Friday, 14 April 2017

புத்தாண்டு வாழ்த்துக்கள்.. (மிஸ் யூ ச க் தி

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

(பிளாஷ் பேக்)

வளைய வளையமா சுத்தவிட்டுக்கங்க...

அப்படியே தலையைத் திருப்பி மேலே பாருங்க...

முன்பொருமுறை..அம்மா பணிபுரியும் பள்ளியில்..இதே போல் ஏப்ரல் மாதத்தில் பேனா விற்பவர்கள் வருவார்கள்..கிராமப் புற பள்ளி என்பதால் தரம் இல்லாத பேனாக்களை மலிவான விலைக்கு விற்றுச் செல்வார்கள்..அப்படி ஒருவர் அம்மா பள்ளிக்கு வர மாணவர்களில் 100 பேர் பேனா வாங்கி இருக்கின்றனர்..தேர்வு நேரம் என்பதால் பேனாக்கள் தேவைப் படும் என்பதால் பெற்றோர்களும் காசுகொடுத்து வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.மகிழ்ந்து போன பேனா விற்பனையாளர் அம்மா தலைமை ஆசிரியர் என்பதால் அம்மாவுக்கு இரண்டு பேனாக்களைப் பரிசாக தந்து சென்றிருக்கிறார்..அப்போதெல்லாம் எனக்கும் சக்திக்கும் எப்போதும் ஒரு போட்டி வரும்.அன்றைய வீட்டுப்பாடங்களை அம்மாவின் பேனா வைத்து யார் எழுதுவது என்று..ஏனெனில் அம்மாவிடம் இருந்தது பார்க்கர் பேனா ஒன்று..மற்றொன்று கேம்லின் பேனா..மற்றது சிவப்பும் இன்னொன்று பச்சைப் பேனாவும் இருக்கும்.ஒருநாள் நான் பார்க்கர் பேனா.சக்தி கேம்லின் பேனா..மற்றொரு நாள் இருவரும் மாற்றிக் கொள்வோம்..அம்மாவின் பேனா வழ வழ என்று எழுதும்.அம்மா கட்டியான ஊதா மை நிரப்பி இருப்பார்..இப்படி பல காரணங்களால் நாங்கள்  அந்த பேனாக்களின் மேல் ஆசை வைத்திருந்தோம்..அன்றும் அவ்வாறே அம்மாவின் பேனா பையைத் திறக்க மேலும் இரண்டு புது பேனாக்கள்..

பள்ளியிலிருந்து கடைக்குப் போனீங்களாம்மா என்றாள்..இல்லை என்று பதில் வந்தது.ஏதும்மா இந்தப் பேனா என்று சக்தி கேட்கவும் பேனாக்காரர் வந்தார்.என்றதும்..ஹை..இந்தப் பேனாவை நான் வச்சுக்கட்டுமா அம்மா நு கேட்டுவிட்டு..இது எவ்வளவு ம்மா என்றாள்.பேனா.பென்சில்.ஒரு அழிப்பான்.ஸ்கேல்.பென்சில் சீவி எல்லாம் இருபது ரூபாய்..

எங்கேம்மா பென்சில் எரேஸர் எல்லாம் என்று மீண்டும் சக்தி கேட்க..இதை மட்டும் தான் தந்தார்.இன்று பள்ளியில் எல்லோருமே பேனாக்கள் வாங்கினார்கள்.அதனால் அந்த பேனாக்காரர் எனக்கு இந்த பேனாக்களைக் கொடுத்தார் என்று சொன்னதும் சக்தியின் முகம் மாறி விட்டது..அப்போது அவள் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். இந்த பேனா வாங்க காசில்லையாம்மா , ஏன்ம்மா..அவர் வேறு வேலை கிடைக்காமல் தானே இந்த பேனாக்களை விற்கிறார் அதை எப்படி நீங்கள் வாங்கலாம் என்று இருவருக்கும் வாக்குவாதம் ஆரம்பித்து விட்டது..நானா வாங்கலை அவராத்தான் கொடுத்தார் என்று அம்மா சொல்ல..எதுவும் சக்திக்கு ஏறவில்லை..
சக்திக்கு பிடிக்காத விஷயத்தை நாம் செய்து விட்டால் அவள் பேசவும் மாட்டாள் சாப்பிடவும் மாட்டாள்..அன்று பார்த்தா அம்மா பூரி செய்ய வேண்டும்.சக்தி சாப்பிடலைனா எனக்கும் மனசு கஷ்டமாகும்.சாப்பிடாமல் இருக்க முயற்சி செய்வேன்.ஆனா கடைசியில் பசி வெல்லும்.இவர்களுக்குள் என்ன தான் நடக்குதுன்னு பார்ப்போம்னு அவர்கள் வாக்குவாதத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டேன்.சரி இனிமே வாங்கலை என்று எத்தனையோ முறை அம்மா மன்றாடியும் சக்தி கேட்கவே இல்லை. சரி இந்த மாதம் ஏதேனும் ஒரு போட்டி வச்சு உங்கள் மாணவர்கள் எல்லோருக்கும் ஒரு பேனா பரிசு கொடுங்கள் என்று சக்தி தீர்ப்பு சொல்லி விட..ஹைய்யோ அதற்கு 300 ரூபாய் ஆகும்.பெட்ரோலுக்கு மட்டும் தான் காசு இருக்கு வேற பநம் இல்லைடா என்று அம்மா சொன்ன போதும் சக்தி விடாப்பிடியாய் தன் தீர்ப்பை மாற்றவில்லை..( இவளைத்தான் கர்நாடக அரசை தண்ணீர் தர அனுப்ப வேண்டும்)

அன்றும் மறுநாளும் சக்தி அம்மாவோடு பேசவில்லை..சக்திம்மா சக்திம்மா என்று கெஞ்சியும்.பேசவில்லை..இல்லைம்மா..பேசாமல் இருந்தால் தான் அந்த வலி தெரியும்.பேசினால் நான் சாப்பிட மாட்டேன்.என்ன செய்யம்மா என்று கேட்க. சரி சக்தி நீ சாப்பிடு நா பேசலை என்று ஒருவாறாக அந்தப் பிரச்சினை முற்றுக்கு வந்த்தது.( அப்பாடா..அன்று பூரிக்கு கிழங்கோடு பட்டாணியும் போட்டு செய்யப்பட்டிருந்ததை இழக்க வேண்டி வருமோ என்று நான் ரொம்பவே பயந்து போனேன்)

அடுத்தடுத்த நாட்களில் அம்மாவுக்கும் சக்திக்கும் இடையில் நான் தான் தூது..வேணுமா கேளு..சொல்லு என்று அருகில் இருந்து கொண்டே என்னிடம் பேசுவார்கள்..எனக்கே வேடிக்கையாக இருக்கும்..ஆனால் இதைப்பார்த்து நான் சிரிக்கப் போய்..ஸ்டாலினைப் பார்த்து சிரித்த ஓ பி எஸ் நிலையாய் மாறிவிடுமோ என சிரிப்பை அடக்கிக் கொள்வேன்..

அந்த மாத இறுதியில் அம்மா பள்ளிக்கு சைக்கிளில் செல்ல நேர்ந்தது..பார்ப்போர் எல்லாம் என்ன சைக்கிள் ல போறீங்க என்று கேட்க..இல்லை..உடற்பயிற்சி என்றே அம்மா சொல்லி சமாளிச்சாங்க..

அம்மா தினமும் கால் வலியால். அவதிப்பட்டு துடித்த போதும் அவள் அந்தப் பணத்தில் பேனாக்கள் வாங்கி பள்ளிக்கு சென்று அவளே வழங்கினாள்.அந்த அளவுக்கு சக்தி உறுதியானவள்.( ஆனா இந்த நேர்மை எல்லாம் கொஞ்சம் ஓவர் தான் சக்தி)

இதே போன்ற ஒரு தமிழ் புத்தாண்டு அன்று தான் மீண்டும் இருவரும் பேசிக் கொண்டார்கள்..சக்தி கோபப்பட்டால் நான் நேராக அடுப்படிக்குச் சென்று அன்று இரவு என்ன டிபன் ? அதை இழக்கலாமா வேணாமா என்று மனதிற்குள் பட்டிமன்றம் வைத்து..அதன்படி வேண்டுவதே என் வழக்கமாயிற்று..

சக்தியைப் பொருத்தவரை இலவசமாய் யாரிடமும் ஏதும் வாங்கக் கூடாது.அது அரசாங்கமே தந்தாலும்.
இப்படித்தான் பழைய அரசு இலவச தொலைக்காட்சி பெட்டி அறிவிக்க முதல் முறை அம்மா போய் அதை வாங்கவே இல்லை..மறுமுறை எங்கள் வீட்டு வாசலில் கொட்டகை போட்டு வாங்காதோர் பட்டியலில் அம்மா பெயரை சத்தமாக வாசித்துக் கொண்டே இருந்தார்கள்..அதுவும் அந்த பகுதி உறுப்பினர் அம்மாவின் பள்ளி வயது தோழர் என்பதால் அம்மா கூட்டத்தில் சிக்கி இருக்கலாம் என்று கூடுதலாக இரண்டு முறை கூப்பிட்டார்.சக்திக்குத்தெரிந்தால் அவ்வளவுதான்..அம்மா வாங்கக் கூடாது என்றே நான் வேண்டிக்கொண்டேன்..அன்றும் வீட்டில் பூரியும் குருமாவும்.

விழா முடிந்த பின்னர் அந்த அங்கிள் வீட்டுக்கே வந்து என்ன சுவாதி நீ ஏன் வரலை? உன் பெயரை நான் ஐந்து முறை கத்தினேன்..இந்தா இந்த ரிஜிஸ்டரில் கையெழுத்து போடு..என்று சொல்லிவிட்டு உதவியாளர்கள் கொண்டு வந்த பெட்டியை உள்ளே வைத்தார்..(ஆஹா...)

இல்லை மணி..எனக்கு இலவசம் வேணாம் நீயே வச்சுக்க..இல்லாட்டி யார்ட்டயாவது கொடு..என்று அம்மா சொல்ல.. உன் பிள்ளைகள் தான் நல்லா படிப்பாங்களே ஏன்..இப்பவே டிவி வேணாங்குறே..பத்தாவது வந்தா நிப்பாட்டிக்கலாம்.அரசாங்கம் சும்மா கொடுக்குறதை ஏன் விடணும்னு அவர் மீண்டும் சொல்ல..இல்லை மணி..படிச்ச நாமே இலவசம் வாங்குறதால தான் அவங்க இலவசம் கொடுக்குறாங்க..அதனால வேணாம் என்று மறுத்து ..நீண்ட வாதத்திற்குப் பிறகு அவர் கொண்டு வந்த டிவியை எடுத்துப் போய்விட்டார். அவரோடு வந்தவர்கள் டீச்சரம்மான்னா டீச்சரம்மா தான்..இப்படி நாட்டுல நாலு பொம்பிளை இருந்தால்.போதும்னு பாராட்டிக்கிட்டே போனாங்க...

ஆனா அடுத்த முறை இதெல்லாம் ஏதும் தெரியாத டாடி..இலவசமா கொடுத்த பேன் மற்றும் மிக்ஸியை வாங்கி வந்துவிட...அவரோடு ஆறுமாதம் பேசவில்லை...

இன்று நான் தென்காசியில் இருக்கிறேன்.தாத்தா ஆச்சியுடன்..அம்மாவும் சக்தியும் சென்னையில்..என்னை நினைத்தே சக்தி மதியம் வரை சாப்பிடலை..மனசுக்குக் கஷ்டமா இருந்தாலும் அந்த அன்பை  நினைத்து பெருமை கொள்கிறேன்..

( அம்மாவின் பாயாசமும் வடை..கூட்டு வறுவல்...இதையும் இன்று இழந்தாலும் இன்று உலகம்மன் கோயிலுக்கு சென்றோம்..இரவு ராமேஸ்வரம் செல்கிறோம்...)

மிஸ் யூ சக்தி

Wednesday, 12 April 2017

தெய்வீக ராகம்

இரண்டு நாட்கள் புதுகையில்...டாடியோடு இருக்கலாம் என நினைத்தேன்...ஆனால் டாடி நிலவன் அங்கிளோடு...

என் தோழிகள் யாரையும்.பார்க்க இயலவில்லை..அம்மாவும் பள்ளிக்குச் சென்று விட்டார்..அம்மா என் போனையும் எடுத்துச் சென்றுவிட தொடர்பு கொள்ளக்கூட இயலவில்லை...மீண்டும் நானும் புத்தகங்களும்...
ஐஸ்வர்யா கூட்டிப் போனார் டாடி..

இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தபின் புதுகை வந்திருக்கிறேன்..சில மாற்றங்கள் தவிர ஏதுமில்லை...ஆதிகாலத்து அலங்கார மாளிகை கடை வந்திருப்பதாகவும் அந்த பிருந்தாவன வீதி எப்போதும் கூட்டமாக இருப்பதாகவும் சொன்னார்கள்..போகவில்லை..மறுநாள் பங்குனி உத்திரம் என்பதால் நகைக் கடை வீதி..அதாவது மார்கெட் வீதி கூட்டமாய் இருந்தது..அதுவும் டி நகர் கூட்டம் போல் இல்லை..இப்படி எனக்குள் ஒரு நினைவு வந்ததும் எனக்கே ஆச்சர்யமாய் இருந்தது...மனிதர்களை மட்டும் அல்ல..இடங்களையும் ஒப்பிடுவது தவறு...

நூலகம் செல்ல நினைத்தேன்..புதுக்குளம் செல்ல நினைத்தேன்..ஆனா புவனேஸ்வரி கோயில் சென்றேன்..

இருக்கும் இரண்டு நாட்களில் டாடியைக் கேட்காமல் நானாக பிரகதம்பாள் கோயில்..மியூசியம்..குமரமலை..புதுக்குளம்..சினிமா நட்புகளை சந்திக்க வேண்டும் என்று நினைத்ததெல்லாம் தப்பு..எனக்காக அவர் தன் இயல்புகளை விட வேண்டியதில்லை..ஆனாலும் வருத்தமளித்தது என்றால் அது என் மனதின் விசித்திரம்...

புதுகை எனக்கு மகிழ்வையும் குதூகலத்தையும் தரவே இல்லை..இரவே. அம்மாவின் ஆணைக்கிணங்க..தென்காசி தாத்தாவீடு கிளம்பியாகிவிட்டது

அங்கு என்னை ஒரு பத்து கிலோ வாவது ஏற்றிவிட வழி வகைகளை ஆச்சி கட்டாயம் செய்யும்.சற்றே பயம் என்றாலும் ஆச்சி..தாத்தாவின் அன்பு அலாதியானது..இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதில்லை..பிரியங்களைக் கொட்டுவதில்...

ஆனால் பெரிய ஆபத்து என்ன வென்றால் திருவாசகம்..தேவாரம்..சிவ புராணம்.கந்த சஷ்டி கவசம்..மகிஷாசுர மர்த்தினி சுலோகம்...என்று இந்தந்த தினங்களில்..இன்னின்ன நேரங்களில் அதைச் சொல்ல வேண்டிய கட்டாயமும்..வலியுறுத்தலுக்கும் ஆளாக்கப்படுவேன்..அது தான் இடர்கிறது..

சாமி கும்புடுவது கட்டாயமாக்கக்கூடாது என்பது தான் என் கருத்தே தவிர..கும்பிடவே வேண்டாம் என்பதல்ல...

இன்னொரு நாள் இந்தப் பயணக்கட்டுரைகளையும்..அனுபவக் கட்டுரைகளையும் வெளியிடுகிறேன்.இப்போதைக்கு விடை பெறுகிறேன்...
இதோ தாத்தா பாடுகிறார்

...வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய்                                                                         இன்மையுமாய்க்
கோனாகி யான்எனது என்று அவரவரைக்                                                                   கூத்தாட்டு
வானாகி  நின்றாயை என்சொல்லி                                                                     வாழ்த்துவனே...

Tuesday, 4 April 2017

தொடக்கம்

முகங்கள் 999 என்ற தலைப்பிலும்...அம்மாவும் நானும் என்ற தலைப்பிலும் சில கட்டுரைகள் தொகுக்கலாம் என்று நினைத்திருக்கிறேன்..

முகங்கள் 999 ல் நான் சந்தித்த..பார்த்த..பழகிய...பேச நினைக்கிற..தொடர்பு கொண்ட அனைத்து நபர்களையும் எழுதத் திட்டம் வைத்திருக்கிறேன்..

இந்த சமூகத்தில் அப்பாவையும் மகளை பற்றித்தான் நிறைய கதைகளும் கவிதைகளும் இருக்கிறதே யொழிய அம்மாவுக்கும் மகளுக்குமான தொடர்புகள்..அந்யோன் யம் சொல்லப் படுவதே இல்லை...மேலும் என் உலகம் முற்றிலுமாக என் அம்மாவால் மட்டுமே வடிவமைக்கப்பட்டது..(உணர்வு உலகம் சக்தியால் சமைக்கப் பட்டது)எனவே அம்மாவும் நானும் தலைப்பின் கீழ் எனது நேசத்தை..நெருக்கத்தைச் சொல்லலாம் எனத் தோன்றியது..இப்படி இருப்பார்களா ? என்ற கேள்விக்கும் இப்படியும் இருந்திருக்கிறார்கள் என்ற புரிதலுக்கும் இக்கட்டுரைகள் வழி வகுக்குமென நம்புகிறேன்..

பெருவாரியான எனது தனிமைகள் புத்தகங்களால் செதுக்கப் பட்டவை..அதனாலோ என்னவோ குழந்தைமைப் பருவத்திலேயே எனக்குள் ஒரு முதிர்வான மனநிலை தோன்றி விட்டது..அதோடு..பிற தோழமைகளுடன் சராசரியாய் என்னால் ஒட்ட இயலவில்லை என்பதையும் வெகுநாட்கள் கழித்தே உணர்ந்தேன்..

எங்கேனும் சில அப்பாக்கள் தங்கள் மகள்களை மகிழ்வாய் பேசி..சிரித்து...அழைத்துச் செல்கையில் எனக்குள் பிறக்கும் ஏக்கங்கள்..அப்பாடா நான் உலகத்தோடு ஒட்ட ஒழுகல் சம்பவத்தில் இருக்கிறேன்..என்று பூமிக்குத் தரை இறங்குவேன்..எனக்குள் தோன்றும் சில எண்ணங்கள்.மாற்றங்கள்.உணர்வுகள்..இன்னபிற செயல்பாடுகள் காரணமாக நான் பிறரிடம் பேசுவதைக் குறைத்துக் கொண்டேன்..அதே சமயம் நான் என்னை எப்போதும் மேதாவியாய்க் காட்டிக் கொண்டதே இல்லை..ஆசியர்கள் தவறாக சில செய்திகளை போதிக்கும் போதும் இவர்கள் தாங்கள் என்ன பிழை செய்கிறோம் என்று தெரியாமல் செய்கிறார்கள் மன்னியுங்கள் இறைவா என்றும் கூறிக் கொண்டது உண்டு..

எப்போதும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்லும் என் தோழிகளின் அம்மாக்களும்..தொலைக்காட்சி பார்க்கிறான்..நண்பர்களோடு சுற்றுகிறான் என்று ஆசிரியரிடம் புகார் சொல்லும் சில நண்பர்களின் அம்மாக்களையும் கண்டு எனக்கு அயற்சி ஏற்பட்டது ஒரு காரணமென்றால்..பள்ளிப்படிப்பைத் தவிர எங்கள் சிந்தையில் ஏதுமே இருக்கக் கூடாது என்று சொல்லும் ஆசிரியர்களை என்ன சொல்வது??

கண்ணதாசனில் வரிகளாய் ..போற்றுவார் போற்றட்டும்.புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும்..எதற்கும் அஞ்சேன்.நில்லேன் என்ற உறுதிமொழியையும் எனக்குள் சொல்லிக் கொள்கிறேன்..(பிறர் மனம் புண்படாதவாறு தான் சொல்வேன்)

நான் படிக்க வேண்டும் என்று எண்ணியவைகள்.எல்லாம் எனக்குக் கிடைத்திருக்கின்றன..அதற்காக இப்போதே நான் ஞானி என்று சொல்லி பெருமைப் படுவதும் நியாயமில்லை..படித்த புத்தகங்கள் என்னை செதுக்கி இருக்கின்றன்..தொலைக்காட்சி இல்லாத என் வீடு வாசித்தலை மட்டுமே தந்திருக்கிறது..இந்தப் பயிற்சியை பெற முழுக் காரணமும் அம்மாவைத்தான் சாரும்.

எங்களுக்காக வேலையை விடும் துணிச்சல்..கடைகளில் கணக்கெழுதுவது.சைக்கிளில் எங்களை அழைத்து சென்றது.காசே இல்லாத போதும் எங்கள் தேவைகளை நிறைவேற்றியது எல்லாமே அம்மா தான்.அப்பா எங்களோடு இல்லை என்பதை நாங்கள் உணராதிருப்பதற்குக் காரணமும் அம்மா தான்.யாதுமாகி நின்றாள் என்ற வார்த்தை அம்மாவுக்கே பொருந்தும்..

பணத்தேடல்களில் தொலைந்தே போகாமல் குழந்தைகள் அவர்களின் விருப்பங்கள் ஆசைகள்.ஏக்கங்கள் எதிர்பார்ப்புகள் என்று எவ்வளவு இருக்கிறது என்பதைச் சொல்வனவாகவும் அவை இருக்க வேண்டும்..

சொல்லுமா என்பது சந்தேகம் தான்.ஆனால் சொல்ல வேண்டும் என்பதே எனது ஆசை..

இவற்றில் சில 
அழ வைக்கலாம்
தொழ வைக்கலாம்
எழ வைக்கலாம்
விழ வைக்கலாம்

வழக்கம் போல் எனது முயற்சிகளுக்கும்..செயல்பாடுகளுக்கும் உங்களின் ஆசியை வேண்டுகிறேன்..

( பின் குறிப்பு...இன்னும் நீட் தேர்வு தொடங்க இருப்பதால் எனக்கு வழங்கப்பட்டுள்ள நேரத்திற்குள் அனைவரின் வலைதளத்தையும்.ஒரு சேர படிக்க இயலவில்லை...படித்து விட்டு வெறுமனே அருமை.நன்று.வாழ்க..என்ற பின்னூட்டங்களை மட்டுமே என்னால் எழுத இயலாது..ஏதேனும் சொல்லவும் கேட்கவும் நினைக்கிறேன்..நீங்கள் எல்லோரும் என் உறவினர்கள் என்ற முறையில்..அதனால் சற்று கால தாமதம் ஆகிறது...மன்னியுங்கள்)

நிலவன் அங்கிளுக்கு மட்டும் இது...இது முற்றிலும் தமிழாக...பிற மொழிச் சொல் கலவாமல் இருக்கும் என்று உங்களுக்கு உறுதி அளிக்க இயலாது..ஏனெனில் தேவை கருதி கலப்பேன்..

Sunday, 2 April 2017

பிறந்த நாள்...இன்று பிறந்த நாள்,....

பிறந்த நாள்...இன்று பிறந்த நாள்,.....

என்னைக் கண்டு பயப்படுகிறாரா அல்லது பயப்படுவது போல் நடிக்கிறாரா தெரியவில்லை....

பணம் இருந்தால் பத்து அல்ல பதினொன்றும் செய்வார்...

திருப்பூர்..சிங்கப்பூர்..புதுக்கோட்டை...என்று எங்கெல்லாமோ சென்றாலும் இன்னும்  தெரியாத அப்பா...வி

எப்போதும் கடன்களாலும்...கவிதைகளாலும் சூழப்பட்டிருப்பவர்...

எனக்குத் தெரிந்து இவர் பெரிய சந்தோஷங்களை அனுபவிக்கவில்லை,..அல்லது தேடவே இல்லை..அல்லது மகிழ்வு என்றால் என்ன என்று தெரியவில்லை....

சின்னவயதில் கடல் கடந்ததால் பிரிந்து...இப்போது கடல் போல் படிப்புக்குள் நான் என்னைத் திணித்துக் கொண்டதால் பிரிந்து...வரும் காலத்திலும்...பணிகளால் பிரிந்து தான்.....ஆனாலும் ஒட்டிக் கொண்டே இருக்கிறது..பாசமும்...பிரியமும்.நேசமும்...இன்னும் சொற்களுக்குள் அடங்காத சிலவைகளும்

வளர்ந்த அறிவை முறையாகப் பயன்படுத்தி இருந்தால்....நல்லா இருந்திருக்கலாம்

எப்போதேனும் டாடி என்பேன்...எப்போதும் டேய் என்பேன்...எல்லாவற்றுக்கும் அதே சிரிப்பும்...அதே தலை அசைத்தலும்

இவரிடம் என்ன கேட்டாலும் ..வாங்கித் தருவேன் என்று சொல்வார்...ஆனால் ...வரும் ஆனா வராது தான்...

இவரால் நிறைய சம்பாரிக்க இயலாவிட்டாலும் நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய நண்பர்களை சேர்த்து வைத்திருப்பவர்...

இப்போதைக்கு நானே இவருக்கு உயிர்...சக்தி தான் உலகம்...

எல்லோருக்கும் வாழ்க்கை...கசப்புகள்...கண்ணீர்...கருப்பு...களிப்பு....கவலை...எல்லாவற்றையும் தருகிறது....இவருக்கும் வரட்டும்...எல்லாவற்றிலிருந்தும் மீளட்டும்...

எல்லா நேரங்களிலும் மென் மனதாகவும்...சில நேரங்களில் வன் மனதாகவும் இருப்பவர்..

வாழ்த்துவேன்...( வணங்கல்லாம் முடியாது...நான் தாளை வணங்காத் தலையாக்கும்)

அன்பு வளரட்டும்
அருள் நிறையட்டும்(பின் குறிப்பு) உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற..மெய்யா விமலா விடைப்பாகா..வேதங்கள் அய்யா என ஓங்கி...ஆழ்ந்து...அகன்ற...நுண்ணிய அறிவுடையோன்...

இப்டி புகழ்வேன் நு நினைச்சீங்களா டாடி

தேர்வு...தேர்வு.....தேர்வு

தேர்வு...தேர்வு...தேர்வு...தேர்வு...

31 ம் தேதியோடு பள்ளித்தேர்வுகள் முடிந்தது...

இனி என்ன வழக்கம் போல் புத்தகங்கள் ...வலைதளம்...குறும்படங்கள்...கட்செவி செய்திகள் என வாழலாம் என்று நினைத்து தான் முந்தைய பதிவைப் போட்டேன்...
கொஞ்ச நேரம் தூங்கலாம் என நினைத்த போது காபியும் வடையும் வந்தது...அடடா...மணக்க...மணக்க...சுவைத்து சாப்பிட்டதும்..அம்மா இரண்டு பெரிய தலையணைகள் எடுத்து வந்தார்.. 
அடடா
அம்மாவிற்கு தான் என் மேல் அளவு கடந்த அக்கறை பாசம் என்றெல்லாம் நினைத்தேன்...ஆனால் அது தலையணைகள் அல்ல..புத்தகங்கள்...2,ம் தேதி.JEE Main ஒருமணிநேரம் விளையாண்டது போதும்...படி..அக்கா வந்தா கேப்பா..நு சொல்லி..மீண்டும் என்னை அறைக்குள் அடைத்து...தள்ளி...கதவைச் சாத்திட்டுப் போய்ட்டாங்க....தலையணைகளில்...மன்னிக்க...புத்தகங்களில் இருந்தவை..சில படித்தவை..சில தெரியாதவை...

என்ன செய்ய்ய்ய்ய???

மனசுக்குள்ள...குயிலப் புடிச்சு கூண்டிலடைச்சு...கூவ ச்சொல்லுகிற உலகம்...என்ற சிச்சுவேஷன் பாடலைப் பாடிக்கொண்டே...படித்தேன்...

வாட்ஸப் குரூப் ல நாட்டுமக்கள் எல்லோரும்...சினிமா போகலாமா????பீச் க்கு போலமானு கேட்டு..கேட்டு மெஸேஜ் பண்ண....நானோ தலையணைகளோடு..மீண்டும் மன்னிக்க...புத்தகங்களோடு....

பின் குறிப்பு...இந்த பதிவை நான் எழுதிக் கொண்டிருந்த வேளையில்...சில அம்மாக்களும்..பற்பல அப்பாக்களும்..நீட் தேர்வுக்குப் படிக்கவும்..ஹிந்தி கற்கவும்..கணினி பயிற்சி..நீச்சல்,எழுத்துப் பயிற்சி.. பேச்சு..என்று ஏதேதோ பயிற்சிகளுக்கு அனுப்ப ஆலோசிப்பதாகவும்..பலர் முன் பணம் கட்டி சேர்த்து விட்டதாகவும் அறிந்தேன்...( ஆமா...ஐஸ் வாங்க...ஹோட்டல் கூட்டிப் போக...சினிமா கூட்டிப் போக..காசில்லை காசில்லை நு சொல்ற பெற்றோர் பெருமக்களே இந்த கோர்ஸ் ல கொண்டு போய் விட மட்டும் உங்களுக்கு காசு எப்டி கிடைக்குதுங்குற உண்மை எனக்குத் தெரிஞ்சாகணும்..)

என் தோழியை அவ அப்பா ...காசென்ன மரத்துலயா காய்க்குதுனு கேட்டாராம்
ஆமா...அதற்கான காகிதங்கள் மரத்திலிருந்து தானே எடுக்கப் படுகிறது...)

இன்றைய கேள்வி...மோடி அங்கிளுக்கு...

டிஜிட்டல் இந்தியாவை நீங்கள் உருவாக்கும் முன் குழந்தை போற்றும் இந்தியாவாக எப்போது மாற்றுவீர்கள்???

பற்பல நாடுகளுக்குச் செல்லும்.நீங்கள்...அந்நாட்டின் குழந்தைகள் நலன் மேம்படுத்த என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பதில்லை...கேட்பதில்லையா???

செல்வ மகள் திட்டம் தவிர..கல்விக்கு...மகிழ்வான கல்விக்கு என்ன செய்தீர்கள்? என்ன செய்யப் போகிறீர்கள்???

கடைசியா...ஒரு குறும்பு அறிவுரை....அடுத்த முறை தமிழகம் வந்தால் அந்தம்மாவுக்கு நாலஞ்சு சீப்பு வாங்கிக் கொடுத்துட்டுப் போங்க.....


( எங்கேயோ ஆரம்பிச்சு...எங்கேயோ முடிப்பதெல்லாம் ராகசூர்யா ஸ்ஸ்ஸ்டைலூ ஊ)))