Wednesday, 31 May 2017

அம்மா கிளம்புகிறாள்...

அம்மா கிளம்புகிறாள்...

அம்மாவுக்கும் எங்களுக்குமான ஒட்டுதல் எல்லா பிள்ளைகளும் அம்மாவும் போல் இல்லை..சுவாதி சற்றே வித்தியாசமானவள்...

தனக்கு துன்பம்.வரும் போதெல்லாம் பாரதியார் கவிதைகளை எடுத்துப் படிப்பாள்.அது தான் அம்மாவின் பைபிள்.அல்லது கீதை அல்லது குரான்..

அம்மா எங்களது சிறு பிராயத்தில் பல கதை புத்தகங்கள் நூலகத்திலிருந்து எடுத்து வருவாள்..சனி ஞாயிறு என்றால் எல்லோரும் தூங்குவார்கள்.ஆனால் அம்மா அன்று தான் நான்கு மணிக்கு எழுந்து..துவைத்து..சமைத்து காலை 7 மணிக்கெல்லாம் எங்களையும் தயார் படுத்தி விடுவாள்.எதற்கு? படிக்க...அதுவும் கதை புத்தகங்கள்...அந்த அறியாத பருவத்திலேயே...இது கைக்கிளைக்காதல் கதை...பெருந்திணைக் காதல் என்பாள்..

தமிழின் நுணுக்கங்கள் எங்களுக்கு வந்தெல்லாம் மிக இயல்பில்...

பாரதியார் பாடல்கள்..சுஜாதா..எஸ் ராமகிருஷ்ணன்.பா.ராகவன்..வாஸந்தி..ஆண்டாள்.பிரிய தர்ஷினி..ஜெயகாந்தன்.முகில்..பட்டுக்கோட்டை பிரபாகர்.இந்திரா பார்த்தசாரதி..தேவன்.சுபா..புதுமைபித்தன்..ராஜம்கிருஷ்ணன்..விந்தன்..நாஞ்சில் நாடன்..வண்ணதாசன்..பிரபஞ்சன்..அனுராதா ரமணன்..கி ராஜநாராயணன்.கல்கி கிருஷ்ண மூர்த்தி..ரா.கி.ரங்கராஜன்..லா.சா ராமாமிர்தம்..சிவசங்கரி..ரமணிச்சந்திரன்..என்று பற்பல கட்டுரைகள்..கவிதைகள்..கதைகள்
என்று எல்லா வடிவங்களையும் எடுத்து வந்து படித்துக் காண்பிப்பாள்..பசி எடுத்தால் சாப்பிட்டு மீண்டும் படிப்போம்..மூன்றாம் வகுப்பு அல்லது அதற்க்கு சற்றே முந்தையகாலத்தில் இருந்தே நானே நூலகத்தில் புத்தகங்களை தேர்வு செய்து படிக்க ஆரம்பித்து விட்டோம்...பள்ளிப்பாடங்களை விட இந்த சனிக்கிழமை ஞாயிற்றுக் கிழமைக்காகக்.காத்திருக்க ஆரம்பித்தோம்...

நீங்கள் சுவாதியைப் போல் அம்மாவை எங்கும் காண இயலாது..

எங்கள் இருவரையும் சைக்கிளில் வைத்துக் கூட்டி வருவாள்..வண்டியில் வைத்துக் கூட்டி வருவாள்...பள்ளி நேரம்.போக கடைகளில் கணக்கு எழுதினாள்..பணக்கார வீடுகளுக்குச் சென்று டியூஷன் எடுத்தாள்..இப்படியாக பல அவதாரங்கள் அம்மாவுக்கு...எங்களையும் கவனித்துக் கொண்டு இரண்டு பேருந்துகள் மாறி பள்ளி சென்று..தனது இலக்கியப்பணிகளையும்.கவனித்துக் கொண்டு அம்மா எப்போதும் சிரமப்பட்டாள்..ஆனால் எப்போதும் புன்னகையுடன் தான் இருப்பாள்..அம்மா யார் என்ன சொன்ன போதும் எது நடந்தாலும் சோர்வு கொள்ள மாட்டாள்...

ஆரம்பம் முதலே அப்பா எங்களோடு இல்லை..அப்பாவின் குரல் எப்போதேனும் தொலைபேசி வழியாக கேட்கும்..

ஆனால் அம்மா எங்கள் இருவருக்கும் பீஸ் கட்ட..வீட்டு வாடகை கொடுக்க..மளிகை வாங்க..என்று எல்லா செலவுகளுக்காகவும் திண்டாடுவாள்
அப்போதும் அவள் முகம் சிரித்த வண்நம் தான் இருக்கும்.நான் எந்தப்பள்ளியில் படித்தாலும் அம்மாவின் தோழிகளாக..தோழர்களாக அந்த ஆசிரியர்கள்..பள்ளி முதல்வர்கள் இருப்பார்கள்..அம்மாவின் பழகும் விதத்திற்கு.எங்கும் அன்பு மயம் தான்.அம்மாவை நேசிக்காதோர் யாருமில்லை..எதுவும் தெரியாத இந்த சென்னையில் சக்தியின் கல்லூரி வாகனம் ஓட்டுபவரிலிருந்து..வகுப்பு நடத்தும்.பேராசிரியர்கள் வரை எல்லோரும் அம்மாவின் நட்புகள் தான்.

இதுவரை நான்.படித்த பள்ளிகளில் எல்லாம் என்னுடன்.படிப்போர்கள் அம்மாவைப் பார்த்து பொறாமைப்.படுவார்கள்..உங்கம்மா எப்படி டீ இப்படி பேசுறாங்க..ரொம்ப அழகாவும் இருக்காங்க..என்பார்கள்..எனக்கும் சக்திக்கும் எப்போதும் பெருமை பூரிக்கும்..

அம்மா எப்போதேனும் கோபப்பட்டால்..ஹைய்யே சுவாதி இந்த ரோல் உன் முகத்துக்கு நல்லா இல்லை..நீ காமெடி பீஸ்..உனக்கேன் சீரியஸ் முகம் என்றால் அம்மா சிரித்து விடுவாள்..

எங்களுக்கென பயத்தமாவு அரைப்பாள்..( இதுவரை நாங்கள் குளியலுக்கு சோப்பு உபயோகித்ததில்லை) தலைக்கு சீயக்காய் அரைக்க அலைவாள்.உடல் நலமில்லை எனில் முதலில் கஷாயங்கள்.பிறகு தான் வைத்தியம்.அதுவும் ஹோமியோ முறைகள்..

இங்கும் சம்பளம் வராத இந்த ஆறு மாதத்தில் உதவி இயக்குநர் என்ற பெயரில் சாதாரண வேலைகள் செய்தாள்..

முதல் நாள் இரவு 8 மணிக்கு புதுகையில் கிளம்பினால் தான் சென்னையில் எங்கள் இருப்பிடத்திற்கு காலை ஆறு மணிக்கேனும் வர இயலும் விடிய விடிய பேருந்தில் அரை குறையாக உட்கார்ந்தே தூங்கி..இங்கே வந்ததும் தான் புதுகையில் இருந்தே வாங்கி வந்த காய்களை வைத்து சமைக்க ஆரம்பித்து விடுவாள்..சமைச்சுட்டு ரெஸ்ட் எடுக்கிறேன் என்பாள் ஆனால் அதன் பின் கையால் துவைக்கும் துணிகளைப் பிரித்து துவைக்க அமர்ந்து விடுவாள்..சனி.ஞாயிறு இரு தினங்கள் மட்டுமே இருக்கும் பொழுதுகளில். இட்லி பொடி அரைத்து..வத்தல் குழம்பு பேஸ்ட் செய்து.கடை வீதிக்குப் போய்.காய்.பழம் மற்ற பொருட்களை வாங்கிப்வைக்கும் முன் ஞாயிறு மதியம் ஆகிவிடும்..ஆனாலும் அம்மா சலிக்காமல் செய்வாள்..

பிஸினஸ் ஆரம்பிக்க என்று தன்னிடம் இருந்த பணத்தை எல்லாம் அப்பாவிடம் கொடுத்து அந்தப் பணம் ஒன்று கூட திரும்பி வராத போதும் அம்மா அதே போலத்தான் இருந்தாள்

.அம்மாவிற்கு என்று பிரத்தியேக ஆசைகள் ஏதுமில்லை.எங்கள் இருவரையும் படிக்க வைப்பது தவிர..

அம்மாவிற்கு இரண்டு முறைகள் அறுவை சிகிச்சை நடந்த போதும் மூன்றாம் நாளிலிருந்தே அம்மா தான் சமைத்தாள்..அவள் அம்மாவும் அப்பாவும் அம்மாவிடம் கோவித்துகொண்டு போன போதும் அம்மா அன்பானவளாக.அயராதவளாகவே இருந்தாள்..

அவள் நொறுங்கி கவலையுற்று இருந்த காலமெனில் அம்மா இப்போது ஆறு மாதமாக ஊதியம் வழங்கப்படாத நாட்கள் தான்.சற்றே சோர்ந்து போனாள்.அவளுக்கென யாரும் பண உதவிக்கு என்று இல்லாத நிலையில் தடுமாறிப் போனாள்..எனக்கும் சேர்த்து இந்த வருடம் கல்லூரிக்குக் கட்ட வேண்டும் என்ற நினைவே அம்மாவிற்கு பல உடல் உபாதைகளைத் தந்துவிட்டது.தாங்க முடியாத இடுப்பு வலியாலும் கால் வலியாலும் தவித்தாள்..ஆனாலும் அவளே சமைத்தாள்.துவைத்தாள்
படுத்துக் கொண்டாள்..

இங்கே கிண்டி.வடபழனி.கோயம்பேடு.வளசரவாக்கம்.விருகம் பாக்கம்.ஆழ்வார் திருநகர்.இந்தப்பக்கம் தரமணி.மேடவாக்கம்.ஓ.எம்.ஆர் என்று எல்லா இடங்களுக்கும் கூட்டிப் போனாள் வண்டியிலேயே.வேளச்சேரி நூலகம்.அண்ணா நூற்றாண்டு நூலகம் கூட்டிப் போனாள்.கறிவேப்பிலையிலிருந்து அரிசி.ஆடை அல்லது வேறு பொருட்கள் வரை வாங்குவது அம்மா தான்..

அம்மாவின் அக்கறையும் அன்பும் உழைப்பும் பிரத்தியேகமானது.

அழகிய தயிர் சாதத்தில் தன் கையில் எடுத்து கட்டைவிரலால் கீறி அதில் வத்தல் குழம்பை ஊற்றி ஒரு வாயும் துவையல் வைத்து ஒரு வாயும் கூட்டு வைத்து ஒரு வாயும் தரும் போது ஒரு ஊரை எழுதி வைக்கலாம்.

அம்மா ஸ்பெஷல்= பூரி கிழங்கு..சாம்பார்..பருப்பு வடை.  பருப்பு உருண்டை குழம்பு வைப்பதில் எக்ஸ்பர்ட்...சமீப காலத்தில் பனீர் பட்டர் மசாலா

அம்மா ஒரு போதும் தலையில் பூ வைத்துப் பார்த்ததில்லை..ஆனால் கையில், பையில் புத்தகம் இல்லாமல் பார்த்ததே இல்லை..

அம்மா சொல்கிறாள் நாங்கள் இருவரும் அம்மாவுக்கு தேவதைகளாம்..ஆனால் அம்மா தான் எங்கள் தேவதை

நான் வேறு ,,அம்மா எனக்கு நான்கே ஆடைகள் தான் இருக்கிறது..காலேஜ் சேர்த்தால் டிரஸ் வேணுமில்ல என்று சொன்னதிலிருந்து அம்மாவின் மன அழுத்தம்.அதிகமாகிப் போனது. 

கல்லூரியில் இப்போதே 30000 கட்ட சொன்னார்கள்.இப்போதைக்கு எங்கள் ராதா அங்கிளிடம் வாங்கி( இவரைப் பற்றி தனியாக ஒரு கட்டுரை எழுத நினைத்துள்ளேன்) கட்டியாகிவிட்டது..ஆனால் மீதி தொகை எப்படிக் கட்டுவது என அம்மாவுக்குக் குழப்பம் தீரவில்லை.

பல்கலைக்கழக கட்டணம் மட்டும் கேட்கும் சில கல்லூரிகளில் நான் நினைப்பது போல் லேப் இல்லை.பிளேஸ்மெண்ட் இல்லை..அதனால் தான் இக்கல்லூரி தேர்ந்தெடுத்தேன்..அம்மாவைப் பார்க்க பாவமாக இருக்கிறது.ஆனால் அம்மா இதையும் சமாளித்து மீண்டு வருவாள்..

தனக்கென எழுதும் ஆற்றல் பேசும் ஆற்றல் இருந்தும் தன்னை...தன் திறமைகளை வளர்ப்பது பற்றி எண்ணாமால்   எங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் அம்மா  ..குக்கரில் தனக்கென மேல் டப்பாவில் ரேஷன் அரிசியையும் கீழ் டப்பாவில் பொன்னி அரிசியையும் வைக்கும் அம்மா..இன்று ஊருக்குக் கிளம்புகிறாள்..



இப்போ
இனி நாளை முதல் நானே தலை பின்னிக் கொள்ள வேண்டும்.நானே சமைத்துக் கொள்ள வேண்டும்..

அம்மா போன் செய்யும் போது ம்ம்ம்ம்ம் சாப்பிட்டேனே..பால் வாங்கி காப்பி போட்டுக் குடிச்சிட்டேனே..என்று பொய் சொல்ல வேண்டும்..
வெறும் சோற்றின் முன் அமர்ந்து பருப்பு தாளிச்சேன்..உருளைக்கிழங்கு வறுத்தேன்.வெண்டைக்காய் செய்தேன் என்றும் பொய் சொல்ல வேண்டும்..

ஒரு வேளை நாளைய இந்த உலகத்தில் நான் ஏதேனும் சாதித்தால் அதன் பெருமை அத்தனையும் அம்மாவை மட்டுமே சாரும்..ஒருவேளை இல்லை எனில் அம்மாவிடமிருந்து நாங்கள் முறையாகக் கற்கவில்லை என்றே அர்த்தம் கொள்ளலாம்.

ஆனால் சாதிப்போம்..

எப்போதேனும் அம்மாவை காலையில் நிதானமாக எழுந்திரிக்க வைக்க வேண்டும்.அவளுக்கான உணவுகளோடு அவளுக்கான புத்தகங்களையும் கொடுத்து அமைதியாக வாழ வைக்க வேண்டும்..இந்த ஓய்வற்ற உழைப்பில் இருந்து அவள் தப்ப வேண்டும்..அது தான் எனக்கும் சக்திக்குமான ஆசை..

என்னிடம் இருக்கும் இந்த குழந்தைமையை யாரேனும் வாங்கிக் கொண்டால் தேவலை..அது தான் இப்படி அம்மாவோடு இருக்க அடம் பிடிக்கிறது..தேம்பித் தேம்பித் தேம்பி இப்படி எழுத வைக்கிறது..மாடிக்குப் போய் அம்மாவின் உருவம் மறையும் வரை அழுகையை துடைத்து துடைத்து விட்டு பார்க்க வைக்கிறது..


Monday, 8 May 2017

அம்சமில்லாத அம்சக் கோரிக்கைகள்

அம்மாவின் 24 அம்சக் கோரிக்கைகள்

1. தினமும்.காலையில் 5.30 க்காவது எழ வேண்டும்

2. காலை மாலை இருவேளையும் விளக்கு ஏற்றி தியானம் செய்ய வேண்டும்

3. இனி என் படிப்பை எவ்வாறு வளமாக்கலாம் என்று திட்ட மிட வேண்டும்

4. தினமும் லெமன் ஜூஸ் அருந்தவ்வேண்டும்

5. ஒரு நாள் விட்டு ஒருநாள் தலைக்குக் குளிக்க வேண்டும்

6. எண்ணெய் பலகாரங்களைத் தவிர்க்க வேண்டும்

7. நல்ல தரமான எனக்கு வாழ்க்கைக்கு முக்கியமான புத்தகங்களைப் படிக்க வேண்டும்

8. காலையில் தினமும் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்

9. சில சமையல் குறிப்புகளை என் தேவை நிறைவேற்றிக் கொள்ள தெரிந்து கொள்ள வேண்டும்

 10. வலை தளங்கள் பார்க்க முக நூல்.பார்க்க என்று நேரம் ஒதுக்கி அந்த நேரம் மட்டும் பார்க்க வேண்டும்

11. தேவாரம்.திருவாசகம்
சிவபுராணம் போன்றவற்றை பாராயநம் செய்ய வேண்டும்.

12. என்ன படிக்கப் போகிறேன் அதற்கான நடைமுறை..இலட்சியம் போன்றவற்றை வகுத்து செயல் பட வேண்டும்

13.வெயில் காலம் என்பதால் மூன்று முறை குளிக்க வேண்டும்.

14. ஏரோ நாட்டிக்கல் இஞ்சினியரிங் கான பாடத்திட்டங்கள்...கட்டணங்கள் ..பற்றி பார்க்க வேண்டும்..

15. கல்வி கடன் தருவோர்..பற்றி விசாரித்து அறிய வேண்டும்

16. நடந்தே ராதா அங்கிள் வீடு வரை போய் ஆதித் ..அபர்ணா வோடு பேசி விளையாடி விட்டு வரவேண்டும்

17. பல தனியார் கல்லூரிகளில் நடக்கும் வகுப்புகளில் ஏதேனும் ஒன்றிலாவது போய் கலந்து கொள்ள வேண்டும்

18.நானாக தனியாக பீனிக்ஸ்.மற்றும் பிற இடங்களுக்கு போய் வர பழக வேண்டும்

19.ஏதேனும் ஒரு துறையை தேர்ந்தெடுத்து அதில் என் வலிமையை நிரூபிக்க வேண்டும்

20..மைதா உணவுகளைத் தவிர்த்து நீர் உணவுகள் அதிகம் உட் கொள்ள வேண்டும்

21.காய் கறி..கீரை..சாப்பிட வேண்டும்

22.ஏதேனும் ஒரு பிராஜக்ட் செய்து முடிக்க வேண்டும்

23. என்னென்ன புத்தகங்கள் படித்தேன் என்பது பற்றிய குறிப்புகள் வைக்க வேண்டும்

24.பிரதோஷம்.சஷ்டி.சதுர்த்தி.சிவராத்திரி..எனது நட்சத்திர நாளில் கோயிலுக்குப் போக வேண்டும்.அல்லது வீட்டில் சிறப்பு பூஜை.பிரார்த்தனை செய்ய வேண்டும்

 இவ்வளவையும் பண்ண வேண்டுமாம்...

ஹேஹ்ஹ்ஹே..

அரசாங்கத்திடம் விடுகிற பற்பல அம்சக் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றவா செய்கிறார்கள்???

கிடப்புல தானே கிடக்கு

என்ன கில்லர்ஜி அங்கிள் நான் சொல்றது சரி தானே??

இதை தயவு செய்து தனபாலன் அங்கிள் ட்ட சொல்லீராதீங்க...( அவர் பெரியவங்க சொன்னா கேட்கணும் பார்)

அவருக்குத் தெரியாம நாம ரகசியமா வச்சுக்குவோம்

தெர்மா கோல் போட்டு மறைச்சிருவோமா கில்லர்ஜி அங்கிள்??

 இஸ்க்கு லக்கடி லாலா சுந்தரி  கோலா கொப்பரை கொய்யா...

நா தூங்கப் போறேன்....

பின் குறிப்பு

இதை அம்மாக்கிட்டயும் சக்தி கிட்டயும் யாரும் சொல்லீராதீங்க ...காபி..பால்..மோர் தந்து கூட கேப்பாக ...அப்ப கூட சொல்லீராதீய

Sunday, 7 May 2017

நீட் நீட் நீட்

நீட்..நீட்...நீட்


எனக்கு ஆவடியில் இருக்கும் ஏ.எப் எஸ் பள்ளியில் செண்டர்...

சென்னைக்கு மிக அருகில் என்று ரியல் எஸ்டேட் காரர்கள் தான் சொல்வார்கள்....ஆனால்...தேர்வாணையம் ஒரு வழியாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடியில். போட்டதற்கு என்ன காரணமாக இருந்திருக்குமோ??

வெள்ளிக் கிழமையே அம்மா மட்டும் தனியாக வண்டியிலேயே அந்தப் பள்ளிக்கு போய் வந்து..அங்கு எத்தனை மணிக்கு பஸ்? எப்போது வேளச்சேரியிலிருந்து கிளம்பினால் அங்கு போய் சேர முடியும்? எவ்வளவு பெட்ரோல் ஆகிறது? இன்னபிற விஷயங்களை அறிந்து வந்ததால்..மிக சரியாக.அதிகாலை 4 மணிக்கு எழுந்த அம்மா லெமன் சாதம்.தண்ணீர் பாட்டில் வெள்ளை வேட்டி.தலைக்கு ஸ்கார்ப் சகிதம் கிளம்பி விட்டார்...( இந்த 4 மணி எல்லாம் எனக்கு மிட் நைட்)..(ஆனா இன்று சமத்தா கிளம்பிட்டேனாக்கும்) 
இப்போது மணி மிகச் சரியாக ஐந்து ஆக ஐந்து நிமிடம்
கிண்டி..காசி தியேட்டர்..அசோக் பில்லர்..வடபழனி..எம்
எம்.டி.ஏ..கோயம்பேடு வர 6.10..நாங்கள் வீட்டை விட்டு கிளம்ப்பி மடுவின் கரை முக்கம் வரும் போதே பரபர வென்று மனிதர்களும்..வாகனங்களும் செல்வதைப் பார்த்தால்..இவ்வளவு பேர் கடினமா வேலை பார்த்துமா இந்தியா இன்னும் வல்லரசாகலைனு தோன்றியது..

என்னமா இவ்வளவு கூட்டம்? என்று எல்லா சிக்னல் யும் கேட்டேன்..ஒரு முப்பது புதுக்கோட்டையை மொத்தமா அடுக்கி வச்சாப்ல கூட்டம்..கூட்டம்..கூட்டம்..
திருமங்கலம் ரோடு வழியா அம்பத்தூர் வந்து..அம்பத்தூர் தொழிற்சாலை சாலையின் வழியாக போய்க் கொண்டே ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ இருந்தோம்.முருகப்பா தொழிற்சாலை சாலையில் பிரிந்து முதலில் hvf அதன் பின் crpf அதன் பின் afs..

ஒருவழியாக பள்ளி வந்து சேர்ந்தோம்
மணி 7.20.நான் முதல் பேட்ச் என்பதால்  7.30 க்கு அழைக்கப் படுவேன்..

திருவப்பூர் திருவிழாவிற்கு வருபது போல் பெருங்கூட்டம்..பெரும்பாலும் டாக்டர் அம்மா..அல்லது டாக்டர் அப்பாவின் குழந்தைகள்..ஏற்கனவே அண்ணா பல்கலையில் பொறியியல் படிப்பவர்கள்.பி எஸ்.சி அலைட் சயன்ஸ் படித்தவர்கள்..போன வருடம் பிளஸ் டூ பாஸ் செய்து இந்த வருடம் வரை நீட் தேர்வுக்காக 50000 வரை பணம் கட்டி படித்தோர்..மற்றும் என்னைப் போல் சில நபர்கள்..

முதல் நாளே அம்மாவும்.சக்தியும் தேர்வு விதிகளைப் படித்து எனக்கு சொல்லி இருந்ததால் நான் சாதாரணமான தோடு மட்டும் அணிந்திருந்தேன்
கையில் இருந்த வாட்சை அம்மாவிடம் கழட்டி தந்துவிட்டேன்..

சிலரின் புகைப்படம் சரி இல்லாதத்தால் உடனடி.போட்டோக்காரர் வந்து போட்டோ எடுத்துத் தந்தனர்

இங்க தான் தொடங்கியது..முதலில் எங்கள் அட்மிட் கார்டை வாங்கி சரி பார்த்தார்கள்.அதில் போஸ்ட் கார்ட் சைஸ் போட்டோவும்
பாஸ்போர்ட் சைஸ் போட்டோவும் ஒட்டப்பட்டுள்ளதா என சரி பார்த்தார்கள்..அதன் பின் ஆண்கள் வேறு பக்கமும் பெண்கள் வேறு அம்மணியிடமும் அனுப்பப்பட்டோம்.அந்த அம்மா எங்கள் புகைப்படம் சரி பார்க்கிறேன் பேர்வழி என்று எங்கள் முகத்தருகே தன் பல் தேயக்காத முகத்தை ஆறு முறை எங்கள் மூக்கருகே காட்டி நாங்கள் தான் என உறுதி செய்து கொண்டனர்..அதன் பின் வேறு ஒரு அம்மணியிடம் அனுப்பப்பட்டோம்..அந்தம்மா எங்கள் தலையை கலைத்து கலைத்து டார்ச் லைட் அடித்து பார்த்தார்கள்..சூரியஒளியில் தெரியாததை அந்த டார்ச் காண்பிக்கும் என்பதை யாரோ அவர்களுக்குத் தவறாக கற்பித்திருக்க வேண்டும்.அங்கிருந்து நாங்கள் மற்றொரு அம்மாவிற்கு மாற்றப் பட்டோம்..அந்த அம்மா கைகளை வைத்து கிச்சுலி காட்டியது போலவேமூன்று முறை செய்தார்..அடுத்த அம்மாவிடம் நாங்கள் அனைவரும் மாட்டிக் கொண்டோம். வந்திருந்த பெண்களில் இருவர் தவிர அனைவரும் ஜீன்ஸ் பேண்ட் லாங் டாப் அல்லது ஷார்ட் சர்ட் அணிந்திருந்ததால் அனைவரும் பேண்ட் க்கு பெல்ட் அணிந்திருந்தோம்
என்னோடு வந்த முஸ்லீம் பெண் புர்கா போட்டு உள்ளே ஜீன்ஸ் டாப் தான் போட்டிருந்தாள். பெல்ட் அனுமதி இல்லை என்று அந்தம்மா சொன்னதும் ஒரு பெண் அழ ஆரம்பித்து விட்டாள். அவளுக்கு பெல்ட் இல்லாமல் பேண்ட் நிற்காதாம்.எனக்குமே அதே நிலை தான். ஒரு வழியாக பெல்டை செக் செய்து அப்புறம் அனுப்புங்கள் என்று யாரோ ஒரு தெய்வம் வந்து சொல்ல நாங்கள் தப்பித்தோம்.

அதன் பின் காலணி..எனது காலணி சற்று ஷு போல் இருக்கும்.பெரும் பாலும் பின்னால் வார் வைத்திருந்த செருப்பு தான் போட்டிருந்தனர். முதலில் வேண்டாம் என்று  சொல்லி பின்னர் ஒப்புக் கொள்ளப்பட்டது.
அதன் பின் எனக்கான அறை நல்ல வேளை தரை தளம் தான்..நடந்து கொண்டே ஏ ஏ ஏ ஏ ஏ போன பிறகு பள்ளி கட்டிடம் வந்தது..அப்பாடா என்று பெரு மூச்சு விட்டு பெல் அடித்து..உட்கார்ந்து ஓ எம் ஆர் ஷீட் கொடுத்தால்..அப்படி பில் பண்ணுங்க..இப்படி செய்யாதீங்க என கத்திக் கொண்டே இருந்தார்கள்..
என் அருகில் இருந்த பெண் ரிஜிஸ்டர் நம்பர் சரியாகக் குறித்து விட்டு செண்டர் பெயர் தப்பாக குறித்து விட்டாள்..மேடம் உடனே திட்டவும் ஐந்தாம் வகுப்பு மாணவி போல் அழுதாள்..பிறகு அந்த மேடமே சமாதானம் செய்த பின்னர் தான் அமைதியானாள்..அடிக்கடி தண்ணீர் தந்தார்கள்...

இதற்கிடையில் வெளியூரிலிருந்து வந்த மாணவன் 9.40 ஆனதால் அழுது கொண்டே வந்தான்.
வெளியில் அவனை தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என்று சொல்லி விட்டார்கள். அவன் அழுது என் வாழ்க்கை கனவு என்று கதறி அழுததும் சில் பெற்றோரும் போலீஸும் சொன்னபிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டிருக்கிறான்..( அனுமதித்த அந்த அன்பு உள்ளங்கள் வாழ்க)

ஆனால் பாவம் அம்மா போன்ற பல பெற்றோர்கள் வெளியில் வெயிலில் காத்திருக்க நேர்ந்தது.ஒரு பந்தல் போட்டிருக்கலாம்
மோர் பந்தல் செய்யும் அரசியல் வாதிகள் இந்த பெற்றோருக்கு உதவி இருக்கலாம்..ஆங்காங்கே இருந்த மர நிழலில் காத்திருந்து கொடுமையாய் வெயிலில் நின்றே காலம் கடத்தி இருக்கின்றனர்..ஏன் இது போன்ற தேர்வு எழுதும் பள்ளிக்குள் பெற்றோர்களை அனுமதிப்பதில்லை.அவர்களில் சுகர் பேஷண்ட் அல்லது பிரஷர் இருந்தால் அவர்கள் நிலை என்ன?..

அம்மா மீண்டும் அந்தக் கொடூர வெயிலில்  வர வேண்டுமே எவ்வளவு நேரம் கழிப்பறைக்கு செல்லாமல் திரும்ப முடியும்.மீண்டும்.பயணித்தால் மூன்று மணி நேரம் ஆகுமே என்ற கவலைகள் என்னை பயமுறுத்தியது..
அங்கே 1.30 க்கு புறப்பட்டு வீட்டுக்கு 3.50 க்குத்தான் வர முடிந்தது.இதே பஸ் அல்லது ரயில் மாறி வருவதென்றால் இன்னும் அதிக நேரம் பிடித்திருக்கும்..காலையில் சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என்பதாலேயே அம்மா தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றார்.ஆனால் வெள்ளிக்கிழமை அலைந்து வந்ததோடு இன்றும் அலைந்ததால் அம்மா தான் பாவம்.. 

வெளியில் மோர் ஒரு டம்ளர் விலை 10 (நீர் மோர் என்று சொல்லப்பட்ட அதில் நீரின் விகிதாச்சாரம் சற்று கூடுதலாகவே இருந்ததாம் ) ஒரு மோசமான டீ விலை 10..தண்ணீர் பாட்டில் விலை இருபத்தைந்து....பாவம் அந்த மனிதர்கள் இந்த மாதிரி தான் சம்பாதித்துக் கொள்ள முடியும்
.
.
.
.
.
.
.
இன்றோடு தேர்வுகள் முடிந்தது என்று சொல்ல முடியாது நாளை முதல் சக்தியும் அம்மாவும் ஹிந்துஸ்தான் யுனிவர்சிட்டி..பாரு அண்ணா யுனிவர்சிட்டிக்கு அப்ளைப் பண்ணு..சத்தியபாமாவைப் பார்..வேல் டெக் பார்த்தியா...அப்படியே அந்த பிரிஸ்ட் யுனிவர்சிட்டியையும் பார் என்று சொல்வார்கள்...

நான் அதைக் கேட்கவும் தயாராக வேண்டும்

பின் குறிப்பு..தேர்வு எழுத தந்த பேனாவை திரும்ப கவனமாய் பெற்றுக் கொண்டனர்...

அதை வைத்து ஓசோன் ஓட்டையை அடைப்பார்கள் என நம்பப்படுவதால் அவர்களுக்கு இப்போதே நான் லொல்லூர் லூஜூ  விருது தருகிறேன்