Thursday, 11 February 2016

பக்தியா...பலமா? பாவமா? ....பாசமா?...

இப்படி ..ப....ப...என்று பதிவு போட வைத்து விட்டது இந்த வார விடுமுறை நிகழ்வு.

(அம்மா மேல இருந்த பாசத்தால...(எங்க சொந்த அம்மா மேல இருந்த பாசத்தால...வந்தவினை இது)

சமீப காலமய் கோயிலையும் அதன் நடைமுறைகளையும் அங்கு நடக்கும் வன் கொடுமைகளையும் கண்டு  கோயிலை வெறுத்த நான் அம்மா சற்று மன அழுத்தத்தில் இருந்ததால்...( மறுபடியும் எங்க அம்மாவைத்தான் சொல்லிகிறேன் என சத்தியம் பண்றேன்) திருப்பதி கோயிலுக்குப் போகணும் என்று சொன்னதும் சரி என்று தலை ஆட்டி வைத்தது தான் பாசத்திற்காக நான் செய்த பாவம்....

சக்தி (என் சகோதரி) எப்போதுமே கொஞ்சம் ரிஸ்கான விஷயத்தில் தப்பித்துக் கொள்கிறாள். ஒருவேளை எனக்குத்தான் அந்தப் பக்குவம் இல்லையோ என்னவோ? மறுநாள் வண்டி வண்டியாய் படிக்க இருக்கு என்றும் “வெங்கி” யைக்  கேட்டதாகச் சொல்லு..அடிக்கடி ஆன்லைனுக்கு வரச்சொல்லு என்றும் விடை கொடுத்து அனுப்பிவிட்டாள்...

விடிகாலை 4 மணிக்கு எழுந்து...( இல்லை எழுப்பி விடப்பட்டு) குளித்தும் குளித்ததாகப் பேர் பண்ணிக்கொண்டும் கிளம்பி 5 மணிக்கு ஏரிக்கரை பேருந்து நிறுத்தத்தில்நின்றோம். ஒரு ஆட்டோவில் சென்னை செண்ட்ரலுக்கு அழைத்து சென்றார்கள்..( வேறு யார்? அம்மாவும் அப்பாவும் தான்) அங்கு முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டு வாங்கப்பட்டது. மூவருக்குமே ரூபாய் 195/ மிகச் சரியாக 6.25க்கு கிளம்பிய சப்தகிரி எக்ஸ்பிரஸ் ர்யில் எங்களை 9.45 க்கெல்லாம் மலை அடிவாரத்தில் விட்டு விட்டது. ஒரு ஜீப் பிடித்து (தலைக்கு ரூபாய் 70 வீதம் மூவருக்கும் ரூபாய் 210) 11 மணிக்கு திருப்பதி சென்றடைந்தோம். ஒரே நாள் தான் பயணத் திட்டம் என்பதாலும்,முதல் நாள் இரவு தான் முடிவெடுக்கப்பட்டதாலும், அம்மா உணவுப் பொருட்களோ ( நல்லவேளை பிழைத்தேன்) அல்லது வேறு லக்கேஜோ ஏதும் இல்லை., என்பதால், செல்போன் மற்றும் ஒரு சிறிய பயணப்பை (டிராவல் பேக்)  கிளோக் ரூமில் கொடுத்து விட்டு இலவச தரிசனத்திற்கு 11.10 க்கு வரிசையில் நின்றோம்.கட கடவென உள்ளே அனுமதிக்கவும் எனக்கு ஒரே குஷி.

அம்மாவின் திட்டப்படி 2  மணிநேரத்தில் சாமி பார்த்து விட்டு அருகே இருக்கும் பூங்காவில் அமரணும். வெளியே போடப்பட்டிருக்கும் நீண்ட திற்ந்தவெளி திரை அரங்கில் அமர வேண்டும். ( ”தெறி” யா போடுவார்கள்??சாமி படம் தான் இருந்தாலும்???)  புகைப்படங்கள் எடுக்க வேண்டும். இங்குள்ள மல்லிகைப்பூ அதிக வாசம் வரும் என்பதால் வாங்க வேண்டும் என்பதெல்லாம் யோசனைகள், பகிர்தல்கள், என்று பலவிதமான திட்டங்களை அம்மா சொல்லவும் எனக்கே ரொம்பவும் பிடித்திருந்தது.

இரவு வீட்டிற்க்கு 8 மணிக்குபோய் விடலாம். மீண்டும் அம்மாவும் அப்பாவும் மட்டும் கண்ணதாசன் பதிப்பகத்தின் உணவகத்தில் சோளதோசை, கம்பு தோசை, ( இங்கு மிக மிக மலிவான விலையில் பாராம்பரிய உணவுகள் கிடைக்கும்)  வாங்கிச் சாப்பிடணும் என்று திட்டங்கள்...இது அதைவிட இன்னும் அதிகமாய் எனக்குப் பிடித்திருந்தது.

ஆனால் நடந்ததைக் கேளுங்கள்.

11.10 க்கு ஒரு அறைக்குள் அடைத்தார்கள். அங்கேயே லட்டுக்கு ஒரு கவுண்டர் அமைக்கப்பட்டு, வரிசையில் நிற்க வைத்தார்கள். அதிலும் முதல் இரண்டு லட்டுக்கு 20 ரூபாயாம். அடுத்த இரண்டு லட்டுக்கு 50 ரூபாயாம். ஒரு நபர் 4 லட்டுகள் பெறலாம். அதற்கும் வரிசையில் நின்று, தள்ளு முள்ளு பண்ணி எல்லோரும் லட்டுக்கான டோக்கன் பெற்றுக் கொண்டார்கள்.

அதெல்லாம் விடுங்கள்.

ஒரு மணிக்கு சாம்பார் சாதம் வந்தது. மீண்டும் கூச்சல், தள்ளு முள்ளு, வரிசை அமைப்பு, ஆளாளுக்கு இரண்டு தட்டுகள் வாங்கிச் சாப்பிட்டு தங்கள் ஜன்மபலன் அடைந்து கொண்டார்கள். ( என் அம்மாவும் தான்)

2 மணி ஆனது.. 3 மணி ஆனது. மக்கள் அருகருகே இருக்கும் கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் ( எனக்கு கூண்டு போல் தான் தெரிந்தது . நீங்கள் வேண்டுமானால் அறை என்று சொல்லிக் கொள்ளுங்கள்.))எங்கள் அறைகளில் இருந்தவர்கள், மூன்று அறைகளிலிருந்தும் ஓ! ஓ!கோவிந்தா? கோவிந்தா? ஓ!ஓஒ! என்றும் கத்தக் தொடங்கினார்கள்.( பெண்கள் உட்பட )


உடனே டிராலி கொண்டு வரப்பட்டு சாம்பார் சாதம் விநியோகிக்கப்பட்டது. சென்றமுறை இரண்டு தட்டுகள் வாங்காதவர்கள் இம்முறை மூன்று முறை வாங்கி வஞ்சம் தீர்த்துக் கொண்டார்கள்.அதே தள்ளு முள்ளு, கூச்சல், வரிசை, வரிசையற்ற முறை எல்லாம் இருந்தது. ( இவர்கள் ஒரு தடவை கூட ரூல்ஸ் பாலோ பண்ண மாட்டாங்களா????)

மீண்டும் 4 மணிக்கு ஒரு முறை ஓ? ஓ/ என்று கத்தி ஓய்ந்தார்கள். 4.30 மணி முதல் 4.45 வரை ஓ ஓ கோவிந்தா கோவிந்தா என்று கத்தி எடுத்தார்கள். வான் உலகம் இருப்பது உண்மையானால் அந்த கோவிந்தனுக்கு சத்தியமாய்க் கேட்டிருக்கும்.

அதே போல் ஒரு டிராலி வந்தது. இந்தமுறை பேப்பர் கப்புகளில் பாலும் அதில் தேயிலைத் தூள் முடிச்சுகளும்.```அதே போலவே சண்டை போட்டு. கூச்சல் போட்டு, ஆளுக்கு 4 ,அல்லது 5 முறை வாங்கி  அருந்தி புளங்காங்கிதம் அடைந்து கொண்டார்கள். ( தேநீரை ஒரே சமயத்தில் 4 முறை அருந்த இயலும் என்பதை அன்று தான் கண்ணுற்றேன்)

இரவு 7 மணி ஆனதும் மக்கள் ஒரு நிலையில் இல்லை. பாதிக்கு மேல், இருக்கும் இடத்திலேயே கவிழ்ந்து படுத்து, சாய்ந்து ஓய்வாக இருந்தாலும் , மீண்டும் பொறுமையிழ்ந்து ஓ..ஓ...ஓ...ஓஒ...கோவிந்தா...என்று கத்த ஆரம்பித்தனர்.

மீண்டும் டிராலி. மீண்டும் சாம்பார் சாதம்

ஏதோ வாழ்க்கையின் மிகப் பெரிய சாதனை செய்து விட்ட மகிழ்வில் இரண்டு தட்டுகள் மூன்று தட்டுகளை வாங்கி விழுங்கி வைத்தனர்.

இப்போது மீண்டும் சற்று சலசலப்பு குறைந்தது. வரிசையில் நின்று வாங்கவும் சாப்பிடவும் நேரம் கழிந்தது.

உள்ளே இருந்த மக்கள் எங்களை உள்ளே அடைத்து வைத்து பூட்டு போட்டு வெளியே காவலுக்கு துப்பாக்கியோடு நின்ற காவலரிடம் கேட்டு கேட்டு பிஸ்கட், பழம், வாங்க போய், வந்து, வந்து, போய்,,, கொண்டே தான் இருந்தார்கள்..( மூன்று தட்டுகளும் பத்தலையோ)

சிறு பிள்ளை எனக்கே நன்றாகத் தெரிந்தது. மக்கள் பொறூமை இழந்து கத்தும் போதெல்லாம் டிராலி கொண்டு வரப்பட்டது என்று. ஆனால் வளர்ந்த இவர்களுக்குப் புரியாமலா இருக்கும்??? அங்கு வந்திருந்தவர்களில் குழந்தைகள், சக்கரை நோயாளிகள், வயோதிகர்கள், முதியபெண்கள், இவர்களெல்லாம் கூட அதே கொடுமையை அனுபவித்தார்கள்.

ஒரே இடத்தில் இருக்கலாம் என்றாலும் எவ்வள்வு நேரம் இருக்க முடியும்? நிழல் தான் என்றாலும் எல்லோருக்கும் எவ்வள்வு வேலைகள் இருக்கும்??


இதே நம்ம ஊரில் அதாவது நமது மாநிலத்தில் பழனி, திருச்செந்தூர், சமயபுரம், இராமேஸ்வரம், திருத்தணி, வைத்தீஸ்வரன் கோயில், தஞ்சை பெரிய கோயில், கும்பகோணம் ராகுகேது கோயில், ஸ்ரீரங்கம்மதுரை மீனாட்சி கோயில்,,,, என்று எங்காவது இந்த சட்டதிட்டங்கள். விதி முறைகள் உண்டா? அப்படி இருந்தாலும் தங்களை பக்தர்கள் என்று சொல்லிக் கொள்ளும் மக்கள் சும்மா இருப்பார்களா? இப்படிக் காத்திருப்பார்களா?

அருகில் இருந்த ஒரு பெண்மணி, பொறுமை இழ்ந்து காவலுக்கு இருந்த அந்தக் காவலரிடம் ஆங்கிலத்தில் நாங்கள் சிறையில் இருப்பது போல் உணர்கிறோம். 9 மணி நேரம் ஆச்சு ஏன் இன்னும் திறக்கப்படவில்லை என்று கேட்டதற்கு, அந்த காவலர் சொன்ன பதில் என்ன தெரியுமா? உங்கள் யாரையும் நாங்கள் அழைக்கவில்லை. தமிழர்கள் ஏன் இங்கே வருகிறீர்கள்? காத்திருக்க பிடிக்கவில்லை என்றால் 300 ரூபாய்க்கு போகவேண்டியது தானே என்றார். இதே நம் தமிழகத்தில் சொல்ல முடியுமா? எவ்வளவு அலட்சியம்?

இது வரையில் என் பள்ளியில் எடுக்கும் உறுதி மொழியின் படி இந்தியா என் தாய் நாடு இந்தியர் அனைவரும் என் சகோதரர்கள் என்றே நினைத்திருந்தேன். ஆனால் அடுத்த மாநிலத்தில் அப்படி யாரும் நினைப்பதில்லை, போலிருக்கிறது. ஒரு வேளை உறுதி மொழியின் அந்த வரிகளை நீக்கிவிட்டுச் சொல்லித்தருகிறார்களோ என்னவோ?

கடவுள், ஆன்மீகம், பக்தி, என்று பேசிக் கொள்ளும் மக்களிடையே கூட கடவுள் எங்கும் எல்லா மாநிலத்திலும் ஒன்று தான் என்ற ஒற்றுமை இல்லையே ஏன்?

இந்தத் திருப்பதி நம் தமிழகத்தைச் சார்ந்தது. சில அரசியல் காரணங்கலால் அது ஆந்திரா கைக்குச் சென்றது என்றும் அம்மாவின் மூலம் கேள்விப்பட்டு,  வேதனை மிஞ்சியது.நாம் கொடுத்த கோயிலுக்குள் நாம் சென்று வணங்க எத்தனை தடைகள்?

நீங்கள் கேட்கலாம். கூட்டம் அதிகமாக இருக்கும், அதனால் அப்படி ஆயிருக்கலாம் என்று. சென்னையில் வெள்ளபாதிப்பிற்கும் பின் இங்கு தமிழக மக்கள் வருவதே மிகக்குறைவு என்றும் லாட்ஜ் மற்றும் இதர சில்லரை வியாபாரங்கள் முன் போல் இல்லை என்றும் நாங்கள் வந்த வாகன ஓட்டி சொன்னதோடு இரண்டு மணி நேரத்தில் தரிசனம் செய்து விடலாம் என்று தான் சொன்னார்.

நாங்கள் போனபோது அப்படி ஒன்றும் கூட்டம் அதிகமாக இல்லை. அப்படி இருக்க கோயில் நிர்வாகம் இப்படி 10 மணி நேரம் அடைத்து வைத்தது ஏன்? சாமி கும்பிடத்தானே வந்தோம்? எங்களுக்கு எதுக்கு ஆயுதமேந்திய போலிஸார்??

மக்கள் பக்தியை இழந்து, பலத்தை இழந்து, பொறுமை இழந்து போகும் வரை காக்கவைத்தால் பக்தியா வரும்???

வந்திருந்தவர்களில் சிலர் மூட்டையில் காசு எடுத்து வந்திருந்தனர். காணிக்கைக்காக. இதே பணம் நம் கோயில்களான பழனி, திருச்செந்தூர் ஸ்ரீரங்கம் போன்ற இடங்களுக்குக் கிடைக்குமா?

இப்போது யார் சிந்திக்க வேண்டும்???

பின் குறிப்பு
************

9.45 க்கு தரிசனம் முடிந்து சாப்பிட்டு கீழ் திருப்பதி வரும் போது 12.20. ( ஒரு டிக்கெட் விலை 51..அரசு பேருந்து) அங்கிருந்து காஞ்சிபுரம், போகும் பேருந்துகள் இருந்தது. ஆனால் சென்னை வரும் பேருந்துகள் இல்லை. அடித்து பிடித்து 1.20 ஒன்று வந்தது. அம்மாவுக்கு ஒரு இடம், அப்பாவுக்கு ஒரு இடம், எனக்கு ஒரு இடம்.ஒரு டிக்கெட்டின் விலை 125.. ஒரு வழியாக 1.45க்கு அங்கிருந்து பேருந்து கிளம்பி 4.40 க்கு சென்னை கோயம்பேடு வந்தடைந்தோம்..அக்கா கல்லூரி கிளம்பும் முன் போயாக வேண்டுமே என்ற பதட்டதோடு வந்தோம். ஏனெனில் வாசல் காம்பவுண்டு சாவி எங்களிடம் இருந்தது. 5.30 க்கு அவள் கிளம்பிய போது வீடு வந்து விட்டோம்.

பச்சை பிள்ளை ஒரு விவரமும் பத்தாது. எதுக்கு என்ன விலைனு தெரியாதுனு சொல்வீங்களோனு தான் டிக்கெட் விலை போட்டுருக்கேன்..

தத்துவம்
*******************
.கோயில் என்றால் பக்கத்தில் உள்ளது என்றால் போகலாம்..தூரம்னா யோசிச்சு,,பணம் போதுமா,,,உடம்பு ஒத்துழைக்குமா இவ்வளவும் தெரிந்த பின்னால தான் போகணும்.