Saturday 7 November 2015

உப்பில்லாப் பண்டம்

இதுவரை நீங்கள் உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்றே தான் படித்திருப்பீர்கள். ஆனால் இனி அதனை மாற்றிக் கொள்ளவே இந்தப் பதிவு...

இனி இப்படித் திருத்திக் கொள்ளவேண்டும் உப்பில்லாப்பண்டம் குப்பையிலே என்பதை உப்பில்லாப் பண்டம் சூர்யாவின் தொப்பையிலே என்று சொன்னால் போதும்..

விடுமுறை நாட்களின் சில தினங்களில் கூடுதல் நேரம் அம்மா தூங்க நேர்ந்தால் முதல் நாள் சாதம் வைத்து வத்தக்குழம்பும் செய்து வைத்துவிட்டுப் படுத்துவிடுவார்கள். மறுநாள் காலை 8 மணிக்கு மேல் தான் விழிப்போம். உடனே பசிக்குமாதலால் இந்த ஏற்பாடு. அம்மா அதற்கு பொட்டுக்கடலை துவையல், அப்பளம், வடை இவ்வளவும் செய்திருப்பார். பழைய சாதத்தில் தயிர் கலந்து ஒரு உருண்டைக்கு வத்த குழம்பு, ஒரு உருண்டைக்கு துவையல், அப்பளம், வடை என்று சாப்பிட பெரிய விருந்தே சாப்பிட்ட மாதிரி இருக்கும்.அதுவும் அம்மா கையில் அதனை உருண்டையாக்கி கட்டை விடலால் உருண்டையில் ஒரு குழி வைத்து அதில் கரண்டியில் இருந்து சிறிதளவு வத்தல் குழம்பு ஊற்றித் தரும் பக்குவத்தில் .., அப்படியே இரண்டு கிண்ணம் சாதம் சாப்பிட்டு விடலாம்.( உண்மையில் இந்த உருண்டைகளுக்கு ஒபாமா தன் நாட்டை அப்படியே அம்மாவுக்கு தானம் செய்து விடலாம்)

இதெல்லாம் அழகாக நேர்த்தியாகச் செய்யும் அம்மாவிற்கு ஒரு குறை. அது உப்பிட மறந்து போவது. பள்ளிக்கு மதிய உணவாக அம்மா என்ன வைத்திருக்கிறார்கள் என்று ஆவலோடு பிரித்துப் பார்த்தால், சாம்பார் சாதம், பருப்பு சாதம், பால் சாதம் என்று ஏதேனும் ஒரு வகையில் இருக்கும். சில சமயம் தோழிகள் விரும்பும் ஒரு மணத்துடன் இருக்கும்.ஆனால்.தொட்டுக்கொள்ள வைத்த காய்கறியில்...? அதில் உப்பு இருக்காது. அம்மா என்ன வைத்தாலும் அதனை தங்கள் சித்தம் என் பாக்கியம் என்று சொல்லி அப்படியே விழுங்கி விட்டு வருவாள்  என் அக்கா சக்தி.என்னால் தான் அப்படி செய்ய முடிவதில்லை.

அடிக்கடி இவ்வாறு நிகழ்ந்ததால்,பொருத்துப் பொருத்துப் பார்த்த நான் ஒரு சிறிய டப்பா வாங்கி அதில் உப்பு கொட்டி நிரந்தரமாக எனது சாப்பாட்டு பையில் வைத்துவிட்டேன்.அம்மா உப்புப் போட மறந்திருந்தாலும் நானாக உப்பிட்டு ஸ்பூன் வைத்துக் கலக்கிச் சாப்பிட ஆரம்பித்தேன்.

இரண்டு பேருந்துகள் மாறி வேலைக்குப் போகும் நிலையில் அம்மா இருந்ததால், பெருந்தன்மையாய் அம்மாவை மன்னித்து ,எனக்கு நானே திட்டத்தில் உப்பு எடுத்துக் கொண்டு போனேன்.

இப்போதும் சில சமயங்களில் அது போன்று நிகழ்ந்து விடுகிறது. இதனால் உப்புக்கும் அம்மாவிற்கும் உள்ள விருப்பு வெறுப்புகள், தன்மைகள், நிலைமைகள், சூழ்நிலைகள் போன்றவற்றை நான் கண்டுபிடித்தே ஆக வேண்டிய கட்டாய சூழலுக்குத் தள்ளப் பட்டேன்.

அதனால் தான் இந்த ஆய்வு....

என் சிற்றறிவுக்கு எட்டியவரையில் நானாக ஆய்வு செய்து அதன்பயனாக விளைந்த முடிவுகள்

1. அம்மாவிற்கு காந்திஜியைப் பிடிக்கும் . எனவே, மகாத்மா ஆன அவரை உப்பிற்காக யாத்திரை செல்ல வைத்ததற்காக உப்பைப் பிடிக்கவில்லை.

2. உப்பின் மீது முன் ஜென்மப்பகை இருக்கிறது. அதனை இந்த ஜென்மத்தில் பலி வாங்க எண்ணி அம்மா சாப்பாட்டில் உப்பை மறக்கிறார்.

3.அம்மா மிகவும் ஒல்லியாக இருந்து இப்போது சற்றே உப்பிப் போனதால், அதற்கு உப்பு தான் காரணம் என்று நினைத்திருக்க வேண்டும், அல்லது உப்பியிருப்பதால், உப்பு என்ற வார்த்தையைத் தவிர்க்க உப்பைத் தவிர்த்திருக்க வேண்டும்.

4. உப்பு தனக்கு எதிரி என்று தப்பாய்க் கணக்கிட்டு, உப்பைப் போடாமல் தப்புப் பண்ணி, தப்புப் பண்ணதை உப்பு வழியாகக் காட்டி உப்பு மறந்து....,,,,, சரி வரல....... விட்டுடலாம்..

5. உப்பு உடம்புக்கு நல்லதில்லை என்று அம்மாவின் பிஞ்சு மனதை யாரோ கலைத்திருக்க வேண்டும்...

இவை எல்லாம் ஆய்வின் அலசல்கள். இன்னும் நான் ஒரு முடிவுக்கு வரவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் என்னோடு இந்த உப்பு ஆய்வில், பங்கேற்கலாம்...

டிஜிட்டல் இந்தியா, சிங்காரச் சென்னை மாதிரி...உப்பு சார்ந்த சமையல் இருந்தால் தேவலாம்...ஆமாம் தானே????

ஒப்பில்லாத இந்த உப்பு பற்றி எழுதி நான் ஒப்பு உயர்வற்ற தலைவி...இல்லை உப்பு உயர்வு அற்ற தலைவியாக விடைபெறுகிறேன்...

*********************************************************

வழக்கம் போல் இதுவும் தத்துவம் தான் உப்பு உயர்வுத் தத்துவம்...ஹி..ஹி..

உப்பு க்கான பட முடிவு




12 comments:

  1. அடடா நீ உப்புயர்வற்ற தலைவி தான்மா..

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு வீடு உண்டு ஆண்ட்டி...நன்றி..நன்றி..( இப்படி பல முறை சொல்லணும் ஓ.கே??)

      Delete
  2. அடடா...! என்னவோர் ஆய்வு...! ரசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. ஆமா அங்கிள்...ஆய்வுக்கான முடிவுகள் தான் இழுபறி....

      Delete
  3. சூஜ்...இது தான் சத்யாகிரக போராட்டமா?
    நீ என்னை விட தைரியசாலி...சொல்லிட்ட...

    ம்ம்ம்.....உங்க அம்மா கல்யாணம் ஆன புதிதில் ஒரே பாத்திரத்தில் குழம்பு,ரசம்,கூட்டு எல்லாம் வைப்பாள்...அதுவும் ஒரே நேரத்தில்...
    இன்றுவரை அதை என்னால் சொல்லமுடியவில்லை...இப்போதுகூட உன்னிடம் தான் சொல்லுகிறேன்..சொல்லிவிடாதே....
    எனக்கு பாயாசம் செய்து கொடுத்துவிடுவார்.......
    அருமை சூர்யா...வரும் சில நாட்கள் உன்னோடு என்பதில் மகிழ்ச்சி.,

    ReplyDelete
    Replies
    1. அம்மாவின் சமையலைப் போல் இந்த உலகத்தில் ஒருவரும் சுவையாய் சமைக்க இயலாது.சில சமயங்களில் அப்படி நேர்ந்து விடுகிறது. அவ்வளவு தான், மற்றபடி ஒரே பாத்திரத்தில் எங்களுக்கு இது வரை செய்து தந்ததில்லை. சாரி டாடி. என் அம்மாவை சமையல் விஷயத்தில் குறை சொன்னால் எனக்குக் கோபம் வரும். ( இந்த விஷயத்தில் நான் உங்களைப் போல்)

      Delete
  4. உப்பு உயர்வுற்ற தலைவியே வாழி

    ReplyDelete
    Replies
    1. வாழிய சொன்ன நீங்களும் வாழ்க..வாழ்க..நன்றி அங்கிள்

      Delete
  5. உப்பில் ஒப்பில்லா ஆராய்ச்சி தொடரட்டும்

    ReplyDelete
  6. உப்பில் ஒப்பில்லா ஆராய்ச்சி தொடரட்டும்

    ReplyDelete
  7. அடேங்கப்பா! எத்தனை பெரிய உண்மையும் ஆய்வும் கண்டுபிடிப்புக்களும். ஆனால் அதற்கான தீர்வு தான் செம்ம்ம்ம அசத்தல் சின்ன மேடம். உப்புப்போட்டு சமைத்தால் அதிகமாய் ரோசம் வரும் என என்கூரில் சொல்வார்கள். அதனால் யாருக்கும் கோபம் வரக்கூடாது. ப்படி வந்தாலும் வீமபாயிருக்க கூடாது எனவும் உப்பை தவிர்க்கலாம் மேடம்.

    ReplyDelete
  8. aaga kadasi 2 line arumai. uapai patrium suvai patrium malum arithu kola anatomictherapy.org/ paarkavum.

    ReplyDelete