாப்பிடியாய் தன் தீர்ப்பை மாற்றவில்லை..( இவளைத்தான் கர்நாடக அரசை தண்ணீர் தர அனுப்ப வேண்டும்)

அன்றும் மறுநாளும் சக்தி அம்மாவோடு பேசவில்லை..சக்திம்மா சக்திம்மா என்று கெஞ்சியும்.பேசவில்லை..இல்லைம்மா..பேசாமல் இருந்தால் தான் அந்த வலி தெரியும்.பேசினால் நான் சாப்பிட மாட்டேன்.என்ன செய்யம்மா என்று கேட்க. சரி சக்தி நீ சாப்பிடு நா பேசலை என்று ஒருவாறாக அந்தப் பிரச்சினை முற்றுக்கு வந்த்தது.( அப்பாடா..அன்று பூரிக்கு கிழங்கோடு பட்டாணியும் போட்டு செய்யப்பட்டிருந்ததை இழக்க வேண்டி வருமோ என்று நான் ரொம்பவே பயந்து போனேன்)

அடுத்தடுத்த நாட்களில் அம்மாவுக்கும் சக்திக்கும் இடையில் நான் தான் தூது..வேணுமா கேளு..சொல்லு என்று அருகில் இருந்து கொண்டே என்னிடம் பேசுவார்கள்..எனக்கே வேடிக்கையாக இருக்கும்..ஆனால் இதைப்பார்த்து நான் சிரிக்கப் போய்..ஸ்டாலினைப் பார்த்து சிரித்த ஓ பி எஸ் நிலையாய் மாறிவிடுமோ என சிரிப்பை அடக்கிக் கொள்வேன்..

அந்த மாத இறுதியில் அம்மா பள்ளிக்கு சைக்கிளில் செல்ல நேர்ந்தது..பார்ப்போர் எல்லாம் என்ன சைக்கிள் ல போறீங்க என்று கேட்க..இல்லை..உடற்பயிற்சி என்றே அம்மா சொல்லி சமாளிச்சாங்க..

அம்மா தினமும் கால் வலியால். அவதிப்பட்டு துடித்த போதும் அவள் அந்தப் பணத்தில் பேனாக்கள் வாங்கி பள்ளிக்கு சென்று அவளே வழங்கினாள்.அந்த அளவுக்கு சக்தி உறுதியானவள்.( ஆனா இந்த நேர்மை எல்லாம் கொஞ்சம் ஓவர் தான் சக்தி)

இதே போன்ற ஒரு தமிழ் புத்தாண்டு அன்று தான் மீண்டும் இருவரும் பேசிக் கொண்டார்கள்..சக்தி கோபப்பட்டால் நான் நேராக அடுப்படிக்குச் சென்று அன்று இரவு என்ன டிபன் ? அதை இழக்கலாமா வேணாமா என்று மனதிற்குள் பட்டிமன்றம் வைத்து..அதன்படி வேண்டுவதே என் வழக்கமாயிற்று..

சக்தியைப் பொருத்தவரை இலவசமாய் யாரிடமும் ஏதும் வாங்கக் கூடாது.அது அரசாங்கமே தந்தாலும்.
இப்படித்தான் பழைய அரசு இலவச தொலைக்காட்சி பெட்டி அறிவிக்க முதல் முறை அம்மா போய் அதை வாங்கவே இல்லை..மறுமுறை எங்கள் வீட்டு வாசலில் கொட்டகை போட்டு வாங்காதோர் பட்டியலில் அம்மா பெயரை சத்தமாக வாசித்துக் கொண்டே இருந்தார்கள்..அதுவும் அந்த பகுதி உறுப்பினர் அம்மாவின் பள்ளி வயது தோழர் என்பதால் அம்மா கூட்டத்தில் சிக்கி இருக்கலாம் என்று கூடுதலாக இரண்டு முறை கூப்பிட்டார்.சக்திக்குத்தெரிந்தால் அவ்வளவுதான்..அம்மா வாங்கக் கூடாது என்றே நான் வேண்டிக்கொண்டேன்..அன்றும் வீட்டில் பூரியும் குருமாவும்.

விழா முடிந்த பின்னர் அந்த அங்கிள் வீட்டுக்கே வந்து என்ன சுவாதி நீ ஏன் வரலை? உன் பெயரை நான் ஐந்து முறை கத்தினேன்..இந்தா இந்த ரிஜிஸ்டரில் கையெழுத்து போடு..என்று சொல்லிவிட்டு உதவியாளர்கள் கொண்டு வந்த பெட்டியை உள்ளே வைத்தார்..(ஆஹா...)

இல்லை மணி..எனக்கு இலவசம் வேணாம் நீயே வச்சுக்க..இல்லாட்டி யார்ட்டயாவது கொடு..என்று அம்மா சொல்ல.. உன் பிள்ளைகள் தான் நல்லா படிப்பாங்களே ஏன்..இப்பவே டிவி வேணாங்குறே..பத்தாவது வந்தா நிப்பாட்டிக்கலாம்.அரசாங்கம் சும்மா கொடுக்குறதை ஏன் விடணும்னு அவர் மீண்டும் சொல்ல..இல்லை மணி..படிச்ச நாமே இலவசம் வாங்குறதால தான் அவங்க இலவசம் கொடுக்குறாங்க..அதனால வேணாம் என்று மறுத்து ..நீண்ட வாதத்திற்குப் பிறகு அவர் கொண்டு வந்த டிவியை எடுத்துப் போய்விட்டார். அவரோடு வந்தவர்கள் டீச்சரம்மான்னா டீச்சரம்மா தான்..இப்படி நாட்டுல நாலு பொம்பிளை இருந்தால்.போதும்னு பாராட்டிக்கிட்டே போனாங்க...

ஆனா அடுத்த முறை இதெல்லாம் ஏதும் தெரியாத டாடி..இலவசமா கொடுத்த பேன் மற்றும் மிக்ஸியை வாங்கி வந்துவிட...அவரோடு ஆறுமாதம் பேசவில்லை...

இன்று நான் தென்காசியில் இருக்கிறேன்.தாத்தா ஆச்சியுடன்..அம்மாவும் சக்தியும் சென்னையில்..என்னை நினைத்தே சக்தி மதியம் வரை சாப்பிடலை..மனசுக்குக் கஷ்டமா இருந்தாலும் அந்த அன்பை  நினைத்து பெருமை கொள்கிறேன்..

( அம்மாவின் பாயாசமும் வடை..கூட்டு வறுவல்...இதையும் இன்று இழந்தாலும் இன்று உலகம்மன் கோயிலுக்கு சென்றோம்..இரவு ராமேஸ்வரம் செல்கிறோம்...)

மிஸ் யூ சக்தி