Wednesday 31 May 2017

அம்மா கிளம்புகிறாள்...

அம்மா கிளம்புகிறாள்...

அம்மாவுக்கும் எங்களுக்குமான ஒட்டுதல் எல்லா பிள்ளைகளும் அம்மாவும் போல் இல்லை..சுவாதி சற்றே வித்தியாசமானவள்...

தனக்கு துன்பம்.வரும் போதெல்லாம் பாரதியார் கவிதைகளை எடுத்துப் படிப்பாள்.அது தான் அம்மாவின் பைபிள்.அல்லது கீதை அல்லது குரான்..

அம்மா எங்களது சிறு பிராயத்தில் பல கதை புத்தகங்கள் நூலகத்திலிருந்து எடுத்து வருவாள்..சனி ஞாயிறு என்றால் எல்லோரும் தூங்குவார்கள்.ஆனால் அம்மா அன்று தான் நான்கு மணிக்கு எழுந்து..துவைத்து..சமைத்து காலை 7 மணிக்கெல்லாம் எங்களையும் தயார் படுத்தி விடுவாள்.எதற்கு? படிக்க...அதுவும் கதை புத்தகங்கள்...அந்த அறியாத பருவத்திலேயே...இது கைக்கிளைக்காதல் கதை...பெருந்திணைக் காதல் என்பாள்..

தமிழின் நுணுக்கங்கள் எங்களுக்கு வந்தெல்லாம் மிக இயல்பில்...

பாரதியார் பாடல்கள்..சுஜாதா..எஸ் ராமகிருஷ்ணன்.பா.ராகவன்..வாஸந்தி..ஆண்டாள்.பிரிய தர்ஷினி..ஜெயகாந்தன்.முகில்..பட்டுக்கோட்டை பிரபாகர்.இந்திரா பார்த்தசாரதி..தேவன்.சுபா..புதுமைபித்தன்..ராஜம்கிருஷ்ணன்..விந்தன்..நாஞ்சில் நாடன்..வண்ணதாசன்..பிரபஞ்சன்..அனுராதா ரமணன்..கி ராஜநாராயணன்.கல்கி கிருஷ்ண மூர்த்தி..ரா.கி.ரங்கராஜன்..லா.சா ராமாமிர்தம்..சிவசங்கரி..ரமணிச்சந்திரன்..என்று பற்பல கட்டுரைகள்..கவிதைகள்..கதைகள்
என்று எல்லா வடிவங்களையும் எடுத்து வந்து படித்துக் காண்பிப்பாள்..பசி எடுத்தால் சாப்பிட்டு மீண்டும் படிப்போம்..மூன்றாம் வகுப்பு அல்லது அதற்க்கு சற்றே முந்தையகாலத்தில் இருந்தே நானே நூலகத்தில் புத்தகங்களை தேர்வு செய்து படிக்க ஆரம்பித்து விட்டோம்...பள்ளிப்பாடங்களை விட இந்த சனிக்கிழமை ஞாயிற்றுக் கிழமைக்காகக்.காத்திருக்க ஆரம்பித்தோம்...

நீங்கள் சுவாதியைப் போல் அம்மாவை எங்கும் காண இயலாது..

எங்கள் இருவரையும் சைக்கிளில் வைத்துக் கூட்டி வருவாள்..வண்டியில் வைத்துக் கூட்டி வருவாள்...பள்ளி நேரம்.போக கடைகளில் கணக்கு எழுதினாள்..பணக்கார வீடுகளுக்குச் சென்று டியூஷன் எடுத்தாள்..இப்படியாக பல அவதாரங்கள் அம்மாவுக்கு...எங்களையும் கவனித்துக் கொண்டு இரண்டு பேருந்துகள் மாறி பள்ளி சென்று..தனது இலக்கியப்பணிகளையும்.கவனித்துக் கொண்டு அம்மா எப்போதும் சிரமப்பட்டாள்..ஆனால் எப்போதும் புன்னகையுடன் தான் இருப்பாள்..அம்மா யார் என்ன சொன்ன போதும் எது நடந்தாலும் சோர்வு கொள்ள மாட்டாள்...

ஆரம்பம் முதலே அப்பா எங்களோடு இல்லை..அப்பாவின் குரல் எப்போதேனும் தொலைபேசி வழியாக கேட்கும்..

ஆனால் அம்மா எங்கள் இருவருக்கும் பீஸ் கட்ட..வீட்டு வாடகை கொடுக்க..மளிகை வாங்க..என்று எல்லா செலவுகளுக்காகவும் திண்டாடுவாள்
அப்போதும் அவள் முகம் சிரித்த வண்நம் தான் இருக்கும்.நான் எந்தப்பள்ளியில் படித்தாலும் அம்மாவின் தோழிகளாக..தோழர்களாக அந்த ஆசிரியர்கள்..பள்ளி முதல்வர்கள் இருப்பார்கள்..அம்மாவின் பழகும் விதத்திற்கு.எங்கும் அன்பு மயம் தான்.அம்மாவை நேசிக்காதோர் யாருமில்லை..எதுவும் தெரியாத இந்த சென்னையில் சக்தியின் கல்லூரி வாகனம் ஓட்டுபவரிலிருந்து..வகுப்பு நடத்தும்.பேராசிரியர்கள் வரை எல்லோரும் அம்மாவின் நட்புகள் தான்.

இதுவரை நான்.படித்த பள்ளிகளில் எல்லாம் என்னுடன்.படிப்போர்கள் அம்மாவைப் பார்த்து பொறாமைப்.படுவார்கள்..உங்கம்மா எப்படி டீ இப்படி பேசுறாங்க..ரொம்ப அழகாவும் இருக்காங்க..என்பார்கள்..எனக்கும் சக்திக்கும் எப்போதும் பெருமை பூரிக்கும்..

அம்மா எப்போதேனும் கோபப்பட்டால்..ஹைய்யே சுவாதி இந்த ரோல் உன் முகத்துக்கு நல்லா இல்லை..நீ காமெடி பீஸ்..உனக்கேன் சீரியஸ் முகம் என்றால் அம்மா சிரித்து விடுவாள்..

எங்களுக்கென பயத்தமாவு அரைப்பாள்..( இதுவரை நாங்கள் குளியலுக்கு சோப்பு உபயோகித்ததில்லை) தலைக்கு சீயக்காய் அரைக்க அலைவாள்.உடல் நலமில்லை எனில் முதலில் கஷாயங்கள்.பிறகு தான் வைத்தியம்.அதுவும் ஹோமியோ முறைகள்..

இங்கும் சம்பளம் வராத இந்த ஆறு மாதத்தில் உதவி இயக்குநர் என்ற பெயரில் சாதாரண வேலைகள் செய்தாள்..

முதல் நாள் இரவு 8 மணிக்கு புதுகையில் கிளம்பினால் தான் சென்னையில் எங்கள் இருப்பிடத்திற்கு காலை ஆறு மணிக்கேனும் வர இயலும் விடிய விடிய பேருந்தில் அரை குறையாக உட்கார்ந்தே தூங்கி..இங்கே வந்ததும் தான் புதுகையில் இருந்தே வாங்கி வந்த காய்களை வைத்து சமைக்க ஆரம்பித்து விடுவாள்..சமைச்சுட்டு ரெஸ்ட் எடுக்கிறேன் என்பாள் ஆனால் அதன் பின் கையால் துவைக்கும் துணிகளைப் பிரித்து துவைக்க அமர்ந்து விடுவாள்..சனி.ஞாயிறு இரு தினங்கள் மட்டுமே இருக்கும் பொழுதுகளில். இட்லி பொடி அரைத்து..வத்தல் குழம்பு பேஸ்ட் செய்து.கடை வீதிக்குப் போய்.காய்.பழம் மற்ற பொருட்களை வாங்கிப்வைக்கும் முன் ஞாயிறு மதியம் ஆகிவிடும்..ஆனாலும் அம்மா சலிக்காமல் செய்வாள்..

பிஸினஸ் ஆரம்பிக்க என்று தன்னிடம் இருந்த பணத்தை எல்லாம் அப்பாவிடம் கொடுத்து அந்தப் பணம் ஒன்று கூட திரும்பி வராத போதும் அம்மா அதே போலத்தான் இருந்தாள்

.அம்மாவிற்கு என்று பிரத்தியேக ஆசைகள் ஏதுமில்லை.எங்கள் இருவரையும் படிக்க வைப்பது தவிர..

அம்மாவிற்கு இரண்டு முறைகள் அறுவை சிகிச்சை நடந்த போதும் மூன்றாம் நாளிலிருந்தே அம்மா தான் சமைத்தாள்..அவள் அம்மாவும் அப்பாவும் அம்மாவிடம் கோவித்துகொண்டு போன போதும் அம்மா அன்பானவளாக.அயராதவளாகவே இருந்தாள்..

அவள் நொறுங்கி கவலையுற்று இருந்த காலமெனில் அம்மா இப்போது ஆறு மாதமாக ஊதியம் வழங்கப்படாத நாட்கள் தான்.சற்றே சோர்ந்து போனாள்.அவளுக்கென யாரும் பண உதவிக்கு என்று இல்லாத நிலையில் தடுமாறிப் போனாள்..எனக்கும் சேர்த்து இந்த வருடம் கல்லூரிக்குக் கட்ட வேண்டும் என்ற நினைவே அம்மாவிற்கு பல உடல் உபாதைகளைத் தந்துவிட்டது.தாங்க முடியாத இடுப்பு வலியாலும் கால் வலியாலும் தவித்தாள்..ஆனாலும் அவளே சமைத்தாள்.துவைத்தாள்
படுத்துக் கொண்டாள்..

இங்கே கிண்டி.வடபழனி.கோயம்பேடு.வளசரவாக்கம்.விருகம் பாக்கம்.ஆழ்வார் திருநகர்.இந்தப்பக்கம் தரமணி.மேடவாக்கம்.ஓ.எம்.ஆர் என்று எல்லா இடங்களுக்கும் கூட்டிப் போனாள் வண்டியிலேயே.வேளச்சேரி நூலகம்.அண்ணா நூற்றாண்டு நூலகம் கூட்டிப் போனாள்.கறிவேப்பிலையிலிருந்து அரிசி.ஆடை அல்லது வேறு பொருட்கள் வரை வாங்குவது அம்மா தான்..

அம்மாவின் அக்கறையும் அன்பும் உழைப்பும் பிரத்தியேகமானது.

அழகிய தயிர் சாதத்தில் தன் கையில் எடுத்து கட்டைவிரலால் கீறி அதில் வத்தல் குழம்பை ஊற்றி ஒரு வாயும் துவையல் வைத்து ஒரு வாயும் கூட்டு வைத்து ஒரு வாயும் தரும் போது ஒரு ஊரை எழுதி வைக்கலாம்.

அம்மா ஸ்பெஷல்= பூரி கிழங்கு..சாம்பார்..பருப்பு வடை.  பருப்பு உருண்டை குழம்பு வைப்பதில் எக்ஸ்பர்ட்...சமீப காலத்தில் பனீர் பட்டர் மசாலா

அம்மா ஒரு போதும் தலையில் பூ வைத்துப் பார்த்ததில்லை..ஆனால் கையில், பையில் புத்தகம் இல்லாமல் பார்த்ததே இல்லை..

அம்மா சொல்கிறாள் நாங்கள் இருவரும் அம்மாவுக்கு தேவதைகளாம்..ஆனால் அம்மா தான் எங்கள் தேவதை

நான் வேறு ,,அம்மா எனக்கு நான்கே ஆடைகள் தான் இருக்கிறது..காலேஜ் சேர்த்தால் டிரஸ் வேணுமில்ல என்று சொன்னதிலிருந்து அம்மாவின் மன அழுத்தம்.அதிகமாகிப் போனது. 

கல்லூரியில் இப்போதே 30000 கட்ட சொன்னார்கள்.இப்போதைக்கு எங்கள் ராதா அங்கிளிடம் வாங்கி( இவரைப் பற்றி தனியாக ஒரு கட்டுரை எழுத நினைத்துள்ளேன்) கட்டியாகிவிட்டது..ஆனால் மீதி தொகை எப்படிக் கட்டுவது என அம்மாவுக்குக் குழப்பம் தீரவில்லை.

பல்கலைக்கழக கட்டணம் மட்டும் கேட்கும் சில கல்லூரிகளில் நான் நினைப்பது போல் லேப் இல்லை.பிளேஸ்மெண்ட் இல்லை..அதனால் தான் இக்கல்லூரி தேர்ந்தெடுத்தேன்..அம்மாவைப் பார்க்க பாவமாக இருக்கிறது.ஆனால் அம்மா இதையும் சமாளித்து மீண்டு வருவாள்..

தனக்கென எழுதும் ஆற்றல் பேசும் ஆற்றல் இருந்தும் தன்னை...தன் திறமைகளை வளர்ப்பது பற்றி எண்ணாமால்   எங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் அம்மா  ..குக்கரில் தனக்கென மேல் டப்பாவில் ரேஷன் அரிசியையும் கீழ் டப்பாவில் பொன்னி அரிசியையும் வைக்கும் அம்மா..இன்று ஊருக்குக் கிளம்புகிறாள்..



இப்போ
இனி நாளை முதல் நானே தலை பின்னிக் கொள்ள வேண்டும்.நானே சமைத்துக் கொள்ள வேண்டும்..

அம்மா போன் செய்யும் போது ம்ம்ம்ம்ம் சாப்பிட்டேனே..பால் வாங்கி காப்பி போட்டுக் குடிச்சிட்டேனே..என்று பொய் சொல்ல வேண்டும்..
வெறும் சோற்றின் முன் அமர்ந்து பருப்பு தாளிச்சேன்..உருளைக்கிழங்கு வறுத்தேன்.வெண்டைக்காய் செய்தேன் என்றும் பொய் சொல்ல வேண்டும்..

ஒரு வேளை நாளைய இந்த உலகத்தில் நான் ஏதேனும் சாதித்தால் அதன் பெருமை அத்தனையும் அம்மாவை மட்டுமே சாரும்..ஒருவேளை இல்லை எனில் அம்மாவிடமிருந்து நாங்கள் முறையாகக் கற்கவில்லை என்றே அர்த்தம் கொள்ளலாம்.

ஆனால் சாதிப்போம்..

எப்போதேனும் அம்மாவை காலையில் நிதானமாக எழுந்திரிக்க வைக்க வேண்டும்.அவளுக்கான உணவுகளோடு அவளுக்கான புத்தகங்களையும் கொடுத்து அமைதியாக வாழ வைக்க வேண்டும்..இந்த ஓய்வற்ற உழைப்பில் இருந்து அவள் தப்ப வேண்டும்..அது தான் எனக்கும் சக்திக்குமான ஆசை..

என்னிடம் இருக்கும் இந்த குழந்தைமையை யாரேனும் வாங்கிக் கொண்டால் தேவலை..அது தான் இப்படி அம்மாவோடு இருக்க அடம் பிடிக்கிறது..தேம்பித் தேம்பித் தேம்பி இப்படி எழுத வைக்கிறது..மாடிக்குப் போய் அம்மாவின் உருவம் மறையும் வரை அழுகையை துடைத்து துடைத்து விட்டு பார்க்க வைக்கிறது..


11 comments:

  1. நெகிழ்ச்சி

    ReplyDelete
  2. புத்தகம் தந்து விட்டாள் வேறென்ன வேண்டும் .. நீங்கள் வளம் நலம் பெற அம்பிகை அருள்க

    ReplyDelete
  3. வாழ்வில் வரும் சிறு சோதனை பாடம்... உங்களின் அன்பு உள்ளத்தால் எதையும் சாதிப்பீர்கள்...

    ReplyDelete
  4. கண் கலங்கிட்டேன்

    ReplyDelete

  5. எழுத்தும் ,நடையும் அருமை.நீங்கள் பேசிக் கேட்பது போல் இருந்தது. முன்னுதாரணமான தாய்.தாயுமானவன் என்று சொல்வது போல் தந்தையுமானவள் என்று சொல்லலாம் ஸ்வாதி அவர்களை.

    நல்ல குடும்பம் .வாழ்கவளமுடன்.

    M.சூர்யா,திருநெல்வேலி

    ReplyDelete
  6. Amma valartha pillaigal, ammavin kanneerai kandu, unarndhu valarndha pillaigal oru naalum yaridamum mandiyittu vazha matargal surya. Un aasaiyum, shakthiyin aasaiyum kandippa niraiverum. Unarvinai azhagaga ezhudha therindha ungaluku uravin unnadhamum puriyum. Ammavin unmaiyana uzhaipum, thooymaiyana anbum, ungalin thevaigalai poorthy seyya mudiyamal veliyil sirithu kondu ullukkul kanneer vidum un appavin yekkangalum ungalai unmaiyileye uyarthum kanmanigale!! Indha uncle vazhthugiren Iraiyarul pongi perugattum ungal vazhkaiyil. Negizha vaithu vittay kutty...

    ReplyDelete
  7. Your ambition is just like a diamond with best wishes from

    ReplyDelete