Wednesday 30 September 2015

பொம்மைகளும் நாங்களும்...

புதுகையில் நடக்கும் வலை பதிவர் விழாவிற்காகவும், தமிழ் இணையம் நடத்தும் போட்டிக்காகவும் மட்டுமே எழுதப்பட்டது. என்று உறுதியளிக்கிறேன்.2015.போட்டி முடியும் வரை வேறெங்கும் அனுப்ப மாட்டேன் என்றும் உறுதியளிக்கிறேன்.

வகை 2. 
****************************************************


இந்த உலகத்துல ரொம்பக் கஷ்டம் ரொம்பக் கஷ்டம் பல பேரு பல மாதிரியா புலம்புவாங்க...

நாங்க எப்படிடா மார்க் வாங்குறதுன்னு புலம்புவோம்ல அது மாதிரி..

சின்னப் பிள்ளையா இருக்கும் போது அம்மா கடைக்குக் கூட்டிட்டுப் போனா எதையாவது வாங்கணும் வாங்கணும் தோணும்...ஆனா அம்மாவைப் பார்க்க பாவமா இருக்கும். எல்லா அம்மாவும் அதெல்லாம் வேணாம் நு சொன்னா எங்க  அம்மா மட்டும் உடனே தன் பர்ஸைப் பாப்பாங்க. அதுல பணம் இருந்ததுனா எதா இருந்தாலும் வாங்கிருவாங்க. அப்படி தான் பல பொம்மைகள் எங்க வீட்டுல

நடக்குற பொம்மை, கார் பொம்மை, டெடிபியர் , பாப்பா பொம்மை, இப்படி பல பொம்மைகள் எங்கள் வீட்டில்.

அப்பா சிங்கப்பூர் போனதும் சாக்லேட் வாங்குனாரோ இல்லையோ பொம்மைகள் வாங்கி அனுப்பினார். கவனிக்க பொம்மை”கள்..”

,அம்மாவுக்கும் அப்போது பதவி உயர்வு கிடைக்க புதுக்கோட்டையின் கடைக்கோடி கிராமத்துக்கு மாற்றப்பட்டார். அப்பா அருகே இல்லாததால் நாங்கள் வேறு ஒரு வாடகைக்கு எங்கள் பள்ளியின் அருகே வீடு பார்த்து மாறினோம். 

அம்மா சமையல் சாமான்கள் , புத்தகங்கள் மட்டும் எடுத்துச் செல்லலாம். வாராவாரம் இந்த வீட்டுக்கு வரலாம். வீட்டை வாடகைக்கு விட வேண்டாம் என்று சொல்ல, நாங்கள் எங்கள் பொம்மைகளை பரிதாபமாக பார்த்தோம்.அ ம்மாவிற்கு எங்கள் மீது இரக்கம் பொத்துக் கொண்டு வர பொம்மைகளோடு பயணமானோம்.

மாலை அம்மா பள்ளிவிட்டு இரண்டு பேருந்துகள் மாறி பேருந்து நிலையம் வந்து அதன் பின் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை எடுத்து வர வேண்டும். அது வரை இந்த பொம்மைகள் தான் எங்களின் ஆறுதலும் தேறுதலும். அம்மா வீடு வந்ததும் ஏன்மா வீடெல்லாம் இப்படி பரப்பி போட்டுருக்கீங்க என்று தினமும் கேட்பாள். அப்போதெல்லாம் எங்களுக்குப் புரிவதில்லை. அதன் பழுவும் சுமையும்.

அம்மாவுடன் நாங்களும் சேர்ந்தே எடுத்து வைத்து அதன் பின் ஏதாவது செய்து சாப்பிட்டு வீட்டுப் பாடங்கள் எழுதி தூங்கப்போகும் போதும் எங்களோடு தூங்கும் பொம்மைகளும்..

தினமும் அவைகளோடு வாழ்வதால் நானும் அக்காவும் அதற்கு பெயர்கள் வைத்தோம். எங்களுக்கு பெயர்கள் இருப்பதால் அவைகளுக்கும் அவசியம் பெயர் இருக்க வேண்டும் என்று கருதினோம். 

வெள்ளை டெடி பியர் ,(நந்து,),  பெண் பொம்மைக்கு மித்ரா,நாய்க்குட்டி பெயர் சிவா, டைகருக்கு ரோஷன், கருப்பு டெடிபியருக்கு கார்த்திக், தலை விரித்து ஆடும் பொம்மைக்கு வந்தனா, தையா தையா என்று ஆடும் பொம்மைக்கு பப்பி, அப்படியாக பெயர்களை அன்றாடம் வைப்போம். மிகச் சரியாக ஒவ்வொன்றின் பெயரையும் சொல்லி அழைப்பாள் அக்கா.

இதெல்லாம் அம்மாவிற்குப் புரியாது என்று நினைத்த வேளையில் ஒருநாள் உன் நந்து ஏன் தண்ணிக்குள் கிடக்கிறான் என்று கேட்க நாங்கள் பெயர் வைத்தது அம்மாவிற்கு எப்படித்தெரியும் என்று எங்களுக்கு ஒரே ஆச்சரியம். அம்மாவும் , என் கனவில்நீங்கள் என்ன செய்றீங்கன்னு பிள்ளையார் அப்பச்சி தினம் தினம்வந்து சொல்லும் என்று சொன்னவுடன் அப்படித்தான் போல. என்று நினைத்து தெரியாமல் நான் சாக்லேட் சாப்பிட்டால் கூட தெரிந்துவிடும் என்று பயந்து நான் அம்மாவுக்கு தெரியாமல் சாக்லேட் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். 

பொம்மைகளின் எண்ணிக்கை வர வர அதிகமாகியதே தவிர குறையவில்லை. எங்கள் வீட்டில் ஷோ கேஸ் ல இருக்கிற பொம்மைகளைப்பார்த்து விட்டு  பிறந்தநாள் தீபாவளிக்கெல்லாம் பொம்மைகள் கிடைத்தது. 

தாத்தாவும் ஒருநாள்  நாங்கள் பொம்மைகளோடு விளையாடுவதைப் பார்த்து ஒரே நேரத்தில் 10 பொம்மைகள் வாங்கித் தந்தார். ஒவ்வொரு பொம்மைக்கும் பெயர் வைப்பது சற்று சிரமாக இருந்த பொழுதில் அம்மா தன் பள்ளியில் உள்ள பெயரைச் சொல்லச் சொல்லி அதன் பெயர் வைப்போம். அல்லது எங்களது வகுப்பில் உள்ளவர்களின் பெயர்கள் வைக்கப்படும். எங்கள் வகுப்பு பெயர்களை நாங்கள் விரும்புவதில்லை. அப்புறம் அந்த உண்மையான பிரண்டு டன் ”டூ “ விட்டால் இந்த பொம்மை களுடனும் விளையாட முடியாதே.

   வாடகை அதிகமாக அதிகமாக, பள்ளி மாறியதாலும் வேறு இரண்டு வீடுகள் மாறும் போதும் பொம்மைகள் கூடவே வந்தன. 
 எங்கள் தேவையான பொருட்களுக்கு ஆகும் இடத்தை எல்லாம் இந்த பொம்மைகள் ஆக்கிரமித்ததாலும் நாங்களும் பொம்மைகளோடு கொஞ்சம் தள்ளி இருக்க ஆரம்பித்தோம். 
நாங்கள் சென்னை வந்த போது முக்கியமான பொம்மைகளை மட்டும் எடுப்போமா என்றாள் அக்கா. ஆனால் அங்கே வீடு எப்படிக் கிடைக்குமோ என்ற பயத்தால் எடுத்து வரவில்லை. இப்போது பொம்மைகள் புதுகை வீட்டில் சிலிப்பர் செல்லாக மேலே பரணில் கிடக்கிறதாம்..

உங்கள் யாருக்கேனும் அந்த பொம்மைகள் வேண்டுமா?

பின் குறிப்பு:
*****************
சில நாள் கழித்து நீங்களும் இப்படிஒரு பதிவு போடுவீர்கள்.

பரணுக்குள் கிடந்தாலும் அம்மாவின் அன்போடும் அப்பாவின் ஆசையோடும் கிடக்கின்றன பொம்மைகள்
******************************************************


நீதி:
*******
சத்தியமாய் தேவைக்கும் அதிகமாக பொருட்கள் வாங்கினால் உங்களுக்கும் உங்களை ச் சுற்றும் சூழலுக்கும் பாதிப்பு தான்
தத்துவம்:
************
நீங்கள் விளையாட தேவையான பொம்மை தவிர வாங்கும் ஒவ்வொரு பொம்மையும் அடுத்தவருடையது. அதுவும் நல்லதல்ல...


அன்று...இன்று...நன்று

புதுகையில் நடக்கும் வலை பதிவர் விழாவிற்காகவும், தமிழ் இணையம் நடத்தும் போட்டிக்காகவும் மட்டுமே எழுதப்பட்டது. என்று உறுதியளிக்கிறேன்.2015.போட்டி முடியும் வரை வேறெங்கும் அனுப்ப மாட்டேன் என்றும் உறுதியளிக்கிறேன்.வகை 4. புதுக்கவிதை
******************************************************

அன்று...இன்று...நன்று....

ஆடைகள் நமக்கு அரணாகும்
பெரிய கூட்டங்களுக்கு
சாதாரண ஆடை அணிய முடியாது அன்று
ஆணுக்கும் பெண்ணுக்கும்
அரையாடையே
முழு ஆடை ஆனது இன்று.

கிழிந்த ஆடை என்றால்
மதிப்பில்லை அன்று
ஆங்காங்கே
கிழித்துப் போட்டால் நன்று இன்று

தமிழ் பேசினால் கைதட்டி
முதல்வர் பதவி
கொடுத்தது அன்று
தமிழ் பேசினால்
கை கொட்டி சிரித்து
கேவலப்படுத்துது இன்று

தமிழுக்காக தண்டவாளத்தில்
தலைவைத்துப் படுத்தது அன்று
தமிழ் வராது, என்று சொல்வது
நாகரீகம் இன்று

ஏதேனும் ஒரு படிப்பு படித்தால்
வேலை கிடைக்கும் அன்று
என்ன படித்தாலும்
வேலை கிடைக்காது இன்று

உழுதுண்டு வாழ்வாரை
பின் செல்வார் அன்று
உழுதோர் எல்லாம்
அழுதோர் ஆனார் இன்று

வீடுகளில் கொல்லைப்புறத்தில்
தோட்டம் இருக்கும் அன்று
கொல்லைபுறமின்றி
வீடுகள் கட்டி வாடகைக்கு விடும் இன்று

ஊரே சொந்தம் தான் அன்று
அதனால் தான் சொந்த
ஊர் எது என்று கேட்டார் அன்று
சொந்தமே இல்லாமல் பிணங்கள்
தான் நடக்குது இன்று

ஊருணி, குளம் என
நீர்நிலைகள் அன்று
அக்வாபினா போன்ற
நீர் நிலையங்கள் தான் இன்று

மூச்சு இருந்தால் தான்
உயிர் உண்டு உணர்வாய்
என்றும்
மூச்சு இருக்கும் போதே
திருந்திடுவாய் மனிதா
நன்று

***************************************************

Tuesday 29 September 2015

சமூகமே விழித்தெழு

புதுகையில் நடக்கும் வலை பதிவர் விழாவிற்காகவும், தமிழ் இணையம் நடத்தும் போட்டிக்காகவும் மட்டுமே எழுதப்பட்டது. என்று உறுதியளிக்கிறேன்.2015.போட்டி முடியும் வரை வேறெங்கும் அனுப்ப மாட்டேன் என்றும் உறுதியளிக்கிறேன்.வகை 2. சமூக விழிப்புணர்வுக் கட்டுரை
******************************************************

சமூகமே விழித்தெழு
**********************

பிறந்தது முதல் புதுகையிலிருந்து விட்டு திடீரென்று சென்னை வந்துள்ளோம். அங்கே அமைதியான சூழல் , சாலையில் அம்மாவுடன் வண்டியில் செல்லும்  போது வணக்கம் சொல்லி அன்புடன் பழகும் மனிதர்கள், எப்போதும் நிதானமான பேச்சு,  என்று எதுவும் இங்கு இல்லை. அதோடு அங்கே குழந்தைகள் சாலைகளில் தான் விளையாடுவார்கள், சதுர்த்தி, ஆவணி ஞாயிறு,ஆடிவெள்ளி,என்று எல்லா பண்டிகைகளுக்கும் சேர்ந்து ஏதாவது செய்வது, பழகுவது, நாங்கள் ஊருக்குப் போய் திரும்பி வந்தால் எதிர் வீடு பக்கத்து வீட்டின் விசாரிப்புகள், அன்புப் பரிமாற்றங்கள், இஸ்லாமிய நண்பர்கள் அவர்களின் பண்டிகைகளுக்கு அழைப்பதும் கிறிஸ்துவர்கள் அவர்களின் பண்டிகைகளுக்கு அழைப்பதும் மாறி மாறி நடந்து கொண்டே தான் இருக்கும். ஆனால் இங்கே ஒருவருக்கு ஒருவர் பேசுவது இல்லை.ஒரு புன்னகை கூட இல்லை. ஒருவேளை அதிகம் பழகாதது தான் காரணம் என்று நான் நினைத்திருந்தால் வீட்டின் அருகே இருபது வருடமாக கடை வைத்திருப்பவர், பக்கத்தில் இருக்கும் ஒருவர் 10 வருடமாக ஏதோ ஒரு கம்பெனியில் வேலை பார்ப்பவரோடு பேசுவதே இல்லையாம்.அதெப்படி சாத்தியம் என்று எனக்கு அவ்வளவு குழப்பமாக இருந்தது. அந்த வீட்டுப் பெண் நான் படிக்கும் பள்ளியில் படிக்கிறாள். எனக்கு இன்னும் இங்குள்ள வீதிகளைக் கடக்கத் தெரியவில்லை. (அம்மா இங்கே இல்லாத போது பள்ளிக்கு நானே தான் நடந்து செல்கிறேன்) ஏனெனில் சாதாரண சாலைகளிள் கூட நெருக்கம், நெருக்கம்.அதுவும் நாங்கள் இருப்பதோ உலகின் நம்பர் ஒன் மார்கெட் சிட்டி யான பீனிக்ஸ் மால் பக்கம் . அப்படியானால் எவ்வளவு கூட்டம் இருக்கும் என்று பாருங்களேன். அப்படி நான் சாலைகள் கடக்க எனக்கு யாருடைய உதவியாவது தேவைப் படுவதால் நான் அவளுடன் செல்வேன். அதுவே அவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. வேலை , வேலை விட்டு வந்தால் தொலைக்காட்சி என்று அவர்கள் வாழ்வை அவர்களாகவே குறுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

 என் ஊரில் சொந்தம் அல்லாதவர்களும் சொந்தம் போல் பழகுவதும் இங்கு சொந்தக்காரர்களே சொந்தம் இல்லாமல் இருப்பதும் எனக்குப் பார்க்கத் திகைப்பாய் இருக்கிறது. பள்ளியில் ஆசிரியர்களும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பாய் இல்லை. இயற்பியல் எடுக்கும் ஆசிரியப்பெண்மணிக்கு வேதியியல் எடுக்கும் ஆசியரின் வீட்டில் எத்தனை குழந்தைகள் என்று கூடத் தெரியவில்லை. ஒரு நாள் வேதியியல் ஆசிரியரின் குழந்தைக்கு உடல்நலம் இல்லை என்று மருத்துவமனைக்குச் சென்று விட இயற்பியல் ஆசிரியர் மாற்றுப் பணிக்கு வந்தார். ஆனால் அவர் எங்களிடம் வந்து உங்கள் ஆசிரியர் ஏன் வரவில்லை என்று கேட்கிறார். நாங்கள் காரணம் சொன்னதும், ஓ, அவர்களுக்கு கல்யாணம் ஆகி குழந்தைகள் இருக்கிறார்களா என்று கேட்டார்.இவர் இந்தப் பள்ளியில் 15 வருடமாக வேலை பார்ப்பவராம். அவர் இந்தப்பள்ளியில் 10 வருடமாக வேலை பார்ப்பவராம்.

 இதைக் கேட்ட போது அம்மாவிடம் உதவி ஆசிரியராக வேலை பார்த்து வேறு எங்கோ தலைமை ஆசிரியராக பணியேற்ற ஒருவர், 10 வருடங்களுக்குப் பிறகு வந்து இனிப்பு வழங்கி தன் மகிழ்வைத் தெரிவித்ததோடு சூர்யா நல்லா இருக்கியா? என்ன படிக்கிறே? கைக் குழந்தையாக உன்னைத் தூக்கிக் கொண்டு ஓடினோம். என்று சொல்லிவிட்டு தன் குடும்பத்துடன் வந்து போனார்கள். அடிக்கடி அம்மாவிற்கு வரும் அலைபேசிகள் யாராவது ஒரு அத்தை, பெரியம்மா, என்று சொந்தங்களே அல்லாதவர்கள் சொந்தங்களாகத் திகழ்ந்தனர். ஆனால் இங்கே...? எது இப்படி இவர்களை ஆட்டிப் படைக்கிறது? பணம் தான் முக்கியம் என்றால்? மனிதர்கள் தேவையற்றுப் போனார்களா? கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று எங்களுக்குச் சொல்லிக் கொடுத்து விட்டு புன்னகை கூட செய்ய இயலாமல் இருப்பதன் நோக்கம் என்ன?

சென்னையில் ஏமாற்றுக்காரர்கள் அதிகம் தான் என்றாலும் பார்க்கும், பழகும், எதிர்படும் அனைத்து மனிதர்களும் ஏமாற்றுக்காரர்களாய் தங்கள் மனதில் சித்தரித்துக் கொண்டார்களா? இது இப்படி இருக்க அம்மா இங்கே வந்தவுடன் தன் தோழியின் வீட்டுக்கு எங்கள் எல்லோரையும் அழைத்துச் சென்றார். அங்கே அந்தக் குழந்தைகள் ( என் வயதினர் தான்) வாங்க என்றதோடு சரி. தொலைக்காட்சிப் பெட்டியை விட்டு அவர்கள் கண்களும் அகலவில்லை . கால்களும் நகர வில்லை. நாங்கள் கிளம்பிய பின் போய்ட்டு வாங்க என்று அவசர அவசரமாக் ஒரு சிறிய புன்னகையை சிந்தி விட்டு தங்கள் தொடர்களுக்குள் மூழ்கிப் போயினர். சில நாட்கள் கழித்து அவர்களே இங்கே வந்தார்கள். குடும்பத்துடன் தான். அந்தக் குழந்தைகள் இனி இங்கே வருவதே இல்லை என்று முடிவு செய்து கொண்டனர். ஏனெனில் எங்கள் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இல்லை.ஆனால் நிறைய புத்தகங்கள் இருக்கிறது. அதிகமான தமிழ் மொழியில் உள்ள புத்தகங்கள். (கதைகள், கவிதைகள், கட்டுரைகள், கலந்து தான்) இருப்பது அவர்களுக்கு மொழி புரியவில்லை. காரணம் அவர்கள் பள்ளியில் சமஸ்கிருதம் படிக்கிறார்களாம். அதற்கு அவர் அம்மா சொன்ன காரணம் , இந்தத் திருக்குறளை கஷ்டப்பட்டு படிச்சு என்னபிரயோஜனம்? அதற்கு எளிமையான சமஸ்கிருதம் படித்தால் ஒரே ஒரு பொருத்துக, கோடிட்ட இடம் சிறு கேள்விகளுக்கு நிறைய மதிப்பெண்கள் தருவார்கள், என்றார். எனக்குத் தலை சுற்றியது. வேற்று மாநிலத்தில் தான் நான் இருக்கிறேனா? அல்லது இது தமிழகம் தானா? தன் மொழியைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன் என்று சொல்லி தானே கேள்விப் பட்டிருக்கிறேன்.இங்கே ஒரு தாயே பழிக்கிறாளே? அந்தக் குழந்தைகளுக்கு எங்கள் வீடு வேண்டாத வீடாய்ப் போய் விட்டது. நல்லவேளை எங்கள் வீட்டில் கணினியும், அம்மாவின் ஆண்ட்ராய்டு பேசியும் இருந்தது அதனால் ஒரு அரை மணிநேரம் அவர்களால் இருக்க முடிந்தது. தொலைக்காட்சி தான் உயிர், அது இருந்தாலே போதும் என்று நினைக்க வைத்ததும், நினைப்பதும் அந்தக் குழந்தைகளின் குற்றமாக இருக்கும் என்றா நினைத்தீர்கள்.? இங்கே இருக்கும் ஒவ்வொருவருக்கும் பொது நிகழ்வுகள் என்று ஏதும் இல்லை.


எங்கள் வீட்டில் எங்கள் தாத்தாவைப் போல் எங்கள் அம்மா ஒன்றும் மிகச் சிறந்த பக்திமான என்று சொல்லிவிட முடியாது. ஆனால் அக்கம் பக்கத்தில் எல்லோருடனும் பழகுவதற்காகவே அம்மா அவர்களோடு கோயில் போவது, ஆடிச் செவ்வாய், சதுர்த்தி, சஷ்டி, என்று கொண்டாடுவார்.

 நான் பிறந்தது முதல் எங்கள் வீட்டுக்கு(இஸ்லாமியர்) ஒருவர் நோன்பு க்கஞ்சி கொண்டு வந்து தருகிறார். அம்மா இல்லையென்றால் எதிர் வீட்டுப் பாட்டி எங்கள் வீடு வந்து வத்தக் குழம்பு செய்து கொடுத்துவிட்டு செல்வார். இத்தனைக்கும் அந்தத் தாத்தா புதுக்கோட்டையில் மிகப்பிரபலமான ஒருவர். \

அதே போல் அருகில் மிகப் புகழ் பெற்ற ஒரு கவிஞர் வீட்டிலிருந்தும் சில சமயம் சாப்பாடு வருவதுண்டு.(அந்தக் கவிஞரின் மனைவிக்கு எங்களை மிகவும் பிடிக்கும்.எங்கள் கார் இல்லையென்றாலும் குறித்த நேரத்தில் தங்கள் காரில் எங்களை வீட்டுக்கு அனுப்பி விடுவார்.) 

என் அம்மாவின் தோழி எங்கள் வீட்டிற்கு உணவருந்தப் போகிறார் என்றால் நாங்கள் குஷியாகி விடுவோம்.(இவருமே புதுகையில் பிரபலம் தான்) அவர் கொண்டு வரும் சாக்லேட் மட்டும் சிறப்பு அல்ல. அவருக்காக அம்மா பல சாப்பாடு அயிட்டங்களை தயார் செய்வதோடு அந்த அன்புப் பரிமாற்றமும் தான்.

 இன்று யாருடைய முகநூல் எடுத்துப் பார்த்தாலும் குறைந்தபட்சம் 1000  நண்பர்களாவது இருக்கிறார்கள். ஆனால் சொந்தங்கள்? முகம் தெரியாமல் இத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்று சொல்வதில் என்ன பயன்? 

இத்தனைக்கும் அம்மா புதுகையில் யார் வீட்டுக்கும் அநாவசியமாய் போவதில்லை. ஆனால் முக்கியமான தினங்களில் அவர்களோடு இருப்பார். ஒரு முறை ஒரு ஆசிரியத் தோழிக்கு உடல் நலம் இல்லாமல் இருக்க இரவு ஒரு மணிக்கு எங்களை எழுப்பி சொல்லிவிட்டு அம்மாவும் அப்பாவும் தங்கள் காரை எடுத்துக் கொண்டு கதவை வெளியெ பூட்டி விட்டு சென்று வந்தனர். அதெல்லாம் இங்கே நினைத்துக் கூட பார்க்க இயலாது போல. 

என் வகுப்பில் நான் பேசும் சிறு வார்த்தைகள், எல்லாம் இவள் நல்லா தமிழில் பேசுகிறாள்டி என்று சொல்லி வியந்து போகின்றனர். வெறிச்சோடி, நெடுஞ்சாண் கிடையாக, பழக்கவழக்கம்,என்ற சொற்கள் தெரியாமல் இருந்தாலும் பரவாயில்லை. சாலை என்று நான் சொல்ல அவர்கள் அனைவரும் சேர்ந்து சிரித்து இந்தப் பொண்ணு ரோடைப் போய் சாலைனு சொல்லுது பாரேன் என்று சொல்லி சிரிக்கும் அளவுக்கு தமிழ் வளர்ச்சி என்று போய்க் கொண்டிருக்கிறது சென்னை.

சமூகமே விழித்தெழு என்று தலைப்பு வைத்து விட்டு இது போன்ற செய்திகளை பகிர்கிறேனே என்று தானே யோசிக்கிறீர்கள். உண்மையில் நீங்கள் மரம் வளர்ப்பதை விட முக்கியமான மனிதநேயம் வளர்ப்பது, பாலிதீன் பைகளை புறக்கணிப்பதை விட முக்கியமானது தேவையான நேரங்களில் தொலைக்காட்சிப் பெட்டியைப் புறக்கணிப்பது, அன்றாடம் பழங்கள் , கீரைகள் என்று வாங்கி சாப்பிடுவதை விட முக்கியமானது நாம் அன்றாடம் மற்றவர்களுடன் பழகுவது. நமது சுற்றுசூழல் மாசு அடைவது ஒரு கவலை என்றாலும் அதனை விட நாம் கவலைப் பட வேண்டிய விஷயம் மக்களோடு பழகுவது. சமூகமே விழித்தெழு...ஒன்று பட்டால் உண்டு வாழ்வு...
************************************************************************

Monday 28 September 2015

ஏறுவோம் முன்னேறுவோம்


ஏறுவோம் முன்னேறுவோம் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்


 “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது

வகை 3  பெண்ணிய கட்டுரை

*****************************************
பெயர்:S.ராகசூர்யா
வயது:15
கல்வித்தகுதி:XI-std
முகவரி:சென்னை..600042
****************************************

ஏறுவோம் முன்னேறுவோம்

பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா

 பாரதியார் பெண்மையை போற்றுவோரின் நாயகன்.அவன் மொழி கொண்டு என் கட்டுரை தொடங்குகிறேன்.


பள்ளியில், எப்போதும் மாணவர்களைத்தான் தலைவர் ஆக்குகிறார்கள். வகுப்பு ஆசிரியர் பெண்ணாக இருந்தாலும் அவர்களும் அந்த நடைமுறைதான் பின்பற்றுகிறார்கள். துணைத்தலைவராகத் தான் மாணவிகள் இருக்க வேண்டும். அந்த ஆண் தலைவர்கள் பெண் தலைவர்கள் சொல்வதைக் கேட்பதில்லை. ஆனால் பெண் தலைவர்கள் யாராக இருந்தாலும் தாங்கள் சொல்வது எல்லாவற்றையும் ஏற்க வேண்டும் நினைத்துக் கொள்கிறார்கள்.

அதோடு தினமும் அவர்களுக்குப் பிடித்த மாணவிகள் என்றால் கரும்பலகையில் பெயர் எழுதமாட்டார்கள். ஆனால் பிடிக்காதவர்கள் என்றால் அதுவும் முதல்வர் சுற்றுக்கு வரும் நேரம் அறிந்து எழுதிக் கொடுத்து மாட்டி விடுவார்கள். தவறே செய்யவில்லை என்றாலும் ஒரு சிறு தவறு செய்தாலும் பல தவறுகள் செய்தது போலவும்  போட்டுக் கொடுத்து விடுவார்கள். பொய்களுக்கு எப்போதுமே துணைகள் அதிகம் தானே. அவன் நண்பர்கள் எல்லோரும் அவனுக்கு சாதகமாகத் தான் சாட்சி சொல்வார்கள். இல்லாத ஒன்று இருப்பதாக சொல்ல எத்தனை சாட்சி தேவைப்படும். நம்புவது போல் சொல்வதை உண்மை யறியாமல் முதல்வர் முதல்,, வகுப்பு ஆசிரியர் வரை நம்புவது தான் கொடுமை

அதே போல் பேச்சுப்போட்டிக்கு பக்கத்தில் உள்ள இடங்களுக்கு மட்டுமே மாணவிகள் அனுமதிக்கப்படுகின்றனர். தூரத்தில் போய் பங்கேற்க வேண்டும் என்றால் உன்னை யார் கூப்பிட வருவார்கள்?, உங்கள் அப்பா எங்கே வேலை பார்க்கிறார்?. உங்கள் அப்பத்தா எங்கே வேலை பார்க்கிறார்கள் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு, ”சீச்சீ ”இந்த போட்டியே வேண்டாமடா சாமி என்று முடிவெடுக்க வைத்து விடுகிறார்கள். ஒரு வேளை வகுப்பு ஆசிரியை அனுமதித்து விட்டால் பள்ளி முதல்வர் நம் குலம் , கோத்திரம் எல்லாம் கேட்பார். ( ஒருவேளை மாப்பிள்ளை பார்க்கிறோமா அல்லது போட்டிகளுக்குத்தான் அனுப்புகிறோமா என்பதை மறந்து விடுவார்கள் போலும்.) அதையும் விடுத்து 

பள்ளித் தாளாளரிடம் அனுப்பினால்< அம்மா எல்.ஐ.சி.லோன் வாங்கக் கூட இத்தனை கையெழுத்து போட்டிருக்க மாட்டார்கள். இவர்களிடம் கைகட்டி அந்த “போனோபைட்” சான்றிதழ் வாங்குமுன் அய்யோ...அம்மா....ஆனால் மாணவர்களுக்கு இது எதுவுமே கிடையாது. பஸ்ல போய்டு..என்று சொல்லி ,பேருந்து எண் சொல்லி, இங்கே நிற்க வேண்டும், நடக்க வேண்டும், எல்லாம் சொல்லித்தருவார்கள். அதை எங்களுக்கும் சொல்லி ஊக்கப்படுத்தி போக வைக்கலாம் என்று இது வரை யாருக்கும் தோணுவதில்லை.. 

பள்ளியில் தான் அப்படி என்றால் வீட்டில் ஒரு திருவிழாவுக்கு கூட்டிப்போங்கள் என்றால் இரண்டு பக்கமும் அம்மா, அப்பா இருவரும் கையை இருக்கப் பிடித்துக் கொள்வார்கள்..( இடி ராஜாக்களிடமிருந்து காப்பாற்ற அல்லது நான் தொலைந்து போகாமல் இருக்க என்று பல்வேறு காரணங்கள் வேறு..இவர்களுக்கு எங்கிருந்து தான் ஊறுமோ?)

இது தான் இப்படி என்றால் நான் அதிர்ந்த ஒரு விஷயம் ஒன்று உண்டு. ஒருநாள் அம்மா தன் பள்ளியில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு பண்ணியிருந்தார். நாங்களும் குடும்பத்துடன் போனோம். ( எங்கே போனாலும் அப்படித்தான்..நல்லவேளை காய்கறி கடைக்கும் அரிசிக் கடைக்கும் தான் நாங்கள் குடும்பத்துடன் போகலை. அம்மா தன் சி.ஆர்.சி.கூட்டம், தலைமைஆசிரியர் கூட்டம் முதற்கொண்டு குடும்பத்துடன் தான் கூட்டிச்செல்வார்.)(என்ன பேமியோ என்று நீங்கள் முணகினாலும் அது தான்..அப்படித்தான்) 

அங்கே தலைவர் தலைவர் என்று ஒரு பெண் பெயரைச் சொல்லி பாராட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் விழா மேடையில் அம்மாவைத் தவிர வேறு பெண்களே இல்லை. நானும் கூட, வராத தலைவருக்கு இப்படி ஒரு மரியாதையா? என்ன மக்கள்? அவர் நல்ல “ பணி” ஆற்று வார் போல என்று நினைத்தேன். ஆனால் இப்போது தலைவர் பேசுவார் என்றதும் ஒரு ஆண் வந்து பேசினார். நான் திடுக்கிட்டாலும் சுஜாதா என்று ஒரு ஆண்,  பெண் பெயர் கொண்டு கதை எழுதலாம்  இது செய்யக்கூடாதா? சரி அப்படித்தான் இருக்கும் என்று நினைத்துத் தான் அமைதியானேன். 

ஆனால் விழா முடிந்ததும் நிகழ்வு வருகைப் பதிவேடு நோட்டில் , புடவையைக் கூட ஒழுங்காகக் கட்டத் தெரியாத, தலை சீவாத, குளிக்காத ஒரு பெண் கையெழுத்திட்டாள்.    (கையெழுத் து வாங்கும் பணி என் தலையில் அம்மா கட்டியிருந்தார்).  அவர்களுக்குத் தெரியாது ,அவர்கள் பெயரைச் சொல்லி... அந்தக் கோட்டுக்கு நேரே கையெழுத்து வாங்கு என்று சொல்லி யிருந்ததால் அய்யோ இந்தப் பெண்மணி தலைவர் என்று போட்டிருந்த இடத்திற்கு நேரே ஆனால் மிகச் சரியாக சுசீலா என்று (கோணல் மாணாலாகத்தான்) அய்யோ இது வேறு சுசீலா போல..அம்மாவிடம் எப்படி திட்டு வாங்குவது என்று நினைத்தால்...அய்யோ அந்த அம்மா தான் தலைவராம். அப்போ மேடையில் பேசியது,,அவள் கணவராம்.ஆட்சியர் அலுவலகதுக்கே அவர் தான் போவாராம். எங்கள் வகுப்பே தேவலாம் என்று இருந்தது. நாங்கள் டம்மியாக இருந்தாலும் நாங்கள் எங்கள் பெயர் அழைக்கப்படும் போது நாங்கள் தான் பேசுவோம்.

சமுதாயத்தில் இந்த நிலையில் தான் இருக்கிறது, பெண்களின் முன்னேற்றம். அதற்கு அவர்கள் கொடுத்த விளக்கம், இது வரை அந்த பகுதியில் பெண் தலைவர்களே இல்லை. இப்போது பெண் பெயராவது தலைவராக இருக்கிறதே அதுவே பெரிய முன்னேற்றம் என்று சொன்னார்கள்

அப்புறம் சமூகத்தில் எப்போதும் ஒரு விவாதம் நடந்து கொண்டே இருக்கிறது பெண்கள் தங்கள் ஆடைகளை சரியாக அணியாததால் தான் இது போன்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடக்கிறது என்று பேசிக்கொள்கிறார்கள். பெண்கள் ஆடைகளை ஒழுங்காக போட்டு விட்டால் இவர்கள் ஊழல் செய்வதை நிறுத்தி விடுவார்களா? கோயில்கள் சிலை திருட்டு நின்று விடுமா? அரசாங்க அலுவலகத்தில் செம்மையாக தங்கள் பணிகள் செய்திடுவார்களா? பி.எஃப் லோன் பணப் பரிவர்த்தனை இல்லாமல் ஷேன்ஷன் பண்ணிவிடுவார்களா? எல்லாத் துறைகளும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்துவிடுவார்களா? விவசாயம் மீண்டும் தழைத்து விடுமா? எதுவுமே இல்லை. ஏதோ ஒன்று சொல்வதற்காக ஆடைகளைப் பற்றிக் குறை சொல்கிறார்கள். 

எங்கள் இனிய தோழி மலாலா நல்ல ஆடைகளைத் தானே அணிந்திருந்தார். அவர் ஏன் அவ்வளவு பாதிப்புக்கு உள்ளானாள்? அவள் போல் தான் எங்களைச் சுட்டுக் கொல்ல முயற்சித்தாலு ம் நாங்கள் உயிர்த்தெழுவோம், மேன்மையாவோம்

மற்றுமொரு விஷயத்தை இவர்கள் தவறாகவே பயன்படுத்துகிறார்கள். பெண்கள் அதிகமாக புரண் பேசுகிறார்கள் என்று சொல்கிறார்கள்.எங்களுக்கு நேரமே இல்லை. பெரியவர்களாக இருந்தால் வீட்டு வேலை செய்கிறார்கள். என்னைப் போல் சிறியவர்களாக இருந்தால் படிக்கிறோம். நாங்கள் எந்த தேநீர் கடைகளிலும் நின்று நேரம் கடத்துவதில்லை. அப்புறம் எப்படி புரண் பேசுவோம்? 

ஆண்கள் தான் கட்டைச்சுவர்களில் உட்கார்ந்து, தேநீர்கடைகளில் இருந்து கொண்டு பேசிக்கொண்டேடேடேடே இருக்கிறார்கள். நாங்கள் படிக்கிறோம் இல்லாவிட்டால் அம்மாவுக்கு அப்பாவுக்கு உதவி செய்கிறோம்.

எனக்குத் தெரிந்து அம்மாவுக்கு வரும் புலம்பல் தொலைபேசிகளில் பெண் பிள்ளைகளைப் பெற்றவரிடமிருந்து வருவதே இல்லை. ஆண் பிள்ளைகள் பெற்றவர்கள் தான் பணம் கேட்கிறான். சொன்னது கேட்கமாட்டுறான். எப்போதும் போன், அல்லது தொலைக்காட்சிப் பெட்டி முன் கிடக்கிறான்  என்று புலம்புகிறார்கள். 

என்வீட்டிலும் என் அம்மா தன் அம்மா வீட்டுக்குப் போனால் பாத்திரம் தேய்த்து, துணிதுவைத்து, சமயத்தில் கரண்ட் பில் கட்டிகொடுத்து, காய்கறி ,மளிகை என்று எல்லாம் வாங்கிக் கொடுப்பாள்.

 ஆனால் அப்பா தன் அம்மா அப்பா  வீட்டுக்குப் போனால் சும்மா டி.வி. பார்ப்பார். முடிந்தவரை அவர்களை மிரட்டுவார். அதட்டுவார். 
அப்படியானால் உண்மையான அன்பும் பிரியமும் உழைப்பும் பெண்களிடம் மட்டும் தான் இருக்கிறது என்று சொல்ல வில்லை பெண்களிடம் தான் அதிகம் இருக்கிறது. அது இன்னும் தன்னை முன்னேற்றிக் கொள்வதிலும் மாற வேண்டும். மாறுவோம். ஏறுவோம். முன்னேறுவோம். எங்கள் விடிவெள்ளி இதோ நான் இந்த வலைதளத்தை ஆரம்பிப்பதில் தொடங்குகிறது. இதை வாசித்தபின் நீங்கள் யோசிப்பதில் தொடர்கிறது.

Saturday 26 September 2015

ஒரு கதை ........[பெரிய மனிதர்களுக்கு]

                  ஒரு வீட்ல தாத்தா  அவர் மகன் ,மருமகள்,பேரனோடு  இருந்தார் . மகனுக்கும் மனைவிக்கும்  அவரை பிடிக்காது  திட்டிடே இருப்பாங்க. அவருக்கு அலுமினிய  தட்டில் தான் பழைய சாதம் வைப்பாங்க, அத பார்த்த பேரன் ஒரு நாள் அப்பா தந்த பாக்கெட் மணில்ல  இரண்டு அலுமினிய  தட்டு  வாங்கி வந்தான் ‘ஏண்டான்னு  கேட்டா  உனக்கு தான் அப்பா நான் வளர்ந்த அப்பறம் விலை கூடிடும் அதான் இப்பவே  வாங்கினேன் ` என்றான்  .
          இப்படிதான் ஒவ்வொறு குழந்தையையும்  சமூகத்தின் எதிரிகளாக மாற்றி  வைதிருக்கிறோம் , இந்த கதை  நான்  ஐந்தாவது படிக்கும் போது  படித்தது.
     
குழந்தை என்பது  ஒரு உன்னதமான ஆத்மா, அதை நாம்  சமூகம், சாதி,மதம் ,இனம் என பிறக்கும்போதே பிரித்து  வைத்து விட்டோம் இது போக இன்னும்  நிறைய  கட்டுபாடுகள் .பெற்றோர்கள்  பிள்ளையை பள்ளிக்கு அனுப்பும்  செயல் இருக்கிறதே ‘இத பாரு ஸ்நாக்ஸ யார்கிட்டேயும் தரக்கூடாது  சரியா ‘ என்று கூறி அதன் மனதை சிறு வயதிலேயே நாம்தான் மாற்றுகிறோம்.
சக்தி அக்கா ஒரு தடவை சொன்னா 
                                   “குழந்தைகள் ஒருபோதும் தம்
                                         பெற்றோரை  பிறரோடு ஒப்பிடுவது இல்லை
                                         உண்மையில் யார்  பெரியவர்கள்”
      அப்பா அடிச்சாலும் அப்பா நமக்கு  ஒரு ஹீரோ தான்  அனா பிள்ளை சேட்டை பண்ணும்போது எப்படி குரங்குன்னு திட்ட தோன்றுகிறது. 

வீட்டில் பால் வாங்கி வரவேண்டும் என்று லஞ்சம் கொடுத்து  பழக்கியதால் தான்  அவன் தன் வேலை பார்க்க லஞ்சம் கேட்கிறான்.

 நாம் குழந்தையை தொலைக்காட்சி பார்க்க பழக்கி விட்டு அவன்  ஆசிரியரிடம் போய் எப்ப பார்த்தாலும்  அவன் டீவி பார்த்துகொண்டே இருக்கிறான் என்று கூறினால் என்ன அர்த்தம்


குழந்தை உங்களின் கண்ணாடி அது உங்களை தான் பிரதிபலிக்கும் நீங்கள் இனிமையானவர் என்றால் அது இனிமையானதாக வளரும்
நீங்கள் சிடுசிடுவென்று உங்கள் பெற்றோரை காப்பகம் அனுப்பினால் அது உங்களை நாளை  காப்பகம் அனுப்பும் .இதற்கு முன் பல பேர் சொன்னதுதான் ஆனாலும் சொல்கிறேன் .”குழந்தை உங்களின் மூலம் உலகிற்கு வந்தது உங்களுக்காக வந்தது அல்ல” உங்கள் கனவுகளை அதனுள் திணிக்காதீர்கள் .

அவை  யாவற்றையும் ரசிக்கும்,நேசிக்கும் தன்மை கொண்டது உங்கள் கட்டுபாடுகள் மூலம் வெறுக்க வைத்து விடாதீர்கள்.
   உங்களை குறை சொல்லவில்லை உங்களின் ஏமாற்றம் கோபங்களாக  மாறி இருக்கலாம் . 

நான் சின்னவள் அறிவுரை கூறவில்லை சமூகத்தை மாற்ற   சொல்லவில்லை உண்மையில் அது ஒரு தனி மனித முயற்சியினால்   நடக்காது .நாம் நமது சூழல், பண்பாடு,சமூக மாற்றம்,நம் சமூகம்    முன்னேற முயற்சிகள், என பல தலைப்புகள் நாம் விவாதிக்க   வேண்டுமானால் சுவையானதாகவும் காரசாரமான ஒரு விவாதமாகவும் அமையும் .ஆனால் மாற்றத்தை ஏற்படுத்தாது.

       குழந்தைகள் -அவற்றை நேசியுங்கள் அவை வரைய  காகிதம் அல்ல வானத்தையே பரிசாக தாருங்கள்,விளையாட பொம்மை அல்ல நீங்களே பொம்மையாக மாறுங்கள்.அன்பை புரிய வைங்க [அன்பாஆஆஆஆ அவற்றால் ஒரு மிட்டாய் கூட வாங்க முடியாது என ஒதுக்கி விட வேண்டாம்]
    அவை பார்த்துகொள்ளும் நாளைய சமூகத்தை ----நீங்கள்  சமூகம் சமூகம் என்று கழுவாய் கரையாமல் சற்று ஓய்வு எடுங்கள்  

Wednesday 23 September 2015

வணக்கம்

வணக்கம். நான்  சின்னவள் .........ரொம்ப இல்லை பதினொராம் வகுப்பு                                     
              படிப்பில் மட்டுமல்ல வாழ்கையிலும் மாணவி  

   இந்த குட்டி தென்றலுக்கு[..நானே தான் சொல்லவேண்டியிருக்கு..ஹும்]  பெரியவங்க வச்ச பெயர் ராகசூர்யா   . நானும் சூரியனை போல் இருக்கனும்ன்னு நினைக்கிறேன் ஆனா கிருஷ்ணர் மாதிரி நிறைய  குறும்பு பன்னுவேன்  நான் தான் இப்படின்னு பாத்தா அம்மா  அதுக்கும் மேல சேட்டை,, சாக்லேடை காப்பாத்த நான் படுகிற பாடு  .......ஐயோ  சரி விஷயதிற்கு வர்றேன் நான் வலைதளம் ஆரம்பித்து இருக்கிறேன்  எல்லாரும் வந்து பாருங்கள்  
                 இனி நான் நிறைய கருத்து சொல்வேன் 
                [கருத்து???!!! இது எனக்கே ஓவரா இல்லை ] 
               கேக்கணும் சொல்லிட்டேன்   
    [கட்டாயம் கமெண்டும் போடணும்] இல்லாட்டி  முட்டை மந்திரிச்சு வச்சுடுவேன்......