Friday, 3 April 2020

உப்புமாவும் -- தேநீர் என்று சொல்லப்பட்ட வெந்நீரும்

தனித்திரு:----,விலகி இரு:----வீட்டிலிரு::

மார்ச் 16 ம் தேதி எனக்குப் பிறந்த நாள். 16 ம் தேதி இரவே கல்லூரியிலிருந்து செய்தி வந்துவிட்டது. இனி அறிவிப்பு வரும் வரை கல்லூரிக்கு வரவேண்டாம் என்று.  அவ்வளவு தான். அம்மா சென்னை வந்துட்டா...வீட்ல இருப்பா...காலைல எந்திரிக்கிறோம்..குளிக்கிறோம்..சாப்பிடுறோம்..புக் படிக்கிறோம்...சாப்புடுறோம்...புக்.படிக்கிறோம்...இப்படியாக என் எண்ணங்கள் மிதக்க நல்லாத்தான் இருந்தேன்.

14 ம் தேதி காலை தான் அம்மா ஊரிலிருந்து வந்திருந்தா.16 ம் தேதி பிறந்த நாள் என்பதால் 15 ம் தேதி தான் புது டிரஸ் வாங்க கடைக்கு அழைத்துச் சென்றாள்..மாத மளிகையே வாங்கவில்லை.அதன் பின்னரும் அருகில் தானே கடைகள் இருக்கிறது  என்ற தைரியத்தில் பொருட்கள் வாங்கவில்லை..22ம் தேதிக்குப் பிறகு வாங்கியதால்.பொருட்களின் விலை ஏற்றத்தால் 1000 ரூபாய்க்கு வாங்க வேண்டிய பொருட்கள் 2500க்கு வாங்க வேண்டிய நிலை.( சற்றே நிலைமை சரியில்லை)

ம்ம்ம்ம்.அதற்கும்.ராம நவமிக்கும் உப்புமாவுக்கும் என்ன சம்பந்தம்? அதைத் தான் சொல்ல வந்தேன்.எந்த நேரத்தில் அம்மா வந்துட்டா.இனி நல்லா சாப்பிடலாம்னு சொன்னேனோ? ( யார் கண்ணு பட்டுச்சோ😔) இப்படி???

இன்று ராம நவமி என்பதால் நேற்றே வீடு துடைப்பதிலிருந்து தூய்மைப்.பணிகள்.அனைத்தும் நான் மற்றும்.அம்மாவால் பார்த்து முடிக்கப்பட்டிருந்தது

ராமன் காட்டில் வாழ்ந்ததால், நீர் மோரும் பானகமும்.மட்டுமே குடித்தான் என்பதால் அம்மா காலையே எலுமிச்சை ஜூஸை " பானகம்" என்று பெயர் மாற்றித்,தந்தாள்.( ஆத்தி..காட்டுல அவருக்கு.இலையும் கிழங்கும் கிடைச்சிருக்கும் அது தானா இன்னைக்கு முழுக்கவும்😭😳??)

ஆனால் நான்.பயந்தபடி இல்லாமல் சமைத்திருந்தாள். ராமனுக்கு காய்கறிகள்.பிடிக்கும்.ஆனால்.காய்கறிகளின் விலை ஒரு கிலோ 200 ஐ எட்டியதால் அம்மா காய்கறியை விட்டு விலகியும்...காய்கறிகளிடமிருந்து தனித்தும் வீட்டிலிருந்து விட்டாள்.

மதியம் போல் "அம்மா இன்று ராமநவமி கொண்டாடனும்" என்றேன் ( அப்பவாவது பட்சணங்கள் ஏதாச்சும் செய்ய அடுப்படிப்பக்கம் போக மாட்டாளா என்ற நப்பாசையில்)

மகா விஷ்ணு கிட்ட அஷ்டமியும் நவமியும் போய் சோகமா, எங்களை யாரும் கொண்டாடலைனு சொன்னதுக்காக அஷ்டமியில் கண்ணனாகவும், நவமியில் ராமனாகவும் அவதாரமெடுத்தார் மகாவிஷ்ணு என்று ஆச்சி பல முறை பல வருடங்களாக..பற்பல குரலில்.பற்பல தொனியில் சொல்லிவிட்ட விஷயத்தை மீண்டும் சொல்ல...அடடா...இவள் இனி ஒவ்வொரு மாநிலத்துலயும் ராம நவமியை பட்டாபிஷேக நாளாக....திருமண நாளாக...வன வாசம் முடிஞ்சு வந்த நாளாக கொண்டாடுவாங்கனு கதை சொல்ல ஆரம்பிச்சுடுவாளோ?...( பலகாரம் ங்கிற மேட்டரே வரமாட்டேங்குதே)

கடைசியாக ராமனுக்கு மிளகு பலகாரம் பிடிக்கும்.வெல்லத்தால் செய்த கோதுமை.அப்பம் பிடிக்கும்.நாம கோதுமை அப்பம்.செய்யலாம்.ஆனா அதை இன்னைக்கு நீயே try பண்ணு சூர்யானு சொல்ல....இருந்த மாவில்.அப்பம்.மாதிரி ஏதோ ஒண்ணு செய்தேன்..ஆலை.இல்லாத ஊருக்கு இலுப்பைப்.பூ சர்க்கரை மாதிரி ஸ்நாக்ஸ் என்பதே கண்ணில் படாமல்.வாழும் எனக்கு இந்த உலகமே இனிப்பா தெரிஞ்சுது..

இதே மாதிரி தான்  முன்பு ஒரு முறை வெள்ளம் வந்த போதும் வியாபாரிகள் மிகக் கடுமையாக நடந்து கொண்டார்கள்...கொரோனாவை விட கொடிய வைரஸ்கள்

வெள்ளம்.வந்த போது ஒரு வேளை உணவு சாப்பிடுவதே அரிதான விஷயமாக இருந்தது.வீடே பற்றாக்குறையால் நிரம்பி வழிந்தது.அதனைச் சமாளிப்பதற்கு அம்மாவிற்கு ஒரு வருட காலம்.ஆனது.என் தோழிகளின் குடும்பங்கள் இன்னும் கூட அதிலிருந்து மீள இயலாமல் தவிக்கிறார்கள்.

மீண்டும் நான் தலைப்பை விட்டு தள்ளிப் போனதாய் நினைக்காதீர்கள்.

மாலை பள்ளி விட்டதும் எப்போதும் ஆச்சி வீட்டுக்குத்தான் போவோம்.அம்மா அங்கிருந்து எங்களை அழைத்துச் செல்வாள். சில நேரம் அம்மா தாமதமாக.வரும் நாட்களில்.ஆச்சியிடம்.பசிக்குத்ய் என்று சொன்னால் உப்புமா தான் செய்து தருவாள்.அதனாலேயே எனக்கும் சக்திக்கும் உப்புமா என்றாலே ஒவ்வாமை இருந்து வந்தது.அரை லிட்டர்   பால் 50 ரூபாய் விற்கும் இந்நிலையில் "டீ" தருவதே பெரிய விஷயம் தான்..ஒரு பாக்கெட் வாங்கி.அதில் ஏராள,,தாராள,,தண்ணீர் ஊற்றி இந்தப் பாலைத் தான் மூணு நாளைக்கு வச்சுக்கணும்.இதில் தான் மோர் க்கும் பால் எடுக்கணும் என்றாள்..( அப்பவே நினைச்சிருக்கணும்) ஒரே ஒரு அரை லிட்டர்...மூன்று நாள்....மூன்று பேருக்கு....அதோடு தயிருக்கு வேறு....அதனால் " டீ" என்கிற பெயரில் ஒரு திரவம் கிடைத்தது.அதையும் சக்தி மகிழ்ச்சியாக குடித்து விட்டுச் சென்றாள்.நான் தான் விழுங்கி.விழுங்கிக் குடித்தேன்.

ராம நவமி சுபிட்சமாய்...உப்புமாவோடும் தேநீரோடும் கோதுமை அப்பத்துடனும் இனிதே கொண்டாடப்பட்டது.

போனில்.பேசிய இரண்டு தோழிகள் பூஜை செய்து நிறைய பலகாரங்கள்.சாப்பிட்டதால்.வயிறு சரியில்லாமல் போனதாகவும் சொன்னார்கள்.

எனக்கும் வயிறு சரி இல்லை தான்

பின் குறிப்பு. தமிழக முதலமைச்சரே எனக்குக் கால் பண்ணி....வீட்டுக்குள்ளேயே இருக்கும் என்னை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக் கொண்டார் தெரியுமா???.

 ( வெள்ளம்.வந்தப்ப...முன்னாள் முதலமைச்சர் அம்மாவும் என்கிட்ட பேசினாங்க..தெரியுமா???.)

Tuesday, 17 March 2020

கடிதிவள் துணிவே


அம்மா நிரந்தரமாக சென்னை வந்து விட்டாள்..இனி வெள்ளி இரவு புதுகையிலிருந்து கிளம்பி சென்னை வந்து மீண்டும் ஞாயிறு சென்னையிலிருந்து கிளம்பி புதுகை செல்லும் அலைச்சல் அவளுக்கில்லை.கடந்த ஐந்து வருடமாக அவள் பட்ட இன்னல்கள் இனி இல்லை..இருக்கக் கூடாது

தனியார் பள்ளிகளில், நிறுவனங்களில் வேலை செய்பவர்கள்.எல்லாம்.அரசு வேலை எதிர்பார்த்திருக்க,,அரசு வேலைக்கு ஏங்க...அம்மா.எங்கள் இருவரின் பொருட்டு அந்த வேலையை உதறிவிட்டு முற்றிலும் எங்கள் அம்மாவாக சென்னை வந்துவிட்டாள்

"கெடுக சிந்தை கடிதிவள் துணிவே
மூதில் மகளிராதல் தகுமே,மேந்நாள்
உற்ற செருவிற்கு இவள் தன்னை
யானை எறிந்து.களத்து
ஒழிந்தனனே, நெருநல்.உற்ற
செருவிற்கு இவள் கொழுநன்பெரு
நிரை விலக்கி,ஆண்டுப் பட்டனளே
இன்றும்,செருப்பறை கேட்டு
விருப்புற்று, மயங்கி, வேல் கைக்
கொடுத்து, வெளிது விரித்து உடீ இப்
பாறு மயிர்க்குடுமி எண்ணெய் நீவி
ஒரு மகம் அல்லது இல்லோள்
செருமுகம் நோக்கிச் செல்க என
விடுமே என்று 

( ஒக்கூர் மாசாத்தியார்)"

எழுதியது போலவே இரண்டு ஆண்டுகாலம் ஊதியம் இல்லாமல் துன்புற்ற போதிலும்..இவ்வேலை தவிர வேறு வருமானம் என்ன என்று உணர்ந்த போதிலும்,, பெற்ற அன்னையும் தந்தையும் ஏதும் கண்டு கொள்ளாமல் விட்ட போதிலும் தன் கணவனே தன்னை கைவிட்டு வேறு மனை புகுந்த பின்னும், உடன் பிறந்தவர்கள் யாரோ போல கடந்து போன போதிலும்,, கூட இருந்தவர்களே ( மெகா சைஸ்) குழி பறித்த போதிலும், சில.கயமைகள்.பணத்தால் துரோகித்துப் போன போதிலும்,, எங்களுக்காக,, எனக்கும் சக்திக்காக மட்டுமே உயிர்வாழும் பெரிய மனசுக்காரியை , என்ன சொல்லி அழைப்பது, எப்படி மகிழ்விப்பது ஏதும் புரியவில்லை..


(இது போன்ற பாடல்கள் எல்லாம் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே பரிச்சயம் ஆகிவிட்டது)

"நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறு நூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியொடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை"

"முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை 
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவிளிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப் 
பாலை கடாத் தொடும் பத்து"

என்று எனக்கு மூன்றாம் வகுப்பு முதல் வாசிக்க, எழுத, எழுத்தை நேசிக்க, கதைகளைக் கொண்டாடக் கற்றுக் கொடுத்த அம்மா இனி எங்களுடன் எங்களுக்காக....எங்களால்.(
.😁)


நெற்றியில் விபூதியோ குங்குமமோ இல்லாமல் வெளியே செல்லக் கூடாது என்று கற்றுக் கொடுத்த அம்மாதான் simply red - stars  கேட்கவும் கற்றுக் கொடுத்தாள். Aviva - princesses Don't cru கேட்பாள் Queen பாடல்கள் கேட்போம்.Ariana Grande,  Billie Eilish, Camila cabello,, Taylor swift  இவர்களுடம் K.B சுந்தராம்பாள் எம்.எஸ் அம்மா..ஜானகி அம்மா..என்று எல்லோர் குரலையும் கேட்க வைத்தாள். ரசிக்க வைத்தாள்

ஆங்கில எழுத்தாளர்களான Jane Austen முதல் Charles Dickens, Shakespeare, ரஷ்யனில் Tolstoy, Pushkin , Vladimir, Ivan, Nikolori என்று எங்கள் அறிவை விரிவு செய்தாள்.அகண்டமாக்கினாள். எங்கு சென்றாலும் எங்கள் பார்வையை விசாலமாக்கக் கற்றுத்தந்தாள்.


பல நேரம் இவள் எப்படி இந்தப் புதுக்கோட்டை யில் பிறந்தாள்,? இவள் எப்படி இப்படி சாதாரணமாய் வாழ்கிறாள் என்று.பிரமிக்கும் அளவுக்கு இருக்கும். சில நேரம் இவ்வளவு குழந்தை மனசா இவளுக்கு என்றும் பிரமிக்க வைப்பாள்

அம்மா எல்லோருக்கும் அம்மா தான்..ஆனால் எனக்கும் சக்திக்கும் அப்பாவாக, தாத்தாவாக, அண்ணனாக, எல்லாவற்றுக்கும் மேலாக தனி ஆளாய் நின்று சமாளித்தாள். சூழ்நிலை அவளை மிகக் கொடூரமான வாழ்க்கைக்குத் தள்ளிய பிதும் அவள் முகத்தின் புன்னகையின் வெளிச்சம் பிரகாசமானதே தவிர குறையவில்லை

அம்மா பேக்கைத் தூக்கிக் கொண்டு (ஊருக்குக் கிளம்பும் போது) மாடியிலிருந்து கீழே இறங்குமுன்னே , கண்ணீரை அடக்கிக் கொண்டு இனி அம்மா எப்படீ வருவாங்க என்று கேட்கலாம் என்று நினைக்கும் போதே சக்தியின் கண்களில் வழியும் கண்ணீரைப் பார்த்து அப்படியே அடங்கி இருக்கிறேன்.

இவள் அன்பைக் கூட நிராகரிக்க முடியுமா என்று ,"சிலர்" எங்களை ஆச்சர்யப் படுத்தி இருந்தாலும் அம்மாவிடம் பேசும், பழகும், அன்புள்ளங்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் ஏதும் தோன்றவில்லை.
ஒரே உதாரணம் தன் மேல் வெறுப்பை மட்டுமே உமிழ்ந்த தன் மேலதிகாரியை, அம்மா என்று அழைக்க வைத்து எங்களை அவரின் தங்கைகள் என்று பேச வைத்த மாண்பு அம்மாவுக்கு மட்டுமே உண்டு. ( சக்திக்கு அவர் என் தங்கைக்கு வாழ்த்து என்று அனுப்பி இருப்பதே சான்று)

அம்மாவை யாராலும் வெறுக்க முடியாது என்பதற்கும் இதுவே சான்று.

இப்போது எனக்கும் சக்திக்கும் இன்னுமொரு குறிக்கோள். எங்கள் இலட்சியத்திற்காக அம்மா எங்களோடு வந்துவிட்டாலும் அம்மாவின் எழுத்தாற்றல் மேம்பட அவள் அறிவை இன்னும் அகலமாக்கி விட நாங்கள் ஏதேனும் செய்தாக வேண்டும்.

பின் குறிப்புகள்

* இனி அவ்வப்போது ( உப்பு போட மறந்த) உப்பில்லாத உணவுப் பொருட்களை நாங்கள் சாப்பிட நேரிடும்

* துணி அலமாரி மிகச் சரியாக அடுக்கி வைக்கப் பட்டிருக்கும்.

* வாராவாரம் எண்ணெய் தேய்த்துக் குளிக்க நிர்பந்திக்கப் படுவோம்.

* இனி எல்லா வெள்ளிக்கிழமையும் - பிரதோஷ தினத்தன்றும் வீடு ஊதுபத்தி, சாம்பிராணி வாசத்துடன் இருக்கும்.

* அவ்வப்போது கஷாயம் என்ற பெயரில் கருப்பாய் , கசப்பாய், ஒரு திரவம் தரப்பட்டு, கட்டாயமாகக் குடிக்க வேண்டும் என்று சொல்லி கட்டாயப் படுத்தப் படுவோம்.

வாராவாரம் கோயில் சஷ்டிகவசம்.சிவபுராணம். எல்லாம்.கட்டாய விதிமுறைகள்

* பயமற்ற சூழலில் தூக்கம்.நல்லா வரும். பாதுகாப்பாய் உணர்கிறோம்.

* எல்லாவற்றுக்கும் மேல் இனிமேல் தினமும் சாப்பிட வீட்டில் சாப்பாடு இருக்கும்- சூரஜ் குட்டி என்று ஒரு குரல் ஒலிக்கும் அன்பாய் ...பிரியத்துடன்.

Sunday, 20 January 2019

பொங்கலோ பொங்கல்

முன் குறிப்பு...இதை 14/01/2019 தேதியிட்டுப் படிக்கவும்


 பொங்கலுக்காக திடீரென்று 12 ம் தேதி மதியம் முதல் விடுமுறை என்று சொல்லி விட்டார்கள்....

அம்மாக்களுக்கெல்லாம் திண்டாட்டமாகவும் எங்களுக்கெல்லாம் கொண்டாட்டமாகவும் இருக்கப்.போகும்.பொங்கலை எப்படிக் கொண்டாடலாம் என்று நினைத்தவாறே வீடு வந்தேன்...

அம்மா.காலையில்.தான் சென்னை வந்திருந்தாள்...பாவமாய் களைத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள்..மதியம் 1.40 க்கு வீடு வந்து கதவைத் தட்டிய நான் என்னம்மா இப்படி நாலு மணி வரைக்கும் தூங்கிட்டிங்க...ஒண்ணும் சமைக்கலையா..சரி..சரி..இன்னைக்கு கடைல சாப்டலாம்னு சொன்னதும் அம்மா மிரண்டு போனாள்..11 மணி வரை முழிச்சுத் தாண்டி இருந்தேன்...அவ்வளவா களைப்பாப்.போச்சு...சே...என்று சொல்லி விட்டு தட்டுத்தடுமாறி அடுப்படிக்குள் நுழைந்து..ரசம் வைச்சு..துவையல் வச்சு..அப்பளம்.பொறிச்சுத் தரேன்..சாப்டு..கொஞ்ச நேரம்.கழிச்சு, குழம்பும் கூட்டும் செஞ்சு தரேனு சொல்லி விட்டு பரிதாபமாய் வேலை பார்க்கத் தொடங்கினாள்...

என்னோட அம்மாவுக்கு ரொம்பப் பசிக்குதாடா..சாரி...சாரிடா..எப்படி தூங்குனேனெ தெரியலை டா என்றாள்..

இனிமேலும்.அம்மாவைப் பதற வைக்க மனமில்லாமல்..ஹைய்யோ..அம்மா நா என்ன சொன்னாலும்.நம்புவீங்களா..மணி இன்னும் 2 ஆகலை..எனக்கும்.பசிக்கலை..மெல்லப்.பண்ணுங்க...என்று ச்
சொல்லி சமாதானப் படுத்துவதற்குள்.....போதும் போதும் நு ஆகிப்போச்சு
( சில சமயம்.அம்மா.என்னை என்னோட அம்மா என்று அழைப்பாள்..அதற்குக் காரணம்.நான்.அவள்.அம்மா.மாதிரி வெள்ளையாக இருக்கும்.காரணமா..அல்லது சற்றே அவள்.அம்மாவின் சாயல் காரணமா...அல்லது நான் காட்டும்.அக்கறை அல்லது.செய்யும்.செயல்கள்.காரணமாகவோ எப்போதாவது ..கூப்பிடும் போதோ சொல்லும்.போதோ என்னோட அம்மா.என்றே சொல்வாள்....)

இந்தப் பொங்கலுக்குக்.கதைப் புத்தகங்கள்.படிச்சுத் தள்ளனும்னு நினைச்சிருந்தேன்..அப்றம்..MOM ல A3  sheet  வரை படங்கள் போட்டு விட்டு ஏதேனும் mini project செய்து விடணும்..அப்றம் அம்மாவுக்கு சில உதவிகள்...

முக்கியமான வேலையாக ஞாயிற்றுக்கிழமை காலைல பாசுமதி அரிசில வெஜ் புலவ்..மதியம் சாம்பார்..வறுவல்..இரவுக்கு பூரியும் கிழங்கும்..இதெல்லாம் சாப்பிடணும்னு எனக்கு நானே நினைச்சுக்கிட்டு புத்தகங்கள் அடுக்க ஆரம்பிச்சேன்

முதல்ல.கடைக்குப் போகச் சொன்னாங்க..அப்றம்.மாடிக்குப் போய் துணி எடுத்து வரச் சொன்னாங்க..அப்றம் யார் யார் என்ன என்ன வேலை பார்க்கப் போறோம் நு "லிஸ்ட்" போடச் சொன்னாங்க..( என்னாது வேலை பாக்கணுமா?..இது நம்ம லிஸ்டுலயே இல்லையேனு நினைச்சு)

சரிதான்..ரெண்டு ரூம்..ஒரு கிச்சன்..ரூம் சைஸ் க்கு ஒரு ஹால்..இவ்ளோ தானே மொத்த வீடே...புதுக்கோட்டை வீடு மாதிரி ஒண்ணும் பெரிய வீடு இல்லையே...எல்லாம் சமாளிச்சுக்கலாம்..சூர்யானு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டெர் லிஸ்ட் போட்டோம்..

மாலை சக்தி வந்தாள்..அம்மா நாளை காலை 5 மணியிலிருந்து துவங்கலாம்..இப்ப சாப்டு ஜாலியா பேசிட்டு..குறும்படம் ஏதாவது பாத்துட்டு படுப்போமானு கேட்டா??
(மறுபடியும் "ஆப்பா?" ) நெவர்,எவர்,கிவ் அப்..இந்த உலகமே உன்னை எழுப்பினாலும்...என்ன ஆனாலும்,,,9 மணி வரைத் தூங்கலாம்னு நினைச்சேனே...அதுக்கும் பெரிய ஆப்பா வைக்கிறாளேனு நடுங்கிக் கொண்டே அம்மாவைப் பார்த்தேன்..

இல்லைடா..காலைல 6 மணிக்கு மேல எழுந்து.. முதல்ல காப்பி குடிச்சிட்டு..கொஞ்சம் வேலை பாத்துட்டு ..பசிச்சா..சாதம் ரசம்..வச்சு..துவையல் அரைக்கலாம்னு அம்மா சொல்ல...( மறுபடியும் மற்றொரு ஆப்பா???)

அம்மா நாளைக்கு வெஜிடபுள் புலவ்..பூரி இப்படி ஏதும் இல்லையாம்மா?? லீவ் நா ஏதாச்சும் ஸ்பெஷல் பண்ணுவீங்களேனு நான்.பரிதாபமாய் கேட்க..அதெல்லாம் சாதா லீவ் ல சூர்யா..பொங்கல் வேலை பாக்கணும் ல ..வீடு சுத்தம் பண்ணனும்..புதுக்கோட்டைனா வீடெல்லாம் மாவுக்கோலம் போடணும்..மேலே கட்டிப் போட்ட பாத்திரங்கள் கழுவணும்..சாமி ரூம் துடைக்கவே ஒரு நாள் ஆகும்...இங்க அந்த மாதிரி இல்லைன்னாலும் வீடு முழுதும் நாளை ஒரே நாள் ல எல்லாம்.செஞ்சு முடிக்கணும் சூர்யானு சக்தி சொல்ல,,,அம்மா மாற்றுக் கருத்தே இல்லாதது போல தலையை மட்டும்.ஆட்டி வழி மொழிந்து கொண்டாள்..

( ஊர் லருந்து எவனோ எங்கம்மாவுக்கு செய்வினை வச்சு அனுப்பிருக்கான் போல)

ஒரு வழியா ஞாயிறு காலை..பல்வேறு அலுப்புகளோடும்,,சில பல சலிப்புகளோடும் எழுந்தேன்..

சரிதான் அம்மா போட்ட லிஸ்ட் படி என் வேலையை நான் முடிச்சுட்டா..அப்புறம் நான்.படிக்கலாம்..நமக்கு நாமே திட்டத்தின் மூலம் பூரி கிழங்கு செய்துக்க வேண்டியது தானே நு முடிவு பண்ணி லிஸ்டை எடுத்துப் பார்த்தேன்..

அதன் படி துணி காயப்போடுதல்..எடுத்து மடித்தல்..மெத்தை தலையணை உரை..வாஷிங் மிஷினில் போட்டு உலர்த்தி மடித்து வைத்தல்..காய்கறி அடுக்குதல்..இது மட்டும் தான் இருந்தது..

சே!! இதுக்கா பயந்தோம்..இதெல்லாம் தூசு மாதிரி...நினைச்சுக்கிட்டே காப்பியை ரசிச்சுக் குடிச்சேன்..

ஒரு காப்பியை எவ்ளோ நேரம் டி குடிப்ப..சீக்கிரம் துணிகளை மாடிக் கொடில.போட்டு கிளிப் போட்டு வா என்று ( கிட்டத்தட்ட) கத்தினாள் சக்தி..

அவள் கொடுத்த துணிகளைக் காயப் போட ஏழு தடவை மாடி ஏற வேண்டி இருந்தது..

பழைய மெத்தை விரிப்பு..தலையணை உரை..புதியது ஒரு செட்..திரைச்சீலைகள்..எல்லாத்தையும் மெஷின்ல போட்டு காயப்போட்டு வந்தேன்..

இதற்குள் இரண்டு முறை போட்டதை புரட்டிப் போட்டு வரச் சொன்னார்கள்...மூன்று முறை " டீ" போடச் சொன்னார்கள்..

( இவங்க ரெண்டு பேருக்கும் பசியைக் கொடு கடவுளேனு வேண்டிக்கிட்டு..அடுப்படிக்கு வரணும்னு ரெண்டு பேருக்குமே தெரியாதானு நொந்த படி..அடிக்கடி அவர்கள் முன் தண்ணீர் குடித்தேன்..பசிக்குதுனு சிம்மாலிக்கா காட்டலாம் நு

 கட்டிலுக்கு அடியில் இருந்த குப்பைகள்.,,பழைய பாட்டிகள்..என்று எல்லா இடங்களிலுமிருந்த வேண்டாதவைகளைப் பையில் போட்டு உடனடியாய் கீழே இறங்கு வைத்து விட்டு வரச் சொன்னார்கள்..வீடு இருப்பது இரண்டாவது மாடி..ஒரு வளைவுக்கு ஒன்பது படிகள் என ஒரு தளத்திற்கு 18 படிகள்..ஆக18+18 =36 படிகள்...கீழே 16 முறையும் மேலே 15 முறையும் போயிருக்கேன்..அப்ப எத்தனை படிகள் நடந்துருக்கேன்????( அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

அப்பவே நினைச்சேன்...துணி காய வைக்குறதும் குப்பை வைக்கிறதும் மட்டும் என்.பேர்ல எழுதி இருக்காங்களே....நு எனக்கே தோணிருக்கணும்...( சூர்யா இப்படி ஏமாந்துட்டாளே)

11 மணி வரை குப்பைகளோடும் விளையாட வைத்து விட்டு மனமிரங்கி சமைக்க வந்தாள் அம்மா..

மோர் சாதம்..( அதிலும் 90% தண்ணீர்..10% மோர்...மோர் என்ற பெயரில் வெள்ளை என்று தன்னைத்தானே நினைத்துக் கொண்ட திரவம் தான் இருந்தது...இதை எல்லாம் கண்டு கொள்ளாதா..இந்த எடப்பாடி அங்கிள் அரசு???)

நான் என்ன சாப்பிட நினைச்சேன்??ஆனா..?!?! என்று மனசுக்குள்ள பழைய சிவாஜி கணேசன் தாத்தா பாடிய( வாய் அசைத்த) சோதனை மேல் சோதனை போதுமடா சாமி..என்று பாடிக் கொண்டே வேலை பார்த்தேன்..

ஒரு வழியாக இரவு 8 மணி..இப்ப ரசமும் சாதமும் மட்டும்..அப்பளம்.கூட இல்லை.."புலவ்" சாப்பிட ஆசைப்பட்ட சூர்யாவை இப்படி புலம்ப வச்சுட்டாங்களே!!! எங்க படிக்க???அதோட நடந்து..நடந்து..இடுப்பும் காலும் நொந்து போச்சு..

மீத வேலையை நாளைக்குப்.பாக்கலாம் நு சொல்லி உடனே அதை அமுல்.படுத்திட்டா சக்தி.ஹாலை லைட்டா கூட்டி அங்கேயே ஒரு விரிப்பு விரிச்சு படுத்துக்கிட்டோம்.தரை எல்லாம் சிலு சிலு நு இருக்கு..கை கால் நடுங்குது.அவங்க ரெண்டு பேரும்.படுத்த நிமிஷத்தில் தூங்கிட்டாங்க.

9 மணிக்குத்தான் எந்திரிக்கணும்னு நினைச்ச சத்தியத்தெல்லாம் தூக்கிப் போட்டுட்டு..காலைல ஆறு மணிக்கே எந்திரிச்சு..குளிச்சு..காப்பியைக் குடிச்சுட்டு வேலை பார்க்க ஆரம்பிச்சு ஒரு வழியா மதியத்தோட வேலை முடிஞ்சுது..அம்மாவும் சக்தியும் காய்கறியும்.கரும்பும் வாங்கப் போனாங்க..

கதைக் கோவை நு ஒரு புத்தகம்.நான்கு பாகங்கள் கொண்டது.3ம் 4ம் வேளச்சேரி நூலகத்தில் எடுத்திருந்தேன்.815 பக்கங்கள்.அல்லயன்ஸ் வெளியீடு.முதல் பதிப்பு.1945.இரண்டாம் பதிப்பு.1994 மூன்றாம்பதிப்பு 2013 இவ்ளோ தான் என் மொத்த பொங்கல் விடுமுறை படிப்பு)

பொங்கல் அன்று பேண்ட் ஷர்ட் போட்டுகிட்டு ஜம் நு உட்கார்ந்து படிக்கணும்..சாப்பிடணும்..பேட்டையா..விஸ்வாசமா எந்தப் படம் அம்மா கூட்டிப் போறாள் நு கேட்கணும் நு நினைச்சுக்கிட்டு இருந்தப்பவே..அம்மா காய்கறிகளை வெட்டச் சொல்லி விட்டாள்..ஒரு வழியா பொங்கல் வச்சு..குழம்பு வச்சு சாப்பிட 12 மணி ஆகிடுச்சு.ரொம்ப களைப்பா இருந்தது
பொங்கலுக்கு படம் கூட்டிப் போங்க..Faber castle pencil வாங்கித்தாங்க.புத்தகத்திருவிழாவில் நாவல் நிறைய வாங்கித் தாங்க நு நான் சொல்லச் சொல்ல எல்லாத்தையும் நிதானமா கேட்ட அம்மாவும் சக்தியும் எல்லாத்துக்கும்.பணம் வேணும் ல சூர்யா..அம்மாவுக்கு சம்பளம்.வரலல்லனு முடிச்சுட்டா.( முறிச்சுட்டா)

யாராச்சும்.எனக்கு பொங்கல் வாழ்த்து சொல்லட்டும் கொலை காண்டுல இருக்கேன்.பொங்கல் ஆச்சே!! நல்ல நாள் ..கில்ல நாள் நு செண்டி மெண்ட் கிண்டி மெண்ட் இருந்தா ஓடிப் போயிடுங்க சொல்லிட்டேன்..

நான் தூங்கிட்டதா நினைச்சு பக்கத்தில்.படுத்திருந்த அம்மா என் தலையை நீவி விட்டுக் கொண்டே இருந்த அம்மா சொன்னாள்..சக்தி..நம்ம பாப்பா என்னல்லாம்.படிக்கணும் நு நினைக்கிறாளோ அதெல்லாம் படிக்க வைப்பியாடா என்று கொஞ்சம் குரல் ஆடியது போல் கேட்க," சக்தி, அவளை நல்லபடியா கவனிச்சுக்குவேன் ம்மா..இந்த உலகத்துலேயே எங்களைப் போல்.சிஸ்டர்ஸ் யாரும் இருக்க மாட்டாங்கம்மா...அவ என் செல்லம் ம்மா.."" என்றாள்..


அம்மாவின்.கண்களில்.கண்ணீர் நிறைந்திருக்க வேண்டும்..என் நெற்றியில் இரண்டு சொட்டு விழுந்தது..நெற்றிக்கு முத்தமிட்டாள்..அம்மாவின் மேல் கால்.போட்டுக் கொண்டு அம்மாவின் கை பிடித்துத் தூங்குவது தான் இந்த உலகத்தின் சுகமான செயலாகத் தோன்றியது..

உங்களுக்கும் தோணுதா????

பின் குறிப்பு..1.

நான் இந்த நடைக்கு இவ்வளவு வேலைகளுக்கு வேதனைப்படுகிறேன்..ஆனால்.அம்மா.வாரா வாரம் புதுகையிலிருந்து திருச்சி வந்து திருச்சியிலிருந்து சென்னை தாம்பரத்தில் இறங்கி மாடி ஏறி கீழே இறங்கி பீச் ரயில் பிடித்து கிண்டி வந்து கிண்டியிலும் மாடி ஏறி இறங்கி வேளச்சேரி  51 ஏ பஸ் பிடிச்சு வந்து...வந்ததும் சமைக்க ஆரம்பிப்பாள்..

வரும் நேரமெல்லாம்..துணிகள் துவைத்து..பாத்திரங்கள்.கழுவி..வீடு சுத்தம்.பண்ணி..மாவு அரைத்து...வத்தல் குழம்பு பேஸ்ட் செய்து..இட்லி மிளகாய் பொடி அரைத்து..சில சமயம் எக்ஸ்ட்ரா வேலைகளாக டூ வீலர் சரி பார்த்து..மிக்ஸி சரி பார்த்து எனக்கு போன் சரி பார்த்து..குக்கர் டயர் வாங்கி..என்னை லைப்ரரி கூட்டிப் போய்..சக்திக்கு அவ லெண்டிங் லைப்ரரி கூட்டிப் போய்..கோயில் கூட்டிப் போய்...அம்மா வரும் நேரமெல்லாம் வேலைகளால் முங்கி விடுகிறாள்..

கிளம்பும்.நாளில் படு பயங்கரமாக இருக்கும் வேலைகள்...

அவள் வாழ்க்கையில் எவ்வளவு குழப்பங்களும்.வேலைச் சுமைகளும்.இருந்தாலும் எங்களைக்.கடிந்து கொள்ளாத அம்மாவை நான் நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும்.

தவறுகளுக்கு கண்டிப்பாள்..ஆனால் தண்டித்தது இல்லை.அவளுக்கு நாங்கள் நிறைய செய்து தர வேண்டும்..அதற்காகவே நாங்கள்.உயர் நிலை அடைய வேண்டும்..💓💓💓

பின் குறிப்பு 2

இப்பவும் யாராச்சும் அம்மாவிடம் சிபாரிசு செய்யுங்கள்..பேட்ட ..விஸ்வாசம் படம்.பார்க்கணும் Faber castle pencil  வேணும்..

பின் குறிப்பு 3

கொல காண்டெல்லாம் இல்லை..எல்லோரும் என்னை வாழ்த்தலாம்..😅😁😂😃😄

Friday, 4 January 2019

ஓவியம்

ஆதி மனிதன் மொழி வளராத காலத்தில் ஓவியங்கள் மூலமாகத்தான் தன் உணர்வுகளைப் பிறருக்குக் கடத்தி இருக்க வேண்டும்

எந்தச்செடியின் மூலம்.என்ன நிறம் பெறலாம்.எனக்கண்டறிந்து அதனைப்.பயன்படுத்தி வண்ண ஓவியம் தீட்டியது தான் மிகப் பெரிய ஆச்சர்யம்...

ஓவியத்திற்கு நேர்கோடு.கோணக்கோடு..வளை கோடு மட்டுமே அடிப்படை..

ஓவியம்..ஓவ,ஓவியம்,சித்திரம்,படம்,,படாம்,வட்டிகைச் செய்தி என்ற சொற்களாலு.வழங்கப்பட்டது.

ஆண் ஓவியர்களை சித் ராங்கதன் என்றும் பெண் ஓவியர்களை சித் ர சேனா என்றும்.அழைப்பார்கள்..

ஓவியக்கூடங்களை சித் ரக் கூடம், சித் ர மாடம், எழுதுநிலை மண்டபம்.எழுதெழில்,அம்பலம் என்று அழைத்தார்கள்..

வண்ணம் கலக்காமல் கரித்துண்டுகளால்.வரையும் ஓவியங்களை புனையா ஓவியம் என்கிறார்கள்.

ஓவியங்களில் நிற்றல்.இருத்தல்,கிடத்தல், ஆகிய மனித இயல்புகளையும் வீரம்,சாந்தம்,சினம்,வியப்பு,உவகை முதலிய மெய்பாடுகளையும்,உத்தமம்,மத்திமம், அதமம், மற்றும் தசதாளம்,நவதாளம், பஞ்சதாளம்,முதலிய அளவுகளையும் வலியுறுத்துவது தமிழுக்குரிய ஓவிய மரபுகளாக விளங்குகின்றன

7 ம் நூற்றாண்டின் மகேந்திரப் பல்லவன் அவன் ஓவியத் திறமைக்காக சித்திரகாரப் புலி என்று அழைக்கப்பட்டான்..(இப்ப முதல்வரா இருந்தா...டாக்டர் பட்டம் கொடுத்தாங்களே அப்படியாத்தான் இருக்குமோ??😁🤔)
தட்சிணசித்திரம் என்னும ஓவிய்.நூலுக்கு மகேந்திரப் பல்லவன் உரை எழுதினார்.

1.சிலப்பதிகாரத்தில் " ஓவியச் செந்நூலுரை நூற்கிடக்கை " என்ற வரி வருகிறது

2.உயிர் பெற எழுதப்பட்ட ஓவியப் பாவை ( சீவக 2048) என்று சீவக சிந்தாமணி சொல்கிறது.

3. தொல்காப்பியத்தில் நடுகல் வணக்கம்- கண்ணெழுத்து பற்றி குறிப்பு உள்ளது. சிற்பங்கள் செதுக்குமுன் ஓவியம் வரைந்த பின்னரே சிற்பங்கள் செதுக்குவர்..

4. புற நானூற்றில் ஓவத்தனைய இடநுடை அமைப்பு என வீட்டின் அழகை ஓவியத்திற்கு ஒப்பாக சொல்வார்கள்..

இந்தியாவில் எல்லோரா ஓவியம் நேர்த்தியானவை..அழகானவை..புகழப்படுபவை..

6.காந்தாரம்..தட்சசீலம் இரண்டும் பாரசீக அடிப்படையிலான ஓவியங்கள்...

7.நாளந்தா அடிப்படை ஓவியங்களே பின்னர் பிரசித்தி பெற்றது

8.பிரான்சின் மிகப்.பழமையான ஓவியம் ( grottechuver) குரோட்டே சோவேட்டில் 32000 ஆண்டுகள்.பழமையானவை..

9.ஸ்பெயின் நாட்டிலுள்ள ஆல்டமிரா குகை பாறை ஓவியங்கள் 12000 வருடங்கள்.பழமையானவை..

10.பிரான்சின்..லாஸ்கோக்ஸ்,,டோர்டேர்க்னே ஆகிய இடங்களில் சுவர் ஓவியங்கள்.கண்டு பிடிக்கப்பட்டன...

11 .இந்தோனேசியாவின் சுலவேஸித் தீவில் காணப்படுகின்ற குகை ஓவியங்கள் 40 ஆயிரம் வருடங்கள்.பழமையானவை...

ஓவியப் புத்தகங்களாக நான் பார்க்க படிக்க நினைப்பவை..
1. டிராஸ்கி மருது
2.ஸ்டுபர்ட்சிபி
3.சுந்தரபிள்ளை சிவரெத்தினம்
4.பாரதிபுத்திரன்
5.ஏஞ்சலினாபாமா பால்
6.நா.அருள் முருகன்
7.பி.ஏ.கிருஷ்ணன்
8.ரவிராஜ்
9.புகழேந்தி..

( எந்தப் புத்தகமும் அம்மா வாங்கித் தரமாட்டாளாம்)

கீழே நான் சாதாரண பென்சிலால்.வரைந்த ஓவியங்களைப்பாருங்கள்..


இன்னும் மேம்படுத்துக் கொள்ள Faber castell பென்சிலாவது கேட்டேன்..அதையும் வாங்கித் தர மாட்டாங்களாம்..

பின் குறிப்பு..யாராவது அம்மாவிடம் எனக்காக சிபாரிசு பண்ணுங்களேன்...

பி ஏ கிருஷ்ணனின் நூல் 800 ரூ என நினைக்கிறேன்..

புகழேந்தி எழுதிய நானும் நிறங்களும் புத்தகமாவது படிக்க ,,பார்க்க விரும்புகிறேன்...

எப்போது கிடைக்குமோ??

Thursday, 27 December 2018

நட்சத்திரம்

* இப்போதெல்லாம்.ஒரு பொருளைப் பார்த்தால் பல எண்ணங்கள் கோர்த்துக் கொள்கின்றன.( நான் வளர்ந்து விட்டேன் தானே)

* எதிர் வீட்டு வாசல் நட்சத்திரம்.சூடி இருந்தது.முன்னெல்லாம் அம்மா டிசம்பர் மாதங்களில் வாசலில் எங்கள் வீட்டிலும் " ஸ்டார் லைட்" போடுவாள்.அது எனக்காக.என் தோழிகளிடம் நான் சொல்ல வேண்டும் என்பதற்காக..அல்லது நான் S.F.S பள்ளியில் படித்ததன் காரணமாக...அல்லது எதிர் வீட்டு அம்மாச்சி மற்றும் தாத்தாவுக்காக...

ஆனால் நான் சொல்லித்தான் அது அரங்கேறியது.( வீட்ல சின்னப் பிள்ளைங்க பேச்சை எங்க பாஸ் கேக்குறாங்க???..ஆனா நாங்க சின்னதா ஒரே ஒரு சேட்டை அல்லது குறும்பு  பண்ணட்டும்...அதுக்கு மட்டும் ஆயிரம் வாய் இருக்கும்...அம்பத்தியோரு திசை இருக்கும்..( இந்த அம்பத்தியோரு திசைங்கிற வார்த்தைய நானா கண்டுபிடிச்சேன் பாஸ்.) ..( என் புலம்பல் என்னோட இருக்கட்டும்))

ஆரோக்கியசாமி Father.
---------------------------------
என் பள்ளியின் முன்னால்.முதல்வர்.கலகலப்பானவர்.ஆனா கண்டிப்பானவர். டிசம்பர் மாதங்களில் அவர் முகமும்.மனமும் அதிக பிரகாசமாயிருக்கும்."உம்" என்று குழந்தைகள்.இருந்தால் உடனே ஒரு சாக்லேட் கிடைக்கும்.(பல தடவை வருத்தப்பட்டது மாதிரி இருந்து சாக்லேட் வாங்கி இருக்கேன்நா பாருங்க..)

திடீரென்று மஞ்சள் காமாலை வந்து இறந்து போனார்.ஆனாலும்.எங்களோடு கல்விச் சுற்றுலா வந்த போது..எழுந்து..எழுந்து ஆடியதும்..வெள்ளை ஆடையும்..பளிச் என்ற சிரிப்பும் தான் நினைவுக்கு வருகிறது..

அந்நாட்களில் குழந்தைகளான எங்கள் மனங்களில் அவர் தான் ஸ்டார்..

தன் அறை வாசலிலும் ஒரு ஸ்டார் கட்டச் சொன்னவர்.

அம்மாச்சி
---------------------

அவரவர் வேலை விட்டு வீடு வந்த பின் வாசல் கதவை இறுகச் சாத்திக் கொள்வது போல் இருக்க முடியாது புதுக்கோட்டையில் இருக்கும் போது....எதிர் வீட்டின் அம்மாச்சி,,( அம்மாச்சி என்று அழைப்போம்.பெயர் தெரியாது..தாத்தா பெயர் ஆரோக்கிய சாமி..கம்யூனிசவாதி..)
குட்டிகளா...என்னடி ..சுவாதி இல்லையா???என்னடி சாப்டீங்க?? என்று கேட்டு நேரே எங்கள் வீட்டின் அடுப்படிக்கே வந்து வத்தல் குழம்பு..அல்லது.ஃப்ரைட் ரைஸ்..செய்து கொடுத்து விட்டுப் போகும் அவர் மகள்..எனக்கு வைரம்ஸ் பள்ளியில் ஆசிரியர் ( பள்ளியில் மிஸ் என்றும் வீடு வந்ததும் ஆண்ட்டி என்றும் அழைப்பது வழக்கம்). அந்த அம்மாச்சிக்கு அம்மாவை ரொம்பப் பிடிக்கும்.எங்கள் வீட்டில் ஸ்டார் லைட் போடுவதை ஒரு வித ரசனையோடு பார்ப்பார்.அம்மாச்சியின் அன்புக்கு மனசு இப்போதும் ஏங்குது..

அந்தோணி ஞானசேகரன்
-----------------------------
கிறிஸ்மஸ் அன்று பல வித ஸ்வீட்.கார வகைகளுடன் வந்து அம்மாவிடம் மட்டுமல்லாது எங்களிடமும் பணிவாக வழங்கிவிட்டுச் செல்லும் அம்மாவின் அஸிஸ்டண்ட்.( இவரைப் பற்றி வேறு ஏதும் தெரியாது என்பதால் நிறுத்துகிறேன்) எங்கள் வீட்டில் இருக்கும் ஸ்டாரைப் பார்த்து மகிழ்ச்சியாகப் பார்த்துச் செல்வார்..

சத்தியநாதன்
---------------------------
அம்மாவின் பல.தம்பிகளில் இவரும் ஒருவர்.ஒரு கிறிஸ்மஸ் க்கு அறந்தாங்கி அருகே இருக்கும் இவர் வீட்டுக்குப் போனோம்.அனிட்டா சித்தி..சத்திமாமா..அம்மாச்சி..தாத்தா..எல்லோருக்கும் அம்மாவை பிடிக்கும்.( இந்த அம்மாவை யாருக்குத்தான் பிடிக்காது?? சுவாதி என்றால் அழகு- அறிவு-ஆற்றல் என்றே பொருள் கொள்க)
எங்கள் வீட்டின் ஸ்டார் லைட் இருந்ததைப் பார்த்துத்தான் இந்த மாமா எங்களுக்கு அறிமுகம்

எபின் Father
-------------------------------
புதுக்கோட்டையில் அம்மாவின் செல்வாக்கு அதிகம்.என்பதால் ஆசிரியர்கள் அனைவரும் என்னை கவிஞர் சுவாதி பொண்ணு..சுவாதி டீச்சர் பொண்ணு என்றே அழைப்பர்.பள்ளியில் சக்தியின் செல்வாக்கு அதிகம் என்பதால் மாணவர்கள்..மற்றும் அம்மாவை அறியாத சில ஆசிரியர்களும் என்னை சக்தி தங்கச்சி என்றே அழைப்பர்.அந்த அடையாளம்.தான்.எனக்கு.வகுப்பில் கிளாஸ் எடுக்க வரும் ஆசிரியர்கள் கூட என்னைக் கூப்பிட வேண்டுமென்றால் சக்தி சிஸ்டர் என்று கூப்பிட்டு ஆயிரம் தடவை என் பெயர் என்ன என்று கேட்டு விட்டு..அதே ஆயிரம் தடவை நான் ராகசூர்யா என்று சொல்லும்.போது"ம்" என்று கேட்டுவிட்டு மீண்டும் அடுத்த முறை சக்தி சிஸ்டர் என்றே அழைப்பார்கள்.இதில் சிலர் கொஞ்சம் ஓவராக..உங்க அக்கா மாதிரி நல்லாப் படிக்கணும்.சரியா என்று அட்வைஸுவார்கள்..அப்பல்லாம் தமிழ் படங்கள் .ல்ல..சுவத்துல உதைச்சு சண்டை போடுற விஜய் காந்த் மாதிரி...ஸ்டைலா பந்தாடுற ரஜினி மாதிரி..ஹிந்தில பறந்து பறந்து அடிக்கிற ஹிருத்திக் ரோஷன் மாதிரி...பார்த்துப் பார்த்து விலாசுற..சல்மான் கான் மாதிரி..இங்லிஷ் படங்கள் ல வர மறைஞ்சு மறைஞ்சு அடிக்கிற  Arnold மாதிரி.போட்டுத் தள்ற Jet li மாதிரி..Jean..Jakiechan..Jason..Keanu..Mark wahlbery. எல்லோருமாக நின்று அவர்களை துவம்சம் செய்வேன் கற்பனையில்)

ஆனால் முதன் முறையாக சக்தியை ராக சூர்யா சிஸ்டர் என்பதோடு மட்டுமல்லாமல்.என் record note.எனது exam papers எல்லாம் model  ஆக பிறருக்குக் காட்டுபவர். ஆசிரியர்கள் வகுப்புக்கு வரவில்லை என்றால் நாங்கள் பிரின்சிபால் அறையில் அமர்ந்திருக்கும் இவரைப் போய் பார்த்து,,அவர் அருகில் இருக்கும் பிரிட்ஜைத் திறந்து,,சாக்லேட் எடுத்து சாப்பிடும் உரிமை வரை தந்திருந்தார்.படிக்காத மாணவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாப் படி என்பார்.( அடிக்காம திட்டாம..குணமா சொல்வார்)
பள்ளியில் மேலே ஏறி ஸ்டார் கட்டுவது இவர் தான். ஸ்டார் எரியும் போது வானத்திலிருந்து ஒன்றைப் பறிச்சு எடுத்து வந்து ஸ்கூல்ல வச்சது மாதிரியே சந்தோஷமப் பார்ப்பார்..

அருள் பிரான்சிஸ்Father
------------------------------------
சக்தியின் மேல் பாசமும் அம்மாவின் மேல் அளவு கடந்த பாசமும் கொண்டவர்..வெள்ளை அல்லது சில்வர் கலர் ஸ்டார் தான் இவருக்குப் பிடிக்கும்..மற்றவைகளை அழகாய் இல்லை என்பார்..இவர் தான் பிரின்சிபால்..

அப்புறம் சண்டை போடும்.ஜெரோமி சித்திகா...பேசவே பேசாத ஆஷா மிருணாளினி,, இன்னோவாவில் வரும் கிறிஸ்டி,,எல்லாக் கேக்கிலும் முட்டை கலப்பார்கள் என்று சொல்லி பயமுறுத்தி அழவைத்த டீனா,,உட்கார்ந்தால்,,நின்றால்,,பேசினால்,,இயேசப்பா என்று சொல்லும் தேஜா ஸ்ரீ..பிறந்த நாள் போலவே லீவ் முடிந்து பள்ளிக்கு வரும் போது எல்லோருக்கும் சாக்லேட் கொடுக்கும் ஜஸ்வின் மனோகர்..இப்படியாக எல்லோரும் என் நினைவில் வந்து போகிறார்கள்..

அப்போதெல்லாம் நான் இந்து, என்றும் எனக்குத் தெரியாது.அவர்கள் கிறிஸ்டியன் என்றும் எனக்குத் தெரியாது.என்னைப் பொருத்தவரை அவர்கள் அசைவம் சாப்பிடுபவர்கள்.நாங்கள் சாப்பிடாதவர்கள் அவ்வளவே..

பிரதோஷம் தவறாமல் கோயில் போகும் அம்மா கிறிஸ்மஸ் அன்று எல்லோருக்கும் வாழ்த்து அனுப்பி விட்டு யாரையாவது மிஸ் பண்ணிட்டேனா பாருடி என்று போனை என்னிடம் தந்தாள்.நானும் கூட 10 பேருக்கு அனுப்பினேன்..

இதைப் படிக்கும் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

கேள்வி
---------------
வாழ்த்து மட்டும் போதுமா நண்பர்களே...சித்தப்பா சித்திகளே....மாமா அத்தைகளே...????

பின்குறிப்பு 1
-------------------
நிறைய எழுதத் தோன்றுகிறது.ஆனால் ஏதோ அழுத்தம் புறந்தள்ளி விடுகிறது. இனியேனும் தொடர விரும்புகிறேன்.

பின் குறிப்பு 2
---------------------------
ஆமா!!! நான் வந்திட்டேன்னு சொல்லு...திரும்பி வந்துட்டேனு சொல்லு நு வந்த....அப்புறம் காணோம்..என்று யாரோ முணகுறது கேட்குது..

பின்குறிப்பு 3
----------------------------
இந்த ஆண்டு முதல் என்னை "சிறுமி" என்று புறந்தள்ள முடியாது.அதனால் மரியாதையா கமெண்ட் பண்ணிட்டுப் போங்க...

பின் குறிப்பு 4
---------------------------
நன்றி..எழுதுடா...நிறைய்ய எழுது என்று சொன்ன செல்வி ஆண்ட்டிக்கு

பின் குறிப்பு 5
---------------------------
நான் SUPER STAR  மகள் தெரியுமா???

அம்மா பெயர் சுவாதி...அது ஒரு ஸ்டார் ..

அம்மா எப்பவும் எங்களுக்கு super..அதனால் நான் SUPER STAR  மகள் தானே???

பின் குறிப்பு 6
----------------------------
நான் " ராக"சூர்யா" என்பதால்...உலகின் பெரிய ..STAR....நான் தான்...

ஆமாந்தானே?????

Thursday, 14 September 2017

இதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....

இதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....

அன்று ஒரு வியாழக்கிழமை...
பள்ளியில் ஐந்தாவது பிரியட் முடிந்து ஆறாவது பிரியட் தொடங்க வேண்டும்.அன்று வர வேண்டிய வகுப்பின் ஆசிரியர் விடுப்பு எடுத்திருந்ததால் வரவில்லை..
வகுப்பில் ஆசிரியர் இருந்தாலே கும்மாளம்.போடும் நாங்கள் அவர் வரவில்லை என்றவுடன்...அவரவர் வால்தனங்களை அவிழ்த்து விட்டுப் பிரபலமாகிக் கொண்டிருந்தோம்..

முதலில் ரேஷ்மா தான் ஆரம்பித்தாள்.தினமும் பள்ளிக்கு வந்து போரடிக்குது நாளைக்கு லீவ் போடலாமா என்றாள். உடனே கீர்த்தி.சரண்யா.மதுமிதா.காயத்திரி.கரிஷ்மா அனைவரும் ஒத்து ஊதினர். எல்லோரும் மொத்தமாக லீவ் போட்டால் சந்தேகம் வரும் என்றாள் நஃபிதா. 

பிறகு ஆளாளுக்கு பேசிவிட்டு லீவ் எல்லாம் போடமுடியாது.பிரச்சினை வரும் என்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டு, ஆதங்கத்தோடு அடுத்த பிரியட். ஐ எதிர் கொள்ள ஆரம்பித்தார்கள். எனக்குள் அந்த லீவ் மேட்டர் மீண்டும் மீண்டும் மனதிற்குள் ஓடிக் கொண்டே இருந்தது. நாளை வெள்ளிக் கிழமை தான் ஒரு நாள் லீவ் போட்டால் சனி.ஞாயிறு.சேர்ந்து கிடைக்கும். ஜெம ஜாலி என்று தோன்றியது. ஆனால் ச்ச்ச்சும்மா லீவ் போடுகிறேன் என்றால் எப்படி.அனுமதிப்பார்கள்? அதனால் அதற்கென ஒரு திட்டம் தயாரிக்க ஆரம்பித்தேன். அம்மாவிற்கு வயிற்று வலி வருவதுண்டு. அப்போது தாங்க இயலாமல் தவிப்பாள். புரளுவாள். வேக வேகமாக சமைத்து முடித்து விட்டு குப்புறப்படுத்துக் கொள்வாள். அடிக்கடி கழிப்பறை சென்று வேதனை முகத்தோடு திரும்புவாள். 
எஸ்.
இந்தத்திட்டம் தான் சரியானது என்று மனதிற்குத் தோன்றியது.
பள்ளியிலிருந்து கிளம்பும் போதே முகத்தை உர் என்று வைத்துக் கொண்டேன். வீடு வந்ததும் கண்ணாடி முன் நின்று சோகமாக முகத்தைப்வைக்க முயற்சி செய்து பழகிக் கொண்டேன். என் முகத்தைக் காண எனக்கே பாவமாய் தோன்றும் அளவிற்கு " பர்மாமன்ஸ்" சரியாக இருந்தது..

அம்மா வந்தவுடன் வயிறு வலிப்பதாய் சொன்னேன். " சாப்பிடு ,சரியாப்போகும்..அடக்கடவுளே! இவளுக்கு இன்னும்.பசிக்குதுனுப்கூடச் சொல்லத் தெரியலை" என்று தலையில் அடித்துக் கொண்டே சென்றாள். மீண்டும்.கண்ணாடி முன் போய்..வலிக்கு பதில் பசியைக் காண்பிச்சுட்டோமோப்..அடடா...சூர்யா இன்னும் நடிப்புக் கலையில் தேறணும்னு சொல்லிக் கொண்டே என் நடிப்பு நாடகத்தைத் தொடர்ந்தேன்..

மறுநாள் அம்மா பள்ளிக்குக் கிளம்பும் வேளையில் மீண்டும் என் வலி பற்றி சொல்லி ஞாபகப் படுத்தினேன். அம்மா முதலில் என் வகுப்பாசிரியருக்கு போன் செய்தாள்.(.அப்பாடா லீவ் சொல்லப் போகிறாள். இனி ஜாலி என்று நினைத்தேன். )

என் பள்ளி ஆசிரியர்களுக்கு,,என் தோழிகளின் அம்மாக்களுக்கும்.தோழிகளுக்கும். தனது தோழிகளுக்கு என்று எனக்கு உடல்நலம் சரியில்லை என்ற செய்தி பரப்பப்பட்டது. கிட்டத்தட்ட அம்மா சிங்கப்பூர் வானொலிக்கு மட்டும் தான் சொல்லவில்லை. சரி எப்படியோ லீவ் கிடைச்சா சரி என்று பார்த்தால் அம்மா யூனிபார்ம் போடச் சொன்னாள்..நான் பள்ளிக்குப் போகிறேனாம்மா என்றேன் பரிதாபமாய்.இல்லை கொஞ்ச நேரம் தான் நான் வரும் வழியில் உன்னைக் கூட்டிவந்து  விடுகிறேன் என்றாள். சரினு நம்பி அவளோடு வண்டியில் ஏறினேன். வகுப்புக்குச் சென்றேன். முதல் பிரிவேளை வந்த தமிழ் அம்மா. ராகசூர்யா உனக்கு என்ன முடியலை..அம்மா.போன்.பண்ணாங்க என்று சொல்லிவிட்டு..என் பதில் எதிர்பார்க்காமல் அவங்க பாட்டுக்கு பாடம் நடத்துனாங்க..அடுத்த பிரிவேளை வந்த வேதியியல் ஆசிரியையும் சூர்யா உனக்கு முடியலையாமே உங்க அம்மா சொன்னாங்க என்று சொல்லிவிட்டு அதன் பின் மருந்துக்குக் கூட அதைப் பற்றி விசாரிக்காமல் பாடமே கண்ணாக நடத்திவிட்டு அவரும் சென்று விட..அடுத்து அடுத்து வந்த ஆசிரியர்கள் அனைவரும் ஏதோ பிள்ளையார் சுழி போட்டு தொடங்குவது போல உனக்கு முடியலையாமே என்று கேட்டுவிட்டு தங்களின் கடமைகளை ஆற்றினார்கள்.வகுப்புக்குள் வந்த ஆசிரியர் மட்டுமின்றி வகுப்பு வழியா போற ஆசிரியர்களும் ஏதோ மந்திரிச்சு விட்டா மாதிரி கேட்டுட்டு என்னிடமிருந்து பதில் வாங்காமலே சென்றார்கள். நேரம் தான் போனதே தவிர வரேனு சொன்ன அம்மா வரலை. 

இதற்குள் நந்தினி.பிறந்தநாள் என்பதால் அவள் அம்மா மற்ற குழந்தைகளுக்கு சாதாரண சாக்லேட்டும் எனக்கு மட்டும் டெய்ரி மில்க் சில்க் ம் கொடுத்துவிட அவள் பயந்து போய் உனக்கு வயிற்று வலியே..உடம்பு சரி இல்லையே..நீ சாப்பிடலாமா என்று கேட்டு வெறுப்பேற்றினாள்.நந்தினி அம்மாவும் என் அம்மாவும் ஒன்றாய் வேலை பார்த்தவர்கள் என்பதால் மதிய வேளையில் அவள் மாமாவிடம் ஐஸ்கிரீம் கொடுத்துவிடுவதாகவும் சொன்னார்களாம்.

மதியம் உணவு இடைவேளையின் போது அம்மாவின், தோழியின், தம்பியின், மனைவியின்,, அண்ணன் மகள் என்னை வந்து உனக்கு வயித்து வலியா?? உங்கம்மா போன் பண்ணாங்க என்று குசலம் விசாரித்து விட்டுப் போனாள். 

அடக்கடவுளே! இனி பாரதப் பிரதமரும், அமெரிக்க அதிபரும் தான் என்னை விசாரிக்கவில்லை. சே,,,,நான் இந்த நாடகம் நடிக்காமலேயே இருந்திருக்கலாம். இப்படி எல்லோரும் என்னை விசாரிக்க..விசாரிக்க,,,அம்மா மீது கோபம் கோபமாக வந்தது.. இன்று வீட்டுக்குப் போனதும் மிக பயங்கரமாக ..மிக மிக.பயங்கரமாக அம்மா மீது கோபப் பட வேண்டும் என்று அம்மா மீது சத்தியம் செய்து கொண்டேன்.

மதியம் வந்த ஒரு ஸ்ப்ஸ்டியூட் மிஸ் என்ன ராகசூர்யா உனக்கு முடியலையாமே...உனக்காக ரசம் சாதம் செய்து எடுத்து வரச் சொன்னேன்...சாப்டுறியா என்று கேட்டு என்னை கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றாள்.

இந்தக் கேள்விக் கணைகள் பத்தாது என்று இல்லாத வயிற்று வலியை இருப்பதாகக் காட்டிக் கொள்ள ஒரு அசாதாரண திறமை தேவைப் பட்டது. என்னால் மெயிண்டென் செய்ய முடியாது என்ற நிலையை நான் எட்டி விட்டேன்.

வருகைப் பதிவு 75% இருந்தால் போதும். நானோ 98% வைத்திருக்கிறேன். ஒரு நாள் லீவ் போட்டால் குறைந்தா போகும்..
ஆசிரியரான அம்மாவுக்கே லீவ் செயல்முறைகள் தெரியவில்லையோ என்று நொந்து கொண்டேன்.

பள்ளியை விட்டுக் கிளம்பும் போது வாசலில் நின்ற வாட்ச் மேன் உனக்கு உடம்பு சரியில்லையா பாப்பா என்றாள். கரிசனத்தோடு...பள்ளியைக் கூட்டும் ஆயா..கூட்டுவதை நிப்பாட்டி நிமிர்ந்து உனக்கு உடம்பு சரி இல்லையா என்றாள். மாலை நான் வரும் வேன் டிரைவர் என்னோடு வரும் வேறு வகுப்பு தோழிகள் எல்லோரும் கேட்டார்கள்..

கோபத்தோடு கதவைத் திறந்தால் வீடெல்லாம் நெய் மணம்..மற்றும் எனக்கு புரிபடாத பற்பல மணங்கள்... பையை கீழே வைத்து விட்டு அடுப்படிக்குப் போனால் ஒரு கிண்ணம் நிறைய பால் பாயாசம். பக்கத்தில் வடை..ஒரு வாளியில் முறுக்கு...வந்த கோபம் எல்லாம் டஸ்ஸ்...புஸ்ஸ்...

அம்மாவுக்கு அன்று தலைமை ஆசிரியர் கூட்டமாம். மதியமே வீடு வந்து விட்டாளாம். எப்போதும் தலைமை ஆசிரியர் கூட்டமென்றால் காலை பள்ளியும் சென்று.. மதியம் கூட்டமும் போய்விட்டு வந்தால் அம்மா சாதாரணமாக பால் சாதம்.துவையல் அப்பளம் இதோடு முடித்துக் கொள்வாள்.களைப்பாகத் தென்படுவாள்..ஆனால் அன்று காலை கூட்டம் என்பதால் இரண்டு மணிக்கே வந்துவிட்டதால் இதை எல்லாம் செய்ய முடிந்ததாம்.

ஹைய்யயே...கோபமாவது ஒண்ணாவது..

வழக்கமாக 4 வடைகள் மட்டுமே தரும் அம்மா அன்று ஆறு வடைகள் தந்தாள். 10 முறுக்கு தந்தாள்.. 

உங்களுக்குத் தெரியுமா? அம்மா ரொம்ப பாவம்..ரொம்ப நல்லவள்...

பின்குறிப்பு....இதனால் சகலமானவர்களுக்கும் நான் அறிவிப்பது என்னவென்றால்(1) தயவு செய்து டீச்சர் பெண்ணை திருமணம் செய்யாதீர்கள். ( அவர்கள் தங்கள் குழந்தைகளை லீவ் எடுக்க அனுமதிப்பது இல்லை)

அதோடு உங்கள் குழந்தை படிக்கும் பள்ளியின் ஆயாவிலிருந்து பிரின்சிபல் வரை அனைவரும் தெரிந்தவர்களாய் இருப்பார்கள். அது அதைவிடத் தொல்லை.
ஒரு வேளை என் பேச்சை மீறி திருமணம் செய்யத் துணிந்தால் உங்களுக்குப்பிறக்கும் குழந்தைகள் லீவ் எடுக்க அனுமதி உண்டா என்று கேட்டு முதலிலேயே ஒப்புதலும் பெற்று.ஒப்பந்தமும் போட்டுக் கொள்ளுங்கள்.

ஏனென்றால் மாணவர்களைப் பார்த்து..பார்த்து யார் பொய் லீவ் போடுகிறார்கள் என்பதை அறிந்து கொண்டு விடுகிறார்கள்..உளவியலாளர்கள் போல....

இந்த அவஸ்தை உங்களுக்கும் நேரலாம்...

என்ன நான் சொல்றது?

மற்றொரு பின் குறிப்பு. மறுநாள் வகுப்பாசிரியர் என் வகுப்பு வந்ததும் என்ன சூர்யா சரியாகிட்டியா என்று சாதாரணமாகக் கேட்டிருந்தாலும் குத்தலாகக் கேட்டதாகவே இன்று வரை உணர்கிறேன்

Wednesday, 31 May 2017

அம்மா கிளம்புகிறாள்...

அம்மா கிளம்புகிறாள்...

அம்மாவுக்கும் எங்களுக்குமான ஒட்டுதல் எல்லா பிள்ளைகளும் அம்மாவும் போல் இல்லை..சுவாதி சற்றே வித்தியாசமானவள்...

தனக்கு துன்பம்.வரும் போதெல்லாம் பாரதியார் கவிதைகளை எடுத்துப் படிப்பாள்.அது தான் அம்மாவின் பைபிள்.அல்லது கீதை அல்லது குரான்..

அம்மா எங்களது சிறு பிராயத்தில் பல கதை புத்தகங்கள் நூலகத்திலிருந்து எடுத்து வருவாள்..சனி ஞாயிறு என்றால் எல்லோரும் தூங்குவார்கள்.ஆனால் அம்மா அன்று தான் நான்கு மணிக்கு எழுந்து..துவைத்து..சமைத்து காலை 7 மணிக்கெல்லாம் எங்களையும் தயார் படுத்தி விடுவாள்.எதற்கு? படிக்க...அதுவும் கதை புத்தகங்கள்...அந்த அறியாத பருவத்திலேயே...இது கைக்கிளைக்காதல் கதை...பெருந்திணைக் காதல் என்பாள்..

தமிழின் நுணுக்கங்கள் எங்களுக்கு வந்தெல்லாம் மிக இயல்பில்...

பாரதியார் பாடல்கள்..சுஜாதா..எஸ் ராமகிருஷ்ணன்.பா.ராகவன்..வாஸந்தி..ஆண்டாள்.பிரிய தர்ஷினி..ஜெயகாந்தன்.முகில்..பட்டுக்கோட்டை பிரபாகர்.இந்திரா பார்த்தசாரதி..தேவன்.சுபா..புதுமைபித்தன்..ராஜம்கிருஷ்ணன்..விந்தன்..நாஞ்சில் நாடன்..வண்ணதாசன்..பிரபஞ்சன்..அனுராதா ரமணன்..கி ராஜநாராயணன்.கல்கி கிருஷ்ண மூர்த்தி..ரா.கி.ரங்கராஜன்..லா.சா ராமாமிர்தம்..சிவசங்கரி..ரமணிச்சந்திரன்..என்று பற்பல கட்டுரைகள்..கவிதைகள்..கதைகள்
என்று எல்லா வடிவங்களையும் எடுத்து வந்து படித்துக் காண்பிப்பாள்..பசி எடுத்தால் சாப்பிட்டு மீண்டும் படிப்போம்..மூன்றாம் வகுப்பு அல்லது அதற்க்கு சற்றே முந்தையகாலத்தில் இருந்தே நானே நூலகத்தில் புத்தகங்களை தேர்வு செய்து படிக்க ஆரம்பித்து விட்டோம்...பள்ளிப்பாடங்களை விட இந்த சனிக்கிழமை ஞாயிற்றுக் கிழமைக்காகக்.காத்திருக்க ஆரம்பித்தோம்...

நீங்கள் சுவாதியைப் போல் அம்மாவை எங்கும் காண இயலாது..

எங்கள் இருவரையும் சைக்கிளில் வைத்துக் கூட்டி வருவாள்..வண்டியில் வைத்துக் கூட்டி வருவாள்...பள்ளி நேரம்.போக கடைகளில் கணக்கு எழுதினாள்..பணக்கார வீடுகளுக்குச் சென்று டியூஷன் எடுத்தாள்..இப்படியாக பல அவதாரங்கள் அம்மாவுக்கு...எங்களையும் கவனித்துக் கொண்டு இரண்டு பேருந்துகள் மாறி பள்ளி சென்று..தனது இலக்கியப்பணிகளையும்.கவனித்துக் கொண்டு அம்மா எப்போதும் சிரமப்பட்டாள்..ஆனால் எப்போதும் புன்னகையுடன் தான் இருப்பாள்..அம்மா யார் என்ன சொன்ன போதும் எது நடந்தாலும் சோர்வு கொள்ள மாட்டாள்...

ஆரம்பம் முதலே அப்பா எங்களோடு இல்லை..அப்பாவின் குரல் எப்போதேனும் தொலைபேசி வழியாக கேட்கும்..

ஆனால் அம்மா எங்கள் இருவருக்கும் பீஸ் கட்ட..வீட்டு வாடகை கொடுக்க..மளிகை வாங்க..என்று எல்லா செலவுகளுக்காகவும் திண்டாடுவாள்
அப்போதும் அவள் முகம் சிரித்த வண்நம் தான் இருக்கும்.நான் எந்தப்பள்ளியில் படித்தாலும் அம்மாவின் தோழிகளாக..தோழர்களாக அந்த ஆசிரியர்கள்..பள்ளி முதல்வர்கள் இருப்பார்கள்..அம்மாவின் பழகும் விதத்திற்கு.எங்கும் அன்பு மயம் தான்.அம்மாவை நேசிக்காதோர் யாருமில்லை..எதுவும் தெரியாத இந்த சென்னையில் சக்தியின் கல்லூரி வாகனம் ஓட்டுபவரிலிருந்து..வகுப்பு நடத்தும்.பேராசிரியர்கள் வரை எல்லோரும் அம்மாவின் நட்புகள் தான்.

இதுவரை நான்.படித்த பள்ளிகளில் எல்லாம் என்னுடன்.படிப்போர்கள் அம்மாவைப் பார்த்து பொறாமைப்.படுவார்கள்..உங்கம்மா எப்படி டீ இப்படி பேசுறாங்க..ரொம்ப அழகாவும் இருக்காங்க..என்பார்கள்..எனக்கும் சக்திக்கும் எப்போதும் பெருமை பூரிக்கும்..

அம்மா எப்போதேனும் கோபப்பட்டால்..ஹைய்யே சுவாதி இந்த ரோல் உன் முகத்துக்கு நல்லா இல்லை..நீ காமெடி பீஸ்..உனக்கேன் சீரியஸ் முகம் என்றால் அம்மா சிரித்து விடுவாள்..

எங்களுக்கென பயத்தமாவு அரைப்பாள்..( இதுவரை நாங்கள் குளியலுக்கு சோப்பு உபயோகித்ததில்லை) தலைக்கு சீயக்காய் அரைக்க அலைவாள்.உடல் நலமில்லை எனில் முதலில் கஷாயங்கள்.பிறகு தான் வைத்தியம்.அதுவும் ஹோமியோ முறைகள்..

இங்கும் சம்பளம் வராத இந்த ஆறு மாதத்தில் உதவி இயக்குநர் என்ற பெயரில் சாதாரண வேலைகள் செய்தாள்..

முதல் நாள் இரவு 8 மணிக்கு புதுகையில் கிளம்பினால் தான் சென்னையில் எங்கள் இருப்பிடத்திற்கு காலை ஆறு மணிக்கேனும் வர இயலும் விடிய விடிய பேருந்தில் அரை குறையாக உட்கார்ந்தே தூங்கி..இங்கே வந்ததும் தான் புதுகையில் இருந்தே வாங்கி வந்த காய்களை வைத்து சமைக்க ஆரம்பித்து விடுவாள்..சமைச்சுட்டு ரெஸ்ட் எடுக்கிறேன் என்பாள் ஆனால் அதன் பின் கையால் துவைக்கும் துணிகளைப் பிரித்து துவைக்க அமர்ந்து விடுவாள்..சனி.ஞாயிறு இரு தினங்கள் மட்டுமே இருக்கும் பொழுதுகளில். இட்லி பொடி அரைத்து..வத்தல் குழம்பு பேஸ்ட் செய்து.கடை வீதிக்குப் போய்.காய்.பழம் மற்ற பொருட்களை வாங்கிப்வைக்கும் முன் ஞாயிறு மதியம் ஆகிவிடும்..ஆனாலும் அம்மா சலிக்காமல் செய்வாள்..

பிஸினஸ் ஆரம்பிக்க என்று தன்னிடம் இருந்த பணத்தை எல்லாம் அப்பாவிடம் கொடுத்து அந்தப் பணம் ஒன்று கூட திரும்பி வராத போதும் அம்மா அதே போலத்தான் இருந்தாள்

.அம்மாவிற்கு என்று பிரத்தியேக ஆசைகள் ஏதுமில்லை.எங்கள் இருவரையும் படிக்க வைப்பது தவிர..

அம்மாவிற்கு இரண்டு முறைகள் அறுவை சிகிச்சை நடந்த போதும் மூன்றாம் நாளிலிருந்தே அம்மா தான் சமைத்தாள்..அவள் அம்மாவும் அப்பாவும் அம்மாவிடம் கோவித்துகொண்டு போன போதும் அம்மா அன்பானவளாக.அயராதவளாகவே இருந்தாள்..

அவள் நொறுங்கி கவலையுற்று இருந்த காலமெனில் அம்மா இப்போது ஆறு மாதமாக ஊதியம் வழங்கப்படாத நாட்கள் தான்.சற்றே சோர்ந்து போனாள்.அவளுக்கென யாரும் பண உதவிக்கு என்று இல்லாத நிலையில் தடுமாறிப் போனாள்..எனக்கும் சேர்த்து இந்த வருடம் கல்லூரிக்குக் கட்ட வேண்டும் என்ற நினைவே அம்மாவிற்கு பல உடல் உபாதைகளைத் தந்துவிட்டது.தாங்க முடியாத இடுப்பு வலியாலும் கால் வலியாலும் தவித்தாள்..ஆனாலும் அவளே சமைத்தாள்.துவைத்தாள்
படுத்துக் கொண்டாள்..

இங்கே கிண்டி.வடபழனி.கோயம்பேடு.வளசரவாக்கம்.விருகம் பாக்கம்.ஆழ்வார் திருநகர்.இந்தப்பக்கம் தரமணி.மேடவாக்கம்.ஓ.எம்.ஆர் என்று எல்லா இடங்களுக்கும் கூட்டிப் போனாள் வண்டியிலேயே.வேளச்சேரி நூலகம்.அண்ணா நூற்றாண்டு நூலகம் கூட்டிப் போனாள்.கறிவேப்பிலையிலிருந்து அரிசி.ஆடை அல்லது வேறு பொருட்கள் வரை வாங்குவது அம்மா தான்..

அம்மாவின் அக்கறையும் அன்பும் உழைப்பும் பிரத்தியேகமானது.

அழகிய தயிர் சாதத்தில் தன் கையில் எடுத்து கட்டைவிரலால் கீறி அதில் வத்தல் குழம்பை ஊற்றி ஒரு வாயும் துவையல் வைத்து ஒரு வாயும் கூட்டு வைத்து ஒரு வாயும் தரும் போது ஒரு ஊரை எழுதி வைக்கலாம்.

அம்மா ஸ்பெஷல்= பூரி கிழங்கு..சாம்பார்..பருப்பு வடை.  பருப்பு உருண்டை குழம்பு வைப்பதில் எக்ஸ்பர்ட்...சமீப காலத்தில் பனீர் பட்டர் மசாலா

அம்மா ஒரு போதும் தலையில் பூ வைத்துப் பார்த்ததில்லை..ஆனால் கையில், பையில் புத்தகம் இல்லாமல் பார்த்ததே இல்லை..

அம்மா சொல்கிறாள் நாங்கள் இருவரும் அம்மாவுக்கு தேவதைகளாம்..ஆனால் அம்மா தான் எங்கள் தேவதை

நான் வேறு ,,அம்மா எனக்கு நான்கே ஆடைகள் தான் இருக்கிறது..காலேஜ் சேர்த்தால் டிரஸ் வேணுமில்ல என்று சொன்னதிலிருந்து அம்மாவின் மன அழுத்தம்.அதிகமாகிப் போனது. 

கல்லூரியில் இப்போதே 30000 கட்ட சொன்னார்கள்.இப்போதைக்கு எங்கள் ராதா அங்கிளிடம் வாங்கி( இவரைப் பற்றி தனியாக ஒரு கட்டுரை எழுத நினைத்துள்ளேன்) கட்டியாகிவிட்டது..ஆனால் மீதி தொகை எப்படிக் கட்டுவது என அம்மாவுக்குக் குழப்பம் தீரவில்லை.

பல்கலைக்கழக கட்டணம் மட்டும் கேட்கும் சில கல்லூரிகளில் நான் நினைப்பது போல் லேப் இல்லை.பிளேஸ்மெண்ட் இல்லை..அதனால் தான் இக்கல்லூரி தேர்ந்தெடுத்தேன்..அம்மாவைப் பார்க்க பாவமாக இருக்கிறது.ஆனால் அம்மா இதையும் சமாளித்து மீண்டு வருவாள்..

தனக்கென எழுதும் ஆற்றல் பேசும் ஆற்றல் இருந்தும் தன்னை...தன் திறமைகளை வளர்ப்பது பற்றி எண்ணாமால்   எங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் அம்மா  ..குக்கரில் தனக்கென மேல் டப்பாவில் ரேஷன் அரிசியையும் கீழ் டப்பாவில் பொன்னி அரிசியையும் வைக்கும் அம்மா..இன்று ஊருக்குக் கிளம்புகிறாள்..



இப்போ
இனி நாளை முதல் நானே தலை பின்னிக் கொள்ள வேண்டும்.நானே சமைத்துக் கொள்ள வேண்டும்..

அம்மா போன் செய்யும் போது ம்ம்ம்ம்ம் சாப்பிட்டேனே..பால் வாங்கி காப்பி போட்டுக் குடிச்சிட்டேனே..என்று பொய் சொல்ல வேண்டும்..
வெறும் சோற்றின் முன் அமர்ந்து பருப்பு தாளிச்சேன்..உருளைக்கிழங்கு வறுத்தேன்.வெண்டைக்காய் செய்தேன் என்றும் பொய் சொல்ல வேண்டும்..

ஒரு வேளை நாளைய இந்த உலகத்தில் நான் ஏதேனும் சாதித்தால் அதன் பெருமை அத்தனையும் அம்மாவை மட்டுமே சாரும்..ஒருவேளை இல்லை எனில் அம்மாவிடமிருந்து நாங்கள் முறையாகக் கற்கவில்லை என்றே அர்த்தம் கொள்ளலாம்.

ஆனால் சாதிப்போம்..

எப்போதேனும் அம்மாவை காலையில் நிதானமாக எழுந்திரிக்க வைக்க வேண்டும்.அவளுக்கான உணவுகளோடு அவளுக்கான புத்தகங்களையும் கொடுத்து அமைதியாக வாழ வைக்க வேண்டும்..இந்த ஓய்வற்ற உழைப்பில் இருந்து அவள் தப்ப வேண்டும்..அது தான் எனக்கும் சக்திக்குமான ஆசை..

என்னிடம் இருக்கும் இந்த குழந்தைமையை யாரேனும் வாங்கிக் கொண்டால் தேவலை..அது தான் இப்படி அம்மாவோடு இருக்க அடம் பிடிக்கிறது..தேம்பித் தேம்பித் தேம்பி இப்படி எழுத வைக்கிறது..மாடிக்குப் போய் அம்மாவின் உருவம் மறையும் வரை அழுகையை துடைத்து துடைத்து விட்டு பார்க்க வைக்கிறது..