Friday, 14 April 2017

புத்தாண்டு வாழ்த்துக்கள்.. (மிஸ் யூ ச க் தி

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

(பிளாஷ் பேக்)

வளைய வளையமா சுத்தவிட்டுக்கங்க...

அப்படியே தலையைத் திருப்பி மேலே பாருங்க...

முன்பொருமுறை..அம்மா பணிபுரியும் பள்ளியில்..இதே போல் ஏப்ரல் மாதத்தில் பேனா விற்பவர்கள் வருவார்கள்..கிராமப் புற பள்ளி என்பதால் தரம் இல்லாத பேனாக்களை மலிவான விலைக்கு விற்றுச் செல்வார்கள்..அப்படி ஒருவர் அம்மா பள்ளிக்கு வர மாணவர்களில் 100 பேர் பேனா வாங்கி இருக்கின்றனர்..தேர்வு நேரம் என்பதால் பேனாக்கள் தேவைப் படும் என்பதால் பெற்றோர்களும் காசுகொடுத்து வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.மகிழ்ந்து போன பேனா விற்பனையாளர் அம்மா தலைமை ஆசிரியர் என்பதால் அம்மாவுக்கு இரண்டு பேனாக்களைப் பரிசாக தந்து சென்றிருக்கிறார்..அப்போதெல்லாம் எனக்கும் சக்திக்கும் எப்போதும் ஒரு போட்டி வரும்.அன்றைய வீட்டுப்பாடங்களை அம்மாவின் பேனா வைத்து யார் எழுதுவது என்று..ஏனெனில் அம்மாவிடம் இருந்தது பார்க்கர் பேனா ஒன்று..மற்றொன்று கேம்லின் பேனா..மற்றது சிவப்பும் இன்னொன்று பச்சைப் பேனாவும் இருக்கும்.ஒருநாள் நான் பார்க்கர் பேனா.சக்தி கேம்லின் பேனா..மற்றொரு நாள் இருவரும் மாற்றிக் கொள்வோம்..அம்மாவின் பேனா வழ வழ என்று எழுதும்.அம்மா கட்டியான ஊதா மை நிரப்பி இருப்பார்..இப்படி பல காரணங்களால் நாங்கள்  அந்த பேனாக்களின் மேல் ஆசை வைத்திருந்தோம்..அன்றும் அவ்வாறே அம்மாவின் பேனா பையைத் திறக்க மேலும் இரண்டு புது பேனாக்கள்..

பள்ளியிலிருந்து கடைக்குப் போனீங்களாம்மா என்றாள்..இல்லை என்று பதில் வந்தது.ஏதும்மா இந்தப் பேனா என்று சக்தி கேட்கவும் பேனாக்காரர் வந்தார்.என்றதும்..ஹை..இந்தப் பேனாவை நான் வச்சுக்கட்டுமா அம்மா நு கேட்டுவிட்டு..இது எவ்வளவு ம்மா என்றாள்.பேனா.பென்சில்.ஒரு அழிப்பான்.ஸ்கேல்.பென்சில் சீவி எல்லாம் இருபது ரூபாய்..

எங்கேம்மா பென்சில் எரேஸர் எல்லாம் என்று மீண்டும் சக்தி கேட்க..இதை மட்டும் தான் தந்தார்.இன்று பள்ளியில் எல்லோருமே பேனாக்கள் வாங்கினார்கள்.அதனால் அந்த பேனாக்காரர் எனக்கு இந்த பேனாக்களைக் கொடுத்தார் என்று சொன்னதும் சக்தியின் முகம் மாறி விட்டது..அப்போது அவள் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். இந்த பேனா வாங்க காசில்லையாம்மா , ஏன்ம்மா..அவர் வேறு வேலை கிடைக்காமல் தானே இந்த பேனாக்களை விற்கிறார் அதை எப்படி நீங்கள் வாங்கலாம் என்று இருவருக்கும் வாக்குவாதம் ஆரம்பித்து விட்டது..நானா வாங்கலை அவராத்தான் கொடுத்தார் என்று அம்மா சொல்ல..எதுவும் சக்திக்கு ஏறவில்லை..
சக்திக்கு பிடிக்காத விஷயத்தை நாம் செய்து விட்டால் அவள் பேசவும் மாட்டாள் சாப்பிடவும் மாட்டாள்..அன்று பார்த்தா அம்மா பூரி செய்ய வேண்டும்.சக்தி சாப்பிடலைனா எனக்கும் மனசு கஷ்டமாகும்.சாப்பிடாமல் இருக்க முயற்சி செய்வேன்.ஆனா கடைசியில் பசி வெல்லும்.இவர்களுக்குள் என்ன தான் நடக்குதுன்னு பார்ப்போம்னு அவர்கள் வாக்குவாதத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டேன்.சரி இனிமே வாங்கலை என்று எத்தனையோ முறை அம்மா மன்றாடியும் சக்தி கேட்கவே இல்லை. சரி இந்த மாதம் ஏதேனும் ஒரு போட்டி வச்சு உங்கள் மாணவர்கள் எல்லோருக்கும் ஒரு பேனா பரிசு கொடுங்கள் என்று சக்தி தீர்ப்பு சொல்லி விட..ஹைய்யோ அதற்கு 300 ரூபாய் ஆகும்.பெட்ரோலுக்கு மட்டும் தான் காசு இருக்கு வேற பநம் இல்லைடா என்று அம்மா சொன்ன போதும் சக்தி விடாப்பிடியாய் தன் தீர்ப்பை மாற்றவில்லை..( இவளைத்தான் கர்நாடக அரசை தண்ணீர் தர அனுப்ப வேண்டும்)

அன்றும் மறுநாளும் சக்தி அம்மாவோடு பேசவில்லை..சக்திம்மா சக்திம்மா என்று கெஞ்சியும்.பேசவில்லை..இல்லைம்மா..பேசாமல் இருந்தால் தான் அந்த வலி தெரியும்.பேசினால் நான் சாப்பிட மாட்டேன்.என்ன செய்யம்மா என்று கேட்க. சரி சக்தி நீ சாப்பிடு நா பேசலை என்று ஒருவாறாக அந்தப் பிரச்சினை முற்றுக்கு வந்த்தது.( அப்பாடா..அன்று பூரிக்கு கிழங்கோடு பட்டாணியும் போட்டு செய்யப்பட்டிருந்ததை இழக்க வேண்டி வருமோ என்று நான் ரொம்பவே பயந்து போனேன்)

அடுத்தடுத்த நாட்களில் அம்மாவுக்கும் சக்திக்கும் இடையில் நான் தான் தூது..வேணுமா கேளு..சொல்லு என்று அருகில் இருந்து கொண்டே என்னிடம் பேசுவார்கள்..எனக்கே வேடிக்கையாக இருக்கும்..ஆனால் இதைப்பார்த்து நான் சிரிக்கப் போய்..ஸ்டாலினைப் பார்த்து சிரித்த ஓ பி எஸ் நிலையாய் மாறிவிடுமோ என சிரிப்பை அடக்கிக் கொள்வேன்..

அந்த மாத இறுதியில் அம்மா பள்ளிக்கு சைக்கிளில் செல்ல நேர்ந்தது..பார்ப்போர் எல்லாம் என்ன சைக்கிள் ல போறீங்க என்று கேட்க..இல்லை..உடற்பயிற்சி என்றே அம்மா சொல்லி சமாளிச்சாங்க..

அம்மா தினமும் கால் வலியால். அவதிப்பட்டு துடித்த போதும் அவள் அந்தப் பணத்தில் பேனாக்கள் வாங்கி பள்ளிக்கு சென்று அவளே வழங்கினாள்.அந்த அளவுக்கு சக்தி உறுதியானவள்.( ஆனா இந்த நேர்மை எல்லாம் கொஞ்சம் ஓவர் தான் சக்தி)

இதே போன்ற ஒரு தமிழ் புத்தாண்டு அன்று தான் மீண்டும் இருவரும் பேசிக் கொண்டார்கள்..சக்தி கோபப்பட்டால் நான் நேராக அடுப்படிக்குச் சென்று அன்று இரவு என்ன டிபன் ? அதை இழக்கலாமா வேணாமா என்று மனதிற்குள் பட்டிமன்றம் வைத்து..அதன்படி வேண்டுவதே என் வழக்கமாயிற்று..

சக்தியைப் பொருத்தவரை இலவசமாய் யாரிடமும் ஏதும் வாங்கக் கூடாது.அது அரசாங்கமே தந்தாலும்.
இப்படித்தான் பழைய அரசு இலவச தொலைக்காட்சி பெட்டி அறிவிக்க முதல் முறை அம்மா போய் அதை வாங்கவே இல்லை..மறுமுறை எங்கள் வீட்டு வாசலில் கொட்டகை போட்டு வாங்காதோர் பட்டியலில் அம்மா பெயரை சத்தமாக வாசித்துக் கொண்டே இருந்தார்கள்..அதுவும் அந்த பகுதி உறுப்பினர் அம்மாவின் பள்ளி வயது தோழர் என்பதால் அம்மா கூட்டத்தில் சிக்கி இருக்கலாம் என்று கூடுதலாக இரண்டு முறை கூப்பிட்டார்.சக்திக்குத்தெரிந்தால் அவ்வளவுதான்..அம்மா வாங்கக் கூடாது என்றே நான் வேண்டிக்கொண்டேன்..அன்றும் வீட்டில் பூரியும் குருமாவும்.

விழா முடிந்த பின்னர் அந்த அங்கிள் வீட்டுக்கே வந்து என்ன சுவாதி நீ ஏன் வரலை? உன் பெயரை நான் ஐந்து முறை கத்தினேன்..இந்தா இந்த ரிஜிஸ்டரில் கையெழுத்து போடு..என்று சொல்லிவிட்டு உதவியாளர்கள் கொண்டு வந்த பெட்டியை உள்ளே வைத்தார்..(ஆஹா...)

இல்லை மணி..எனக்கு இலவசம் வேணாம் நீயே வச்சுக்க..இல்லாட்டி யார்ட்டயாவது கொடு..என்று அம்மா சொல்ல.. உன் பிள்ளைகள் தான் நல்லா படிப்பாங்களே ஏன்..இப்பவே டிவி வேணாங்குறே..பத்தாவது வந்தா நிப்பாட்டிக்கலாம்.அரசாங்கம் சும்மா கொடுக்குறதை ஏன் விடணும்னு அவர் மீண்டும் சொல்ல..இல்லை மணி..படிச்ச நாமே இலவசம் வாங்குறதால தான் அவங்க இலவசம் கொடுக்குறாங்க..அதனால வேணாம் என்று மறுத்து ..நீண்ட வாதத்திற்குப் பிறகு அவர் கொண்டு வந்த டிவியை எடுத்துப் போய்விட்டார். அவரோடு வந்தவர்கள் டீச்சரம்மான்னா டீச்சரம்மா தான்..இப்படி நாட்டுல நாலு பொம்பிளை இருந்தால்.போதும்னு பாராட்டிக்கிட்டே போனாங்க...

ஆனா அடுத்த முறை இதெல்லாம் ஏதும் தெரியாத டாடி..இலவசமா கொடுத்த பேன் மற்றும் மிக்ஸியை வாங்கி வந்துவிட...அவரோடு ஆறுமாதம் பேசவில்லை...

இன்று நான் தென்காசியில் இருக்கிறேன்.தாத்தா ஆச்சியுடன்..அம்மாவும் சக்தியும் சென்னையில்..என்னை நினைத்தே சக்தி மதியம் வரை சாப்பிடலை..மனசுக்குக் கஷ்டமா இருந்தாலும் அந்த அன்பை  நினைத்து பெருமை கொள்கிறேன்..

( அம்மாவின் பாயாசமும் வடை..கூட்டு வறுவல்...இதையும் இன்று இழந்தாலும் இன்று உலகம்மன் கோயிலுக்கு சென்றோம்..இரவு ராமேஸ்வரம் செல்கிறோம்...)

மிஸ் யூ சக்தி

4 comments:

 1. சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. கர்நாடக அரசை தண்ணீர் தர வைக்க சக்திக்கு சக்தி உண்டு... க்கும்... உங்களால் தான் முடியாதாக்கும்...(!)

   Delete
 2. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  ReplyDelete