Friday 3 April 2020

உப்புமாவும் -- தேநீர் என்று சொல்லப்பட்ட வெந்நீரும்

தனித்திரு:----,விலகி இரு:----வீட்டிலிரு::

மார்ச் 16 ம் தேதி எனக்குப் பிறந்த நாள். 16 ம் தேதி இரவே கல்லூரியிலிருந்து செய்தி வந்துவிட்டது. இனி அறிவிப்பு வரும் வரை கல்லூரிக்கு வரவேண்டாம் என்று.  அவ்வளவு தான். அம்மா சென்னை வந்துட்டா...வீட்ல இருப்பா...காலைல எந்திரிக்கிறோம்..குளிக்கிறோம்..சாப்பிடுறோம்..புக் படிக்கிறோம்...சாப்புடுறோம்...புக்.படிக்கிறோம்...இப்படியாக என் எண்ணங்கள் மிதக்க நல்லாத்தான் இருந்தேன்.

14 ம் தேதி காலை தான் அம்மா ஊரிலிருந்து வந்திருந்தா.16 ம் தேதி பிறந்த நாள் என்பதால் 15 ம் தேதி தான் புது டிரஸ் வாங்க கடைக்கு அழைத்துச் சென்றாள்..மாத மளிகையே வாங்கவில்லை.அதன் பின்னரும் அருகில் தானே கடைகள் இருக்கிறது  என்ற தைரியத்தில் பொருட்கள் வாங்கவில்லை..22ம் தேதிக்குப் பிறகு வாங்கியதால்.பொருட்களின் விலை ஏற்றத்தால் 1000 ரூபாய்க்கு வாங்க வேண்டிய பொருட்கள் 2500க்கு வாங்க வேண்டிய நிலை.( சற்றே நிலைமை சரியில்லை)

ம்ம்ம்ம்.அதற்கும்.ராம நவமிக்கும் உப்புமாவுக்கும் என்ன சம்பந்தம்? அதைத் தான் சொல்ல வந்தேன்.எந்த நேரத்தில் அம்மா வந்துட்டா.இனி நல்லா சாப்பிடலாம்னு சொன்னேனோ? ( யார் கண்ணு பட்டுச்சோ😔) இப்படி???

இன்று ராம நவமி என்பதால் நேற்றே வீடு துடைப்பதிலிருந்து தூய்மைப்.பணிகள்.அனைத்தும் நான் மற்றும்.அம்மாவால் பார்த்து முடிக்கப்பட்டிருந்தது

ராமன் காட்டில் வாழ்ந்ததால், நீர் மோரும் பானகமும்.மட்டுமே குடித்தான் என்பதால் அம்மா காலையே எலுமிச்சை ஜூஸை " பானகம்" என்று பெயர் மாற்றித்,தந்தாள்.( ஆத்தி..காட்டுல அவருக்கு.இலையும் கிழங்கும் கிடைச்சிருக்கும் அது தானா இன்னைக்கு முழுக்கவும்😭😳??)

ஆனால் நான்.பயந்தபடி இல்லாமல் சமைத்திருந்தாள். ராமனுக்கு காய்கறிகள்.பிடிக்கும்.ஆனால்.காய்கறிகளின் விலை ஒரு கிலோ 200 ஐ எட்டியதால் அம்மா காய்கறியை விட்டு விலகியும்...காய்கறிகளிடமிருந்து தனித்தும் வீட்டிலிருந்து விட்டாள்.

மதியம் போல் "அம்மா இன்று ராமநவமி கொண்டாடனும்" என்றேன் ( அப்பவாவது பட்சணங்கள் ஏதாச்சும் செய்ய அடுப்படிப்பக்கம் போக மாட்டாளா என்ற நப்பாசையில்)

மகா விஷ்ணு கிட்ட அஷ்டமியும் நவமியும் போய் சோகமா, எங்களை யாரும் கொண்டாடலைனு சொன்னதுக்காக அஷ்டமியில் கண்ணனாகவும், நவமியில் ராமனாகவும் அவதாரமெடுத்தார் மகாவிஷ்ணு என்று ஆச்சி பல முறை பல வருடங்களாக..பற்பல குரலில்.பற்பல தொனியில் சொல்லிவிட்ட விஷயத்தை மீண்டும் சொல்ல...அடடா...இவள் இனி ஒவ்வொரு மாநிலத்துலயும் ராம நவமியை பட்டாபிஷேக நாளாக....திருமண நாளாக...வன வாசம் முடிஞ்சு வந்த நாளாக கொண்டாடுவாங்கனு கதை சொல்ல ஆரம்பிச்சுடுவாளோ?...( பலகாரம் ங்கிற மேட்டரே வரமாட்டேங்குதே)

கடைசியாக ராமனுக்கு மிளகு பலகாரம் பிடிக்கும்.வெல்லத்தால் செய்த கோதுமை.அப்பம் பிடிக்கும்.நாம கோதுமை அப்பம்.செய்யலாம்.ஆனா அதை இன்னைக்கு நீயே try பண்ணு சூர்யானு சொல்ல....இருந்த மாவில்.அப்பம்.மாதிரி ஏதோ ஒண்ணு செய்தேன்..ஆலை.இல்லாத ஊருக்கு இலுப்பைப்.பூ சர்க்கரை மாதிரி ஸ்நாக்ஸ் என்பதே கண்ணில் படாமல்.வாழும் எனக்கு இந்த உலகமே இனிப்பா தெரிஞ்சுது..

இதே மாதிரி தான்  முன்பு ஒரு முறை வெள்ளம் வந்த போதும் வியாபாரிகள் மிகக் கடுமையாக நடந்து கொண்டார்கள்...கொரோனாவை விட கொடிய வைரஸ்கள்

வெள்ளம்.வந்த போது ஒரு வேளை உணவு சாப்பிடுவதே அரிதான விஷயமாக இருந்தது.வீடே பற்றாக்குறையால் நிரம்பி வழிந்தது.அதனைச் சமாளிப்பதற்கு அம்மாவிற்கு ஒரு வருட காலம்.ஆனது.என் தோழிகளின் குடும்பங்கள் இன்னும் கூட அதிலிருந்து மீள இயலாமல் தவிக்கிறார்கள்.

மீண்டும் நான் தலைப்பை விட்டு தள்ளிப் போனதாய் நினைக்காதீர்கள்.

மாலை பள்ளி விட்டதும் எப்போதும் ஆச்சி வீட்டுக்குத்தான் போவோம்.அம்மா அங்கிருந்து எங்களை அழைத்துச் செல்வாள். சில நேரம் அம்மா தாமதமாக.வரும் நாட்களில்.ஆச்சியிடம்.பசிக்குத்ய் என்று சொன்னால் உப்புமா தான் செய்து தருவாள்.அதனாலேயே எனக்கும் சக்திக்கும் உப்புமா என்றாலே ஒவ்வாமை இருந்து வந்தது.அரை லிட்டர்   பால் 50 ரூபாய் விற்கும் இந்நிலையில் "டீ" தருவதே பெரிய விஷயம் தான்..ஒரு பாக்கெட் வாங்கி.அதில் ஏராள,,தாராள,,தண்ணீர் ஊற்றி இந்தப் பாலைத் தான் மூணு நாளைக்கு வச்சுக்கணும்.இதில் தான் மோர் க்கும் பால் எடுக்கணும் என்றாள்..( அப்பவே நினைச்சிருக்கணும்) ஒரே ஒரு அரை லிட்டர்...மூன்று நாள்....மூன்று பேருக்கு....அதோடு தயிருக்கு வேறு....அதனால் " டீ" என்கிற பெயரில் ஒரு திரவம் கிடைத்தது.அதையும் சக்தி மகிழ்ச்சியாக குடித்து விட்டுச் சென்றாள்.நான் தான் விழுங்கி.விழுங்கிக் குடித்தேன்.

ராம நவமி சுபிட்சமாய்...உப்புமாவோடும் தேநீரோடும் கோதுமை அப்பத்துடனும் இனிதே கொண்டாடப்பட்டது.

போனில்.பேசிய இரண்டு தோழிகள் பூஜை செய்து நிறைய பலகாரங்கள்.சாப்பிட்டதால்.வயிறு சரியில்லாமல் போனதாகவும் சொன்னார்கள்.

எனக்கும் வயிறு சரி இல்லை தான்

பின் குறிப்பு. தமிழக முதலமைச்சரே எனக்குக் கால் பண்ணி....வீட்டுக்குள்ளேயே இருக்கும் என்னை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக் கொண்டார் தெரியுமா???.

 ( வெள்ளம்.வந்தப்ப...முன்னாள் முதலமைச்சர் அம்மாவும் என்கிட்ட பேசினாங்க..தெரியுமா???.)

Tuesday 17 March 2020

கடிதிவள் துணிவே


அம்மா நிரந்தரமாக சென்னை வந்து விட்டாள்..இனி வெள்ளி இரவு புதுகையிலிருந்து கிளம்பி சென்னை வந்து மீண்டும் ஞாயிறு சென்னையிலிருந்து கிளம்பி புதுகை செல்லும் அலைச்சல் அவளுக்கில்லை.கடந்த ஐந்து வருடமாக அவள் பட்ட இன்னல்கள் இனி இல்லை..இருக்கக் கூடாது

தனியார் பள்ளிகளில், நிறுவனங்களில் வேலை செய்பவர்கள்.எல்லாம்.அரசு வேலை எதிர்பார்த்திருக்க,,அரசு வேலைக்கு ஏங்க...அம்மா.எங்கள் இருவரின் பொருட்டு அந்த வேலையை உதறிவிட்டு முற்றிலும் எங்கள் அம்மாவாக சென்னை வந்துவிட்டாள்

"கெடுக சிந்தை கடிதிவள் துணிவே
மூதில் மகளிராதல் தகுமே,மேந்நாள்
உற்ற செருவிற்கு இவள் தன்னை
யானை எறிந்து.களத்து
ஒழிந்தனனே, நெருநல்.உற்ற
செருவிற்கு இவள் கொழுநன்பெரு
நிரை விலக்கி,ஆண்டுப் பட்டனளே
இன்றும்,செருப்பறை கேட்டு
விருப்புற்று, மயங்கி, வேல் கைக்
கொடுத்து, வெளிது விரித்து உடீ இப்
பாறு மயிர்க்குடுமி எண்ணெய் நீவி
ஒரு மகம் அல்லது இல்லோள்
செருமுகம் நோக்கிச் செல்க என
விடுமே என்று 

( ஒக்கூர் மாசாத்தியார்)"

எழுதியது போலவே இரண்டு ஆண்டுகாலம் ஊதியம் இல்லாமல் துன்புற்ற போதிலும்..இவ்வேலை தவிர வேறு வருமானம் என்ன என்று உணர்ந்த போதிலும்,, பெற்ற அன்னையும் தந்தையும் ஏதும் கண்டு கொள்ளாமல் விட்ட போதிலும் தன் கணவனே தன்னை கைவிட்டு வேறு மனை புகுந்த பின்னும், உடன் பிறந்தவர்கள் யாரோ போல கடந்து போன போதிலும்,, கூட இருந்தவர்களே ( மெகா சைஸ்) குழி பறித்த போதிலும், சில.கயமைகள்.பணத்தால் துரோகித்துப் போன போதிலும்,, எங்களுக்காக,, எனக்கும் சக்திக்காக மட்டுமே உயிர்வாழும் பெரிய மனசுக்காரியை , என்ன சொல்லி அழைப்பது, எப்படி மகிழ்விப்பது ஏதும் புரியவில்லை..


(இது போன்ற பாடல்கள் எல்லாம் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே பரிச்சயம் ஆகிவிட்டது)

"நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறு நூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியொடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை"

"முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை 
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவிளிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப் 
பாலை கடாத் தொடும் பத்து"

என்று எனக்கு மூன்றாம் வகுப்பு முதல் வாசிக்க, எழுத, எழுத்தை நேசிக்க, கதைகளைக் கொண்டாடக் கற்றுக் கொடுத்த அம்மா இனி எங்களுடன் எங்களுக்காக....எங்களால்.(
.😁)


நெற்றியில் விபூதியோ குங்குமமோ இல்லாமல் வெளியே செல்லக் கூடாது என்று கற்றுக் கொடுத்த அம்மாதான் simply red - stars  கேட்கவும் கற்றுக் கொடுத்தாள். Aviva - princesses Don't cru கேட்பாள் Queen பாடல்கள் கேட்போம்.Ariana Grande,  Billie Eilish, Camila cabello,, Taylor swift  இவர்களுடம் K.B சுந்தராம்பாள் எம்.எஸ் அம்மா..ஜானகி அம்மா..என்று எல்லோர் குரலையும் கேட்க வைத்தாள். ரசிக்க வைத்தாள்

ஆங்கில எழுத்தாளர்களான Jane Austen முதல் Charles Dickens, Shakespeare, ரஷ்யனில் Tolstoy, Pushkin , Vladimir, Ivan, Nikolori என்று எங்கள் அறிவை விரிவு செய்தாள்.அகண்டமாக்கினாள். எங்கு சென்றாலும் எங்கள் பார்வையை விசாலமாக்கக் கற்றுத்தந்தாள்.


பல நேரம் இவள் எப்படி இந்தப் புதுக்கோட்டை யில் பிறந்தாள்,? இவள் எப்படி இப்படி சாதாரணமாய் வாழ்கிறாள் என்று.பிரமிக்கும் அளவுக்கு இருக்கும். சில நேரம் இவ்வளவு குழந்தை மனசா இவளுக்கு என்றும் பிரமிக்க வைப்பாள்

அம்மா எல்லோருக்கும் அம்மா தான்..ஆனால் எனக்கும் சக்திக்கும் அப்பாவாக, தாத்தாவாக, அண்ணனாக, எல்லாவற்றுக்கும் மேலாக தனி ஆளாய் நின்று சமாளித்தாள். சூழ்நிலை அவளை மிகக் கொடூரமான வாழ்க்கைக்குத் தள்ளிய பிதும் அவள் முகத்தின் புன்னகையின் வெளிச்சம் பிரகாசமானதே தவிர குறையவில்லை

அம்மா பேக்கைத் தூக்கிக் கொண்டு (ஊருக்குக் கிளம்பும் போது) மாடியிலிருந்து கீழே இறங்குமுன்னே , கண்ணீரை அடக்கிக் கொண்டு இனி அம்மா எப்படீ வருவாங்க என்று கேட்கலாம் என்று நினைக்கும் போதே சக்தியின் கண்களில் வழியும் கண்ணீரைப் பார்த்து அப்படியே அடங்கி இருக்கிறேன்.

இவள் அன்பைக் கூட நிராகரிக்க முடியுமா என்று ,"சிலர்" எங்களை ஆச்சர்யப் படுத்தி இருந்தாலும் அம்மாவிடம் பேசும், பழகும், அன்புள்ளங்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் ஏதும் தோன்றவில்லை.
ஒரே உதாரணம் தன் மேல் வெறுப்பை மட்டுமே உமிழ்ந்த தன் மேலதிகாரியை, அம்மா என்று அழைக்க வைத்து எங்களை அவரின் தங்கைகள் என்று பேச வைத்த மாண்பு அம்மாவுக்கு மட்டுமே உண்டு. ( சக்திக்கு அவர் என் தங்கைக்கு வாழ்த்து என்று அனுப்பி இருப்பதே சான்று)

அம்மாவை யாராலும் வெறுக்க முடியாது என்பதற்கும் இதுவே சான்று.

இப்போது எனக்கும் சக்திக்கும் இன்னுமொரு குறிக்கோள். எங்கள் இலட்சியத்திற்காக அம்மா எங்களோடு வந்துவிட்டாலும் அம்மாவின் எழுத்தாற்றல் மேம்பட அவள் அறிவை இன்னும் அகலமாக்கி விட நாங்கள் ஏதேனும் செய்தாக வேண்டும்.

பின் குறிப்புகள்

* இனி அவ்வப்போது ( உப்பு போட மறந்த) உப்பில்லாத உணவுப் பொருட்களை நாங்கள் சாப்பிட நேரிடும்

* துணி அலமாரி மிகச் சரியாக அடுக்கி வைக்கப் பட்டிருக்கும்.

* வாராவாரம் எண்ணெய் தேய்த்துக் குளிக்க நிர்பந்திக்கப் படுவோம்.

* இனி எல்லா வெள்ளிக்கிழமையும் - பிரதோஷ தினத்தன்றும் வீடு ஊதுபத்தி, சாம்பிராணி வாசத்துடன் இருக்கும்.

* அவ்வப்போது கஷாயம் என்ற பெயரில் கருப்பாய் , கசப்பாய், ஒரு திரவம் தரப்பட்டு, கட்டாயமாகக் குடிக்க வேண்டும் என்று சொல்லி கட்டாயப் படுத்தப் படுவோம்.

வாராவாரம் கோயில் சஷ்டிகவசம்.சிவபுராணம். எல்லாம்.கட்டாய விதிமுறைகள்

* பயமற்ற சூழலில் தூக்கம்.நல்லா வரும். பாதுகாப்பாய் உணர்கிறோம்.

* எல்லாவற்றுக்கும் மேல் இனிமேல் தினமும் சாப்பிட வீட்டில் சாப்பாடு இருக்கும்- சூரஜ் குட்டி என்று ஒரு குரல் ஒலிக்கும் அன்பாய் ...பிரியத்துடன்.